• JUST IN | சுட சுட

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் யார்? அதிமுக-வில் இன்று முக்கிய முடிவு!





தமிழக சட்டமன்றத்திற்கான எதிர்க்கட்சித் தலைவராக அமரப் போவது யார் என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

2021 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் அறுதிப் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது. அக்கட்சியின் தலைவர் மு. க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் 12-வது முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார்.

அதேபோன்று, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 75 இடங்களை மட்டுமே கைப்பற்றி தோல்வியை சந்தித்தது. இதில், அதிகபட்சமாக அஇஅதிமுக 65 இடங்களில் வெற்றி பெற்றது. இந்நிலையில், சட்டப்பேரவையில் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் குறித்து முடிவெடுக்க அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாலை இன்று மாலை, 4:30 மணிக்கு, சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடக்க இருக்கிறது.

முன்னதாக, அஇஅதிமுக, செய்தி தொடர்பாளர் புகழேந்தி, `அரசியலில் அனுபவம் மிக்கவர் என்பதால், சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக, ஓ.பி.எஸ்., தேர்வாக வாய்ப்புள்ளது` என ஊடகங்ளில் தெரிவித்தார்.

இருப்பினும், எடப்பாடி பழனிசாமியை முன்வைத்துத் தான் அதிமுக கடந்த சட்டமன்றத் தேர்தலை சந்தித்தது. மாநிலம் முழுவதும் 39.7% வாக்குகளையும், கொங்கு மண்டலத்தில் பெருவாரியான தொகுதிகளையும் கைப்பற்றியதில் பெரும் பங்கு எடப்பாடி பழனிசாமிக்கு உரியது. எனவே, அவரை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க வேண்டும் என ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது அதிமுகவின் எதிர்கட்சி தலைவர் யார் என்கிற கேள்விக்கு இன்று மாலை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :