• தீபம் - ஆன்மீகம்

சாகரம் - சிலிர்க்க வைக்கும் சக்தி சித்தர்கள்: 3 - அன்னை மாயம்மா


அமிர்தம் சூர்யா

பாரதி தமது உரைநடை ஒன்றில், `காற்று ஒரு நார். இந்த உலகத்து உயிர்கள் எல்லாம் பூக்கள். எல்லா பூக்களிலும் காற்று நுழைந்து உயிர்களைப் பூக்களைப்போல் கோர்த்து, இந்தப் பிரபஞ்சத்தின் மீது ஒரு மாலையாகப் போட்டு இருக்கிறது’ என்கிறான். என்னவொரு கற்பனை; என்னவொரு எழுத்து! பாரதி எழுதிய காற்றின் சமத்துவத்தைச் செயலாக்குபவர்கள் சித்தர்கள்.

சித்தர்களுக்கு தங்கள் உடலே ஒரு கருவி. அதை மக்களின் நன்மைக்குப் பயன்படுத்துவார்கள். அவர்கள் நம்மைப் போல் அல்ல; உடல், மனம், சுவை, பயம், வலி, ஆசை, இலக்கு இவற்றைக் கடந்தவர்கள். அவர்களில் பலர் மௌனத்தையே தங்களின் மொழியாக மாற்றிக் கொண்டவர்கள். அதன் மூலம் இந்தப் பிரபஞ்சத்துடன் உரையாடியவர்கள். பாரதி சொன்னது போல், அவர்களுக்கு மனிதனும் ஒன்று; நாயும் ஒன்று. எல்லாமே பிரபஞ்சத்தின் ஒரு பகுதி என்ற பேருண்மையை உணர்ந்தவர்கள்.

அப்படி உணர்ந்தவர்களில் ஒருவர்தான் அன்னை மாயம்மா.

நவீன இலக்கிய உலகம் கொண்டாடும், ’தரும சிவராமு’ என்ற பிரேமிள் மறுபடி மறுபடி கன்னியாகுமரி சென்று மாயம்மாவை தரிசிப்பதை வழக்கமாய்க் கொண்டிருந்தார் என்று எழுதியுள்ளார் எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன். இதுபோல் பல எழுத்தாளர்கள் மாயம்மாவைத் தேடி வந்துள்ளனர்.

இசைஞானி இளையராஜா தான் ஒரு பத்திரிகையில் பெண் சித்தர் அன்னை மாயம்மாவைப் பற்றிப் பேசி, அவரை மக்கள் தேடும்படி செய்தவர் எனலாம். தற்போது வாழ்ந்துவரும் மாதா அமிர்தானந்தமயி, ஜக்கி வாசுதேவ், இசையமைப்பாளர் இளையராஜா போன்றோர் மாயம்மாவை தரிசித்து ஆசி பெற்று உள்ளனர். 1987ல் இசையமைப்பாளர் இளையராஜா அன்னை மாயம்மாவிடம் வைத்த வேண்டுகோளை ஏற்று அவரது வீட்டுக்கு சில மணி நேரம் வந்து போனதாகவும் சொல்லப்படுகிறது.

சரி... யார் அந்த மாயம்மா என்ற கேள்வியை அடைகாத்தால் பொரிக்கும் பதில்கள் இரண்டு.

1. அவர் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள காமாக்யா ஆலயத்தில் இருந்து, தேவி காமாக்யா எனும் பராசக்தியாக வெளிவந்தவர் என்கிறார்கள்.

2. குமரி அன்னையின் நிகழ்கால நடமாடும் பிம்பம் மாயம்மா என்போரும் உண்டு.

எல்லாம் நம்பிக்கைதான். ’இது மூடநம்பிக்கை அல்லவா?’ என்போருக்கு இளையராஜா சொன்னதையே பதிலாகத் தரலாம். நம்பிக்கையே ஒரு மூடம். இதில் தனியாக என்ன மூடநம்பிக்கை.

சரி... மாயம்மா எப்பொழுது அஸ்ஸாமில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்து சேர்ந்தார்? எவருக்கும் தெரியவில்லை. மாயம்மாவின் பெற்றோர்கள் குறித்த தகவலும் இல்லை.

மாயம்மா என்ற பெயர் யார் வைத்தது? அதுதான் அவரது பெயரா?

பல சித்தர்களுக்கு அவர்களின் சொந்த பெயர் கூட தெரியாது. மறந்து விடுவார்களா? அல்லது மறைத்து விடுவார்களா? அல்லது ’தானே சிவம் என உணர்ந்த பின் தனக்கென தனிப்பெயர் எதற்கு?’ என்ற தத்துவமா? தெரியாது.

அன்னை மாயம்மா 1920களில்தான் கன்னியாகுமரி கடற்கரையில் தென்பட்டு இருக்கிறார். பல நேரங்களில் அவர் கடற்கரையின் ஓரத்தில் உள்ள கடல் பாறைகளின் மீது அமர்ந்து கொண்டு இருப்பாராம். திடீரென, கடலுக்குள் மூழ்கி கடல் பாசிகளையும் குப்பைகளையும் வெளியில் எடுத்து வந்து அவற்றைக் கடற்கரையில் கொட்டி, வெறுங்கையால் தீ மூட்டி விடுவதையும் மக்கள் பார்த்து உள்ளார்களாம். எப்படி அவரால் வெறும் கையினால் தீ மூட்ட முடிந்தது என்பதோ, எதற்காகத் தீ மூட்டினார் என்பதோ யாருக்கும் புரியாமல் இருந்துள்ளது. பெரும்பாலும் கடல் வாசம் தான்.

கடலுக்குள் சுமார் 35 அல்லது 40 கிலோ மீட்டர் வரை சென்று குமரி மீனவர்கள் மீன் பிடிக்க வந்திருக்கும் படகுகளின் நடுவே இவர் நீச்சல் அடித்துக்கொண்டு இருப்பாராம். கொந்தளிக்கும் கடலில் ஒரு பெண்ணைப் பார்த்தால், ’அவள் உயிருக்குப் போராடுகிறாளா? அல்லது தற்கொலைக்கு முயல்கிறாளா? அல்லது மனநலம் பாதித்தவளா?’ என்று எண்ணத் தோன்றும்?

நீந்திக்கொண்டு இருக்கும் மாயம்மாவை பார்த்து பரிதவிக்கும் மீனவர்கள், தங்கள் படகில் ஏறிக்கொண்டு கரைக்கு வருமாறு கெஞ்சிக் கூப்பிட்டாலும் மாயம்மா அதில் ஏறிக்கொள்ள மாட்டாராம். மீன் பிடித்த பின் படகுகள் கரைக்குத் திரும்பும்போது அவர்களுடன் நீந்தியபடியே வருவாராம். திடீரென கடலில் காணாமல் போய்விடுவாராம். ’அவர் கடலில் மூழ்கி காணாமல் போய்விட்டாரோ?’ என பயந்தபடி மீனவர்கள் கரைக்குத் திரும்பினால், அவர் அங்குக் கரையில் சிரித்தபடி அமர்ந்து இருப்பாராம். இப்படி, திடீர் திடீரென மாயமாகி விடுவதால்தான், அவருக்கு ‘மாயம்மா’ என்று மக்கள் பெயர் சூட்டியிருக்கிறார்கள். அப்போது வரை மாயம்மாவை ஒரு மனநலம் பாதித்தவராகத்தான் மக்கள் நம்பியிருக்கிறார்கள். காரணம், அவரின் தோற்றம் அப்படி.

மாயம்மாவின் புறத் தோற்றம்...

வாராத பரட்டைத் தலை, கிழிந்த ஆடை, உடலெல்லாம் கிழவியின் சுருக்கம், வித்தியாசமான அந்நியத்தனமான முகம், ஒரு பைத்தியக்காரியின் பாவனை. கொளுத்தும் வெயிலிலும் கடல் மணலில் சிவனென நடப்பது, மழையில் அப்படியே கிடப்பது, பெரும்பாலும் கடற்கரை ஓரம் இருக்கும் மலைக்குன்றுகளில் அமர்ந்து கடலைப் பார்த்தபடி இருப்பது, பசி என்ற உணர்வே இல்லாமல் கிடப்பது. இதுதான் மாயம்மாவின் புறத்தோற்றம்.

அவரின் அகத்தோற்றம் வெளிப்பட்டது 1925ல்தான்.

கன்னியாகுமரி கடற்கரையோரம் நுழைந்த ஒரு சுற்றுலா பேருந்து சற்று நேரத்தில் ‘கிரீச்’ என்றொரு சத்தமிட்டது. கூடவே ஒரு நாயின் அடிப்பட்ட உயிர் வலியுடன்கூடிய அலறலும் கேட்டது. அந்த நாய் மரணத் தருவாயில் மூச்சை இழுத்தபடி கிடக்க, எல்லோரும் மூக்கை மூடியபடி சுற்றி நின்று வேடிக்கை பார்க்க, கூட்டத்தை நீக்கிக்கொண்டு மாயம்மா உள்ளே வருகிறார். அடிபட்டு கிடந்த அந்த நாயைக் கண்டு, அந்தத் தாய் துடித்துப் போகிறார். தாய்மைக்கு நாயும் ஒன்றுதான்; மனுஷனும் ஒன்று தானே. உடனே அந்த நாயைத் தூக்கி தனது மடியில் கிடத்திப, பிதுங்கி வெளியே வந்த குடலை தமது கையால் நாயின் வயிற்றுக்குள் திணித்து, கிழிந்த வயிற்றுப் பகுதியை சேர்த்துப் பிடித்து, தரையில் கிடந்த மண்ணை எடுத்து அடிப்பட்ட இடத்தில் அப்பினார்.

அதன்பின் அந்த நாயின் தலையைத் தடவி ஆசுவாசப்படுத்த, சற்று நேரத்தில் கிழிந்த தோல் ஒட்டிக்கொண்டது. காயத்தின் சுவடு சிறிதும் இல்லாத அந்த நாய் எழுந்து ஓடத் தொடங்கியது மக்கள் மாயம்மாவின் பின்னால் கூடத் தொடங்கினர். ’இந்தப் பெண் மனநலம் பாதித்தவள் அல்ல; சிவனுக்கு ஆதாரமான சக்தி நலம் பீடித்தவள்’ என உணரத் தொடங்கிய போது, அவர் அன்னை மாயம்மா ஆகிறார். உண்மையில் மகா உன்னதமான நிபந்தனையற்ற தாய் அன்பு, கடவுளாக இல்லாமல், வேறு என்னவாக இருக்க முடியும்? அதன்பின் அந்த நாய் மாயம்மாவின் பின்னால் சுற்ற ஆரம்பித்தது பக்தர்களைப் போல். இன்ன பிற நாய்களும் மாயம்மா கூடவே உலவத் தொடங்கின.

மாயம்மா பசிக்கு யாரிடமும் எதுவும் கேட்டது கிடையாது. அவருக்கு உணவளிக்க போட்டி போட்டுக்கொண்டு மக்கள் காத்திருக்கத் தொடங்கினர். அவர்களில் யாராவது ஒருவரிடம் மட்டும் உணவை வாங்கி, தான் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு, நாய்களுக்கும் கொஞ்சம் ஊட்டி விடுவாராம். சில நேரம் கடைத்தெருவில் உள்ள ஏதாவது ஒரு ஹோட்டல் கடையில் நுழைந்து அங்குள்ள உணவுப் பொருளை அவரே எடுத்துச் சாப்பிட்டுவிட்டு நாய்க்கும், சில நேரம் எதிர்ப்படும் ஜனங்களுக்கும் ஊட்டி விடுவாராம். ஓட்டல்காரர் குஷியில் இருப்பாராம். ஏனெனில், அதற்குப் பின் அந்தக் கடையில் வியாபாரம் பெருகி, அவர் தனவந்தன் ஆகிவிடுவாராம். மக்களும் அந்த செல்வாக்குக்காகத்தான் தம் கையில் உணவோடு காத்திருப்பர்.

’சின்ன மீனைப் போட்டு பெரிய மீன் பிடிக்கும் தந்திரமல்லாது, இது என்ன பக்தியா?’ என்ற குதர்க்கக் கேள்வி எழலாம். .அது அப்படி அல்ல; .கொஞ்சம் நேர்மறையாகப் பார்த்தால் இந்த பூமிக்கு வந்ததே வாழத்தானே. அனுப்பியது கடவுள்தானே. அவர் கொடுத்த வாழ்வை இன்னும் வளமானதாக அமைத்துக்கொள்ளப் போராடுவது, அனுப்பிய கடவுளுக்கு பெருமை சேர்ப்பதுதான். அதற்குக் கடவுளின் பிரதிநிதியைக் கேட்காமல் வேறு யாரிடம் கேட்பது? கேட்பது நம் உரிமை அல்ல; கொடுப்பது தாயின் கடமை அல்லவா?! நான் இப்படித்தான் பார்க்கிறேன்.

எப்போதும் நாய்கள் புடைசூழ இருப்பாராம் மாயம்மா. கிட்டத்தட்ட காவல்படை போல். அவை, யாரும் மாயம்மாவை நெருங்காதவாறு பார்த்துக் கொள்ளுமாம்.

திருவொற்றியூரில் ஜீவசமாதி ஆகியிருக்கும் பைரவ சித்தர் போலவே மாயம்மாவுக்கும் நாய்களுடன் தொடர்பு. மாயம்மாவின் ஜீவசமாதியில் பூஜை செய்து அவர் பெயரை கூட்டாக எல்லோரும் ஓங்கி ஒலிக்கும்போது, சமாதி அருகேயே இருக்கும் ஒரு நாயும் அவர்களுடன் சேர்ந்து பாடுவது போல், பூசை முடியும் வரை சப்தமிடும் வீடியோ ஒன்றை பார்த்து நானும் வியந்தேன்.

தொழிலாளி ஒருவரின் கடும் வயிற்று வலியை தனது கையிலுள்ள ஒரு கவளம் எச்சில் சோற்றை ஊட்டி, அடுத்த நிமிடமே அவரது வயிற்று வலியை தீர்த்து வைத்தார்.

’அடுத்த வாரம் இறந்து விடுவோம்’ என்ற மரண பயத்தில் தன்னிடம் வந்த ஒருவரின் தொடையில் கம்பியால் குத்தி, ’இனி, பயம் வேண்டாம். போ...’ என்று கூறி அவரது மரண பயத்தைப் போக்கி வைத்தார் மாயம்மா. கம்பி குத்திய அடையாளமே அவரது தொடையில் இல்லையாம்.

அதற்குப்பின் அன்னை மாயம்மாவின் ஆன்மிக லீலை சம்பவங்கள், அமானுஷ்ய உரையாடல்கள், நம்ப முடியாத அதிசயக் காட்சிகள் பலவும் நடந்திருக்கின்றன.

கன்னியாகுமரியில் இருந்த அன்னை மாயம்மாவை முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, முன்னாள் ஜனாதிபதி ஜெயில்சிங், வி.வி.கிரி, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், வெவ்வேறு மாநில அமைச்சர்கள் என பலரும் நேரில் சந்தித்து ஆசி பெற்றுச் சென்றனர். இந்தத் தகவல்களை அறிந்து, சேலத்திலும் மாயம்மாவை தரிசித்து, அவரிடம் ஆசி பெற தினமும் மக்கள் வரத் தொடங்கினர்.

மாயம்மாவின் பிரதான சீடர் ராஜேந்திரன். அவருக்கு மனைவி, மூன்று குழந்தைகள் உண்டு. அவர் மாயம்மாவை தனது சொந்த தாயைப் போலவே கூட இருந்து. கடைசி வரை பார்த்துக்கொண்டார். மாயம்மா, தான் ஜீவசமாதி அடைய வேண்டும் என்ற எண்ணத்தை 1986ஆம் ஆண்டிலேயே ராஜேந்திரனிடம் எடுத்துக் கூறியதோடு, எங்கு தனது ஜீவசமாதி அமைய வேண்டும் என்று அந்த இடத்தையும் கூறினாராம். எனவேதான், அந்த இடம் இருந்த சேலத்திற்கு ராஜேந்திரன் மாயம்மாவை அழைத்து வந்தார்.

அன்னை மாயம்மா கூறி இருந்த இடமோ, வெட்டவெளி.... பொட்டல் காடு. ஆனாலும், மாயம்மா கூறியதாலேயே அவர் குறிப்பிட்ட இடத்தின் மரத்தடியில் ஒரு குடிசைப் போட்டுத் தங்கினார்கள். பலருக்கும் மாயம்மா சேலத்திற்கு வந்து தங்கியிருப்பது பிடிக்கவில்லை. மேலும், ’வருடா வருடம் தவறாமல் பெய்யும் மழை, மாயம்மா வந்த ஆண்டில் ஒரு சொட்டு கூட பெய்யவில்லை’ என்ற விமர்சனம் வேறு. அது தவிர, ’இவர் கடவுளைக் கண்டவர் எனில் மழை பொய்த்துப்போனது ஏன்?’ என்ற பேச்சும் வந்தது.

இதைக் கேட்ட, ராஜேந்திரன் அன்னை மாயம்மாவிடம் கூறி வருந்தினாராம். அதைக்கேட்டு மாயம்மா ஒன்றுமே கூறவில்லை. அன்று இரவு சேலத்தின் ஏரி, குளம் என அனைத்தும் நிரம்பும்படி பலத்த மழை பொழிந்தது. அடுத்த ஆண்டுக்கு வரை தேவையான தண்ணீர் நிரம்ப, மாயம்மாவைக குறை கூறியவர்கள், மனம் வருந்தி அவரிடம் மன்னிப்பு கோரினார்களாம்.

அவ்விதமாக, சேலத்திலும் அற்புதங்கள் செய்த மாயம்மா, தனது சீடர் ராஜேந்திரன் குடும்பத்தாரோடு ஏற்காடு மலை அடிவாரத்திலேயே ஆறு ஆண்டு காலம் வரை வாழ்ந்தார். அதன் பின்னர் பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி, 1992ஆம் ஆண்டு சேலத்திலிருந்து ஏற்காடு மலைக்குச் செல்லும் வழியில் சின்னக்கொல்லப்பட்டியில், மாடர்ன் திரையரங்கு அருகே ஜீவ சமாதி அடைந்தார்.

சக்தியின் வடிவமான பெண் சித்தர் அன்னை மாயம்மாவை நீங்களும் ஒருமுறை சென்று தரிசியுங்களேன்.

(தரிசனம் தொடரும்)

Comments

சேகர் நாகரத்தினம் says :

அஸ்ஸாம் மாநிலம் காமக்கியா அம்மனுக்கு மாதவிடாய் வருவதாக நம்பப்படுகிறது. நான் அங்கு இருந்ததால் தெரியும். Amirtham surya second to none. Keep it up!

Kalaiselvy srinivas says :

மாயம்மா வரலாற்றை ரத்தின சுருக்கமாக அதே நேரம் வீரியம் குறையாமல் அழகான நடையில். காட்சிப்படுத்தி விட்டீர்கள். கேள்வியை அடைகாத்து பொரித்தால் கிடைக்கும் பதில் வெறும் வித்தியாச சொல்லாடல் மட்டுமல்ல அவரின் அனைத்துயரின் தாய்மை உணர்வின் அடைகாத்தலையும் சொல்லாமல் சொல்கிறீர்களோ?? மிக அருமை ..

ரமணி ரமா says :

அற்புதம்.. மாயம்மா சித்தர் பற்றி பெயர் மட்டும் கேள்விபட்டிருக்கிறேன். அன்னை தரிசனம் பெற அவர்களேதான் அருள வேண்டும். அருள்வார்கள் என்று நம்புகிறேன். சிவாய நமஹ

Viji muruganathan says :

அற்புதமான எழுத்து..காட்சிகள் கண்ணுக்குத் தெரிகின்றன. சித்தர்கள் ஆசி இல்லாமல் இதைத் தொடக்கூட முடியாது.. வாழ்த்துகள் நண்பர் அமிர்தம் சூர்யா

Prabhamurugesh says :

என்ன சொல்வது என தெரியவில்லை. சித்தர்கள் பற்றிய இந்த பயணத்தில் மிக முக்கியமான அனுபவ நிறுத்தம். பயணத்தின் ஆன்மீக வழி காட்டலுக்கு நன்றிகள் பல சூர்யா .. அடுத்த தரிசனத்தை எதிர்பார்த்து..

வீரமணி says :

அருமை அருமை மாதம் இரண்டு முறையாவது தொழில் சம்பந்தமாக சேலம் சென்று வரும் எனக்கு அன்னை மாயம்மாவின் ஜீவ சமாதி சேலத்தில் இருப்பது இதுநாள்வரை தெரியாமல் போனது. அடுத்த முறை சேலம் செல்லும்போது நிச்சயம் தரிசித்து வரவேண்டும் . அரிய தகவல்களுக்கு நன்றிகள்

M. Swetha says :

Excellent writings about mayamma penn siddar in tamil history, lm collect many informtation from that writings and understand the real power of penn siddar in tamil history we are proud to be a tamilians

M. Swetha says :

Really got many information hats off to amirthram surya sir

G Srikanth says :

மாயம்மா பற்றி நேர்த்தியாக எழுதியிருக்கிறாய் சூர்யா. அடைகாத்து பொரித்தால் கிடைக்கும் பதில்கள் இரண்டு என எழுதியது புதுமை. தொகுப்பாக போடவேண்டும்

Viji R krishnan says :

இதுவரை கேள்விப்பட்டதில்லை சூர்யா.... அருமை கடவுளின் தூதர்கள் இவர்கள் என்றே நினைக்கிறேன்

ரிஷபன் says :

சித்தர்கள் பற்றி வாசிக்க வாசிக்க சித்தம் சுத்தி ஆகிறது. மாயம்மா ஜீவ சமாதி இருப்பிடம் அறிந்தேன். நன்றி

ந.கன்னியக்குமார் says :

பெண் சித்தர்களை பற்றிய தொடர் உங்கள் எழுத்துநடையில் பிரமாதமாயிருக்கிறது! அடுத்த சித்தரைப் பற்றி அறிய ஆவலாயிருக்கிறோம்!

Nandakumar says :

சித்தர்களின் வாழ்வும் சித்தமயமான உனது எழுத்தும் பிரமிப்பு நண்பா. வாழ்த்துகள்.

Murugesan says :

சரியாக முப்பது வருடங்களுக்கு முன்னான அகல் திரி தூண்டி ஏற்றிய விதமாக ....எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களால் "கனவுகள் விற்பவன் "புத்தக வழியாக அன்னை மாயம்மாவை தெரிய செய்தார்கள். ஒன்று மட்டும் மிக தெளிவாக மீண்டும் மீண்டும் உறுதி ஆகிறது. "விட்ட குறை, தொட்ட குறை"....என எழுத்து சித்தர் சொல்லி தந்தது தான் அது. பரத கண்டம் எண்ணிலடங்கா சித்த புருஷர்களை கொண்டது. அப்படியாக இந்த தொடரில் "அன்னை மாயம்மா "பற்றியதிற்கு என் அண்ணன் சூர்யாவே காரணம் ..

ப்ரியா பாஸ்கரன் says :

வெகு சிறப்பான மற்றுமொரு சித்தர் தொடர். உங்கள் மொழி நடை வெகு சிறப்பு சூர்யா. அடுத்த சித்ததைப் படிக்க ஆவலுடன் காத்திருகின்றேன்.

Uthamaraj r says :

useful information nice story have welcome congrats

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :