• தீபம் - ஆன்மீகம்

சாகரம் - சிலிர்க்க வைக்கும் சக்தி சித்தர்கள் - 2 - அன்னை ஸ்ரீ ஆண்டவன் பிச்சி


அமிர்தம் சூர்யா

‘அருள்தா பொருள்தா என்றுனை கேட்பது
மருள்தான் நிறைந்த மனத்தின் செயல்தான்.
இருள்தான் இல்லா இதயத்துள்ளே
பொருளாய் உள்ள உயிர்நீ அன்றோ?’

என்ற வைஷ்ணவி பஜனாவளியில் இடம்பெற்றுள்ள வரிகள் ஆண்டவன் பிச்சியின் தன்னிரகற்ற தத்துவ வரிகள்.

யார் இந்த ஆண்டவன் பிச்சை? பிச்சி? உண்மையோ, புனைவோ... ஆனால், நமக்கு வந்து சேர்ந்த பெயர்க்காரணம் இதுதான். காஞ்சி மகாபெரியவர் பேச வந்திருந்த ஒரு கூட்டத்தில் பிச்சைக்காரியைப் போல் வந்திருந்த இவரை பலரும் துரத்தியபோது, மகாபெரியவர் அவர்களைத் தடுத்து, “அவரை விடுங்கள்... அவர் ஆண்டவன் பிச்சை” என்றாராம். அதாவது, ஆண்டவன் நமக்காகப் போட்ட பிச்சை இந்த ஆத்மா என்பதாக அதனைப் பொருள் கொள்ளலாம். இப்படியாகத்தான் அவர், ‘ஆண்டவன் பிச்சை’ அல்லது ‘ஆண்டவன் பிச்சி’ என அழைக்கப்பட்டார் என்பதாக ஒரு தகவல்.

இன்னொரு புறம், “நான் முருக ஆண்டவனின் பிச்சை. நான் எழுதுவது, பாடுவது எல்லாம் முருகன் போட்ட பிச்சை” என்று அவரே தனது பெயரை மாற்றிக் கொண்டார் என்றும் சொல்கின்றனர். அவர் எழுதிய குறிப்பு ஒன்றில், “முருகன் என் முன்னே தோன்றி, ‘நீ பிச்சி போல், சிறிய பூ போல் காட்சி தந்தாலும் என்பால் பக்தியில் ஐக்கியமாகு. நான் என்னுள் உன்னை மூழ்கச் செய்வேன்” என்று சொன்னதாகவும் சொல்கிறார்கள்.

எது எப்படியோ... நாம் இப்போது தரிசிக்கப்போகும் சித்த ரூபம் ஆண்டவன் பிச்சி.

காஞ்சி மகா பெரியவருக்கும் ஆண்டவன் பிச்சிக்கும் சந்திப்பு நடந்ததா என்பதற்கு சரியான ஆதாரம் இல்லை. ஆனால், ஆண்டவன் பிச்சி எழுதிய, ‘ஸ்தோத்திரமாலா கீர்த்தனை’ என்ற நூலுக்கு காஞ்சி மகாபெரியவர் திருமுகம் அளித்திருக்கிறார். அந்த நூல் 1961ல் சென்னை ராஜா அண்ணாமலைபுரம், நாராயணி அம்மாள் திருமண மண்டபத்தில் வெளியிடப்பட்டதாகவும், அதில் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டதாகவும் குறிப்பு உள்ளது.

திருவண்ணாமலை, ரமணாஸ்ரமத்தில் ரமண மகரிஷியை சந்தித்திருக்கிறார் ஆண்டவன் பிச்சி.

வாழ்வை துறந்து, குடும்பத்தை விலக்கி, சமூகத்திலிருந்து ஒதுங்கி, சடை முடியோடும் மொட்டையோடும்தான் ஒருவர் ஆன்மிக இறை தேடலில் இறங்க முடியுமா என்ன?

‘மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்தது ஒழித்து விடின்.’

எனும் வள்ளுவன் வாக்குக்கு உதாரணமாக, குடும்பத்தில் இருந்துகொண்டே இறை சித்தமாக இருந்தவர் ஆண்டவன் பிச்சி. ஒன்பது குழந்தைகளுக்குத் தாயான பின்பும் அவரது புத்தியும் மனமும் சதா முருகன் பெயரையே உச்சரித்தபடி இருந்ததாம். கிட்டத்தட்ட அவரை ஒரு மன நோயாளியைப் போலவே அவரது குடும்பம் பார்த்தது... நடத்தியது. அரை நிர்வாண ஊரில் உடல் போர்த்திய ஆடையுடன் போனால் நீங்கள் அந்நியம்தானே. அவர் ஊர் ஊராக முருகன் கோயிலைத் தேடிப் போவதும், அங்கு முருகன் மேல் பாடல்கள் பாடுவதுமே அவரது ஒரே ஆன்மிகப் பணியாக இருந்திருக்கிறது.

‘முருகன் எனக்குக் காட்சி தந்தார். என்னை எழுதச் சொன்னார்’ என்று ஆண்டவன் பிச்சி, சொன்னதை யாரும் நம்பத் தயாராக இல்லை. ஆதாரம் இல்லாமல் இங்கு ஏதும் அரங்கம் ஏறாதே. ஆனால், ஆன்மிகம் உங்கள் ஆதரவுக்கு ஒருபோதும் காத்திருப்பதில்லை என்பதே நிஜம்.

கபாலீஸ்வரர் ஆட்சி செய்கின்ற மயிலையில் சங்கரநாராயண சாஸ்திரி - சீதாலட்சுமி தம்பதியருக்கு 1899ஆம் ஆண்டு அழகான பெண் குழந்தையாக மரகதவல்லி என்ற பெயரில் பிறந்தார் ஆண்டவன் பிச்சி.

படிப்பில் சிறந்த பண்டிதர்கள் வாழ்ந்த குடும்பத்தில் பிறந்த மரகதவல்லிக்கு படிக்கப் பிடிக்கவில்லை. ‘மகரதவல்லி மற்ற பெண்களைப் போல் அல்ல. இவள் கொஞ்சம் வித்தியாசமானவள்’ என்று அவரின் பாட்டிக்குத் தெரிந்திருந்தது. தினமும் முருகக் கடவுளின் பெருமைகளை பேத்திக்கு போதித்து வந்தாள். புத்தி முழுக்க முருகன்தான் மரகதவல்லிக்கு. அவளது அனுபவ அறிவிலே தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு ஆகிய மொழிகள் அத்துப்படியாயின.

அக்கால வழக்கப்படி மரகதத்துக்குச் சிறுவயதிலேயே திருமணம் செய்து வைத்தனர். கணவர் நரசிம்ம சாஸ்திரி. புகுந்த வீடு போன பிறகு ஒருநாள் மரகதத்தின் கனவில் தோன்றிய முருகன், ‘மரகதம் என்னைப் பாடுவதே நாம் உனக்கு இட்ட பணி...’ என்று கட்டளையிட்டு மறைந்தாராம். அன்றிலிருந்து மரகதவல்லி நோட்டும் பாட்டுமாகவே இருந்து இருக்கிறார்.

அதுவரை பள்ளிக்கூடம் பக்கமே போகாத மரகதவல்லி, ஆசு கவி போல் பல பக்திப் பாடல்களைப் பாடினார்... எழுதினாராம்.

பிரசவத்துக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் மரகதவல்லி. அரங்கனையே நினைத்துக்கொண்டிருந்த ஆண்டாள் போல், குழந்தை பிறந்தவுடனேயே முருகனை நினைத்துப் பாடல்கள் எழுதத் தொடங்கி விட்டார் மரகதவல்லி. பிறந்த குழந்தை அழுவது கூட தெரியாமல் இருந்ததைப் பார்த்த மாமியார், மரகதவல்லியின் கையில் இருந்த நோட்டைப் பிடுங்கி பெட்டியில் வைத்துப் பூட்டி, “இனி அந்த ஆண்டியைப் பற்றிப் பாட யோசிக்கவே கூடாது” என்று சொல்லி தடை போட்டிருக்கிறார். மாமியார் மறைவுக்குப் பின் முருகன் மீது உண்டான காதல் தீவிரமாகி, ஊர் ஊராகக் கோயில்களைத் தேடிப் போக ஆரம்பித்து விட்டாராம் மரகதவல்லி.

ஒரு முறை அருணை சென்றபோது, சுவாமிக்கு பூஜை முடிந்து நடை சாற்றி விட்டார்கள். வருந்தி நின்ற மரகதவல்லியிடம் வந்த ஒரு சிறுவன், ‘நான் பூஜை செய்து வைக்கிறேன்’ என்று நடையைத் திறந்து பூஜை செய்து பிரசாதமும் கொடுத்தானாம்.

அதன் பின்னர் ரமணாஸ்ரமத்துக்கு சென்ற மரகதவல்லியிடம், “என்ன... பாலதண்டபாணி தரிசனம் கிடைத்ததா...?” என்று ரமண மகரிஷி வினவ, அவர் காலில் விழுந்து கதறத் தொடங்கி விட்டார் மரகதவல்லி. ‘முருகன்தான் நேரில் வந்தானா? அதை தெரியாத பிச்சி ஆனேனே’ன்னு அழுதாராம். இப்படியான ஆன்மிக சம்பவங்கள் அவர் பற்றிய குறிப்பில் நிறையவே உண்டு.

ஒரு கட்டத்தில் ரிஷிகேஷ் சென்று சுவாமி சிவானந்தரை சந்தித்து இருக்கிறார் மரகதவல்லி. முருக பக்தியால் தான் பட்ட கஷ்டத்தை எல்லாம் அவரிடம் சொன்னாராம். அவருக்கு சுவாமி சிவானந்தர் சடாக்ஷர மந்திரத்தை உபதேசித்து தீட்சை தந்தாராம். அவர் துறவறம் மேற்கொண்டதை அவரது குடும்பத்தினர் பலமாக எதிர்க்க, மீண்டும் கணவன் இறக்கும் வரை குடும்பத்திலேயே உழன்று இருக்கிறார் ஆண்டவன் பிச்சி.

ஒரு சமயம் பிரபல பாடகர் டி.எம்.எஸ். விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது, அந்த ஓட்டலின் பணியாளன் ஒரு பாடலை முணுமுணுத்தபடி அறையைப் பெருக்கி இருக்கிறான். அந்தப் பாடல் வரிகளில் மயங்கிய அவர், அந்தப் பாடலை அப்படியே எழுதிக் கொண்டாராம். ‘இது யார் பாட்டு?’ எனக் கேட்க, அந்தப் பணியாளனுக்குத் தெரியவில்லை. அந்த வரிகளுக்கு டி.எம்.எஸ். மெட்டு போட்டுப் பாடி இன்னும் பிரபலமாகிறார்.

ஒருமுறை சென்னை காளிகாம்பாள் கோயிலுக்கு டி.எம்.எஸ். வந்தபோது, அங்கு ஒரு கல்வெட்டில், ‘அன்னை ஸ்ரீ ஆண்டவன் பிச்சி அவர்களால் 1952ல் ஸ்ரீ வடகதிர்காம பெருமான் திருமுன்பு அவனருள் உந்துதலால் இதே மண்டபத்தில் பாடிய அருள் கண்ணிகள்’ என்ற கல்வெட்டு அங்கு இருப்பதைப் பார்க்கிறார். கல்வெட்டிலிருந்த பாட்டு என்ன தெரியுமா...?

‘உள்ளம் உருகுதடா முருகா உன்னடி காண்கையிலே
அள்ளி அணைத்திடவே எனக்குள் ஆசை பெருதடா.
பாடி பரவசமாய் உனையே பார்த்திட தோணுதடா
ஆடும் மயில் ஏறி முருகா ஓடி வருவாயடா...’

என்ற பாடல்தான் அது. மரியாதை கருதி, ‘உருகுதடா’ என்பதை டி.எம்.எஸ். ‘உருகுதய்யா’ என்று மாற்றிப் பாடி இருப்பார். நீங்கள் எத்தனை முறை கோயில்களில் இந்தப் பாட்டைக் கேட்டு இருப்பீர்கள்? இதை எழுதியது ஆண்டவன் பிச்சி என்ற பெண் சித்தர்தான்.

ஒருமுறை வீட்டுப் படிக்கட்டில் தவறி விழுந்து தலையில் அடிபட்டு கோமா நிலைக்குப் போய்விடுகிறார் ஆண்டவன் பிச்சி. மருத்துவர்கள் கைவிட்ட நிலை. ஆனால், சில நாட்களிலேயே அவர் பூரண தெளிவுடன் எழுந்து பாடல்கள் பாட ஆரம்பிக்கிறார். இதற்குச் சிலர் சொல்லும் காரணம், நெரூர் அருகே பின்னவாசல் என்ற ஊரில் வாழ்ந்த தேவி உபாசகர் ராமகிருஷ்ணர் என்பவரது ஆன்மா, ஆண்டவன் பிச்சியின் உடலுக்குள் புகுந்து கொண்டது என்பதுதான். இதற்கு முன் வரலாற்றில் இப்படிப்பட்ட நிகழ்வு ராஜா விக்கிரமாதித்தன், ஆதிசங்கரர், திருமூலர், அருணகிரிநாதர் ஆகிய ஆன்மிகப் பெரியோர்க்கு நிகழ்ந்துள்ளது. அதேபோல், ஆண்டவன் பிச்சிக்கும் என்பதாகச் சொல்கிறார்கள்.

ஒரு பெண் ஆன்மிகத்தில் உச்சம் தொடும்போது அவளைப் பைத்தியக்காரியாகத் தூற்றி புறக்கணிப்பது போல், அந்த சுத்த ஆத்மாவின் அபூர்வக் கவிதை ஆற்றலை, மடை திறந்த வெள்ளமென வந்து விழும் முருக பக்தி பாசுரங்களைக் கேட்டு மிரண்டுபோன ஆண்கள் கூட்டம் அதை அந்தப் பெண்ணின் ஞானமாகப் பார்க்காமல் ஏற்காமல், அது ஒரு ஆண் ஆவியின் செயல் என்று மடைமாற்றுகிறதோ என்ற விவாத கேள்வி எழும்புகிறது. இது என் ஐயம் மட்டுமே. எனக்கு இந்தக் கதையாடலில் நம்பிக்கை இல்லை. அது முழுக்க முழுக்க ஆண்டவன் பிச்சி என்ற பெண் சித்தரின் ஞான வெளிப்பாடே என்பது என் எளிய கருத்து.

அன்னை முருகன் அருளால் இயற்றியவை... திருத்தணிகை மும்மணிக்கோவை, வைஷ்ணவி பஞ்சதலிமாலை, வைஷ்ணவி அனுக்கிரக மாலை, ஸ்ரீமத் பகவத் கீதை யோகம், தேவி நவச்சக்ர கீர்த்தனைகள்... அது மட்டுமல்ல, பகவத்கீதையின் அத்தனை சுலோகங்களையும் கவிதைகளாகத் தொகுத்து இருக்கிறாராம். ஆனால், முறையாக யாரும் அந்த ஆவணங்களைப் பாதுகாக்கவில்லை.

தனது 85வது வயதில் 1990ல் முருகனடி சேர்ந்தார் அன்னை ஸ்ரீ ஆண்டவன் பிச்சி.

‘முத்தைத்தரு பத்தித் திருநகை

அத்திக்கிலே சத்திச் சரவண

முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்’

என்ற பாடலைக் கேட்டதும் அருணகிரிநாதர் நினைவுக்கு வருவது போல், ‘உள்ளம் உருகுதடா முருகா.... உன்னடி காண்கையிலே’ பாடலை கேட்கும் போதெல்லாம் பெண் சித்தர் அன்னை ஸ்ரீ ஆண்டவன் பிச்சி நினைவுக்கு வரும். அப்படி வந்தால் அதுவே இந்தத் தொடரின் வெற்றியும் ஆகும்.

(தரிசனம் தொடரும்)

Comments

மதுரா says :

மிக அருமை. உள்ளத்தை உருக வைக்கும் பாடலை எழுதியவரை கண்டறிந்தது மகிழ்ச்சி

மருத்துவர்.ம.ஜீவரேகா,தலைவர்,தென்சென்னை தமிழ்ச்சங்கம் says :

அய்யன் முருகப்பெருமான் என்று சொல்லும்போதே எல்லோர் மனதிலும் சட்டென்று ஒலிக்கும் பாடல்,"உள்ளம் உருகுதய்யா "என்ற பாடல். அந்தப்பாடலை யாரோ ஒரு பாடலாசிரியர் எழுதியிருக்கக் கூடுமென்றே இதுநாள்வரை நான் உட்பட எல்லோரும் நினைத்திருப்பார்கள்.அந்த நினைப்பினைப் பொய்யாக்கிவிட்டது உங்களின் தேர்ந்த எழுத்துநடையிலும் சாட்சியபூர்வமாகவும் அமைந்த இந்தக் கட்டுரை. காலங்காலமாய் தான் நினைத்ததைச் செய்ய நினைக்கும் பெண்களுக்குக் கிடைக்கும் அவப்பெயர்களும், அவமரியாதைகளும் என்றைக்குமே ஓய்ந்தபாடில்லை.தான் விரும்பும் இறைவனைக்கூட அவளிஷ்டப்படி வேண்டுவதற்கோ,வணங்குவதற்கோ இச்சமூகம் விடுவதில்லை என்பது எத்தகைய கொடுமையான மறுதலிப்பாய் இருக்கிறது.மாறாக அவளுக்குக் கிடைக்கும் அகங்காரி,ஆணவக்காரி, பைத்தியக்காரி போன்ற பட்டங்களைச் சுமந்தபடிதான் ஆண்டவன் பிச்சி போன்ற பெண்கள் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள், வரலாற்றில் தங்கள் பெயரை நிலைநாட்டிப் போயிருக்கிறார்கள் என்பதற்கான கண்கூடான சாட்சியாக ஆண்டவன் பிச்சி சித்தரைப்பற்றிய இந்தக் கட்டுரையைக் காண்கிறேன். படிக்கும்போதே அடுத்தவாரம் யாரோ என்ற ஆவல் மேலோங்குகிறது.இவ்வாறான வகையில் மிகச்சிறப்பானதொரு முறையில் கட்டுரையைக் கொண்டுசெல்லும் ஆசிரியர் அமிர்தம் சூர்யா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

G Srikanth says :

ஏற்கனவே முகநூலிலும் வாட்ஸ் அப் பிலும் இந்தப் பதிவை பலரும் பகிர் படித்த நினைவு என்னுள்.... முகநூலில் ஏதும் இதற்கு முன் பதிவிட்டிருந்தீரா? சூர்யா

Prabhamurugesh says :

அன்னை ஸ்ரீ ஆண்டவர் பிச்சி பற்றி தெரிந்து கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி.உள்ளம் உருகுதைய இந்த பாடலை கேட்டாலே டி.எம்.ஸ் சார் தான் ஞாபகம் வரும்.என்ன ஒரு தற்செயல் நிகழ்வு இதை படிக்கும் போது அந்த பாட்டுதான் வீட்டில் கேட்டு கொண்டுயிருந்தேன்..இப்போ அம்மாவின் முகம் வந்து போகிறது. வெற்றி தான் சூர்யா எப்போதும்..அடுத்த தரிசனத்தை எதிர் பார்த்து..

Viji muruganathan says :

மிகவும் அருமையாக இருந்தது. ஆண்டவன் பிச்சிக்கு மட்டும் அல்ல இதை எழுதும் அமிர்தம் சூர்யாவிற்கும் எழுதும் அற்புத வரத்தை கொடுத்துள்ளான்.

Kalaiselvy says :

அருமையான நடை. இனி TMS முருகன்பாடல் கேட்கும்போதெல்லாம் ஆண்டவன் பிச்சி அம்மா மனக்கண்ணில் வந்து போவார்.

வீரமணி says :

வாரியார் சாமிகள் பித்துக்குளி முருகதாஸ் சின்னப்ப தேவர் போன்ற ஏராளமான முருக பக்தர்களோடு் இனி ஆண்டவன் பிச்சை அம்மையாரும் எங்கள் நினைவில் நீங்காமல் நிறைந்திருப்பார் . அரிய தகவல்கள் சிறப்பான தொடக்கம் எம்பெருமான் முருகக்கடவுளின் அருளோடும் குருநாதர் காஞ்சி மகா சாமிகளின் ஆசிகளோடும் தங்கள் எழுத்துப்பயணம் இனிதே தொடர வாழ்த்துகள்

Nandakumar says :

அற்புதம் நண்பா. இனி உள்ளம் உருகுதய்யா கேட்கும் தருணங்களில் ஆண்டவன் பிச்சி வந்து நிற்பார் என் கண் முன். கூடவே உனது எழுத்தும். அபாரம் தொடர்க.

அன்புச்செல்வி சுப்புராஜூ says :

தெரியாத பல விசயங்களை தெரிந்து கொண்டோம்.. உள்ளம் உருகுதய்யா

ரிஷபன் says :

ஆண்டவன் ஒவ்வொருவர் வாழ்க்கையில் எப்படி எல்லாம் லீலை செய்கிறான் ! காலத்தால் அழியாத பாடல். எப்போது கேட்டாலும் உள்ளம் உருகும்

K.anuradha says :

உள்ளம் உருகுதய்யா எத்தனையோ முறை கேட்ட பாடல்.புச்சிதான் பாடினார்னு தெரியாது. இனி எப்படி இந்தபாட்டைக்கேட்டாலும் பிச்சிசித்தர்தான் நினைவுக்கு வருவார்.இதை அருமையாக வழியே கொண்டு வந்த நண்பருக்கு நன்றி.

மங்களகெளரி says :

முருகனை குருவாக ஏற்றுக் கொண்டால் அவனின் திருவிளையாடளை ஏற்றுக் கொள்ளும் திறனும் உறுதியும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நின்ற இடத்திலேயே கல்லாய் சமைந்து விடுவோம். இந்த அம்மையார் ஆண்டவன் பிச்சியைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் அருமை சூரியா. வேறெங்கும் இது வரை நான் வாசித்தது இல்லை. மிக்க மகிழ்ச்சியும் அன்பும். முருகனின் அருள் மட்டுமல்ல ஆண்டவன் பிச்சியின் அருளாசியும் உங்களுக்கு கிடைக்க வேண்டும். கிடைக்கும்.

மங்களகெளரி says :

முருகனை குருவாக ஏற்றுக் கொண்டால் அவனின் திருவிளையாடளை ஏற்றுக் கொள்ளும் திறனும் உறுதியும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நின்ற இடத்திலேயே கல்லாய் சமைந்து விடுவோம். இந்த அம்மையார் ஆண்டவன் பிச்சியைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் அருமை சூரியா. வேறெங்கும் இது வரை நான் வாசித்தது இல்லை. மிக்க மகிழ்ச்சியும் அன்பும். முருகனின் அருள் மட்டுமல்ல ஆண்டவன் பிச்சியின் அருளாசியும் உங்களுக்கு கிடைக்க வேண்டும். கிடைக்கும்.

மங்களகெளரி says :

முருகனை குருவாக ஏற்றுக் கொண்டால் அவனின் திருவிளையாடளை ஏற்றுக் கொள்ளும் திறனும் உறுதியும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நின்ற இடத்திலேயே கல்லாய் சமைந்து விடுவோம். இந்த அம்மையார் ஆண்டவன் பிச்சியைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் அருமை சூரியா. வேறெங்கும் இது வரை நான் வாசித்தது இல்லை. மிக்க மகிழ்ச்சியும் அன்பும். முருகனின் அருள் மட்டுமல்ல ஆண்டவன் பிச்சியின் அருளாசியும் உங்களுக்கு கிடைக்க வேண்டும். கிடைக்கும்.

ப்ரியா பாஸ்கரன் says :

சிறப்பான கட்டுரை சூர்யா

ப்ரியா பாஸ்கரன் says :

சிறப்பான கட்டுரை சூர்யா

Preethi Rajagopal says :

சிறப்பான கட்டுரை, தேடி தேடி விவரங்களை திரட்டுவதில் உங்களுக்கு நிகர் நீங்களே, சூப்பர்

சேகர் நாகரத்தினம் says :

மழித்தலும் நீட்டலும் குறளை நீங்கள் பொருத்தியிருப்பது புலிமார்க் சீக்காய் தூளுக்கும் புலிக்கும் உள்ள சம்பந்தம் போலிருக்கிறது

இன்பா says :

ஆண்டவன் பிச்சி பற்றிய கட்டுரை சிறப்பு. இப்படியொருவர் இருந்திருக்கிறார் என்பதே இப்போதுதான் அறிகிறேன். நிறைய தகவல்களைக் கொடுத்திருக்கிங்க.

ரமணி ரமா says :

உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கயிலே ஆண்டவன் பிச்சி பாடியதா.. இனி TMS அவர்களுக்கு முன்னாடி அன்னை நினைவுதான் வரும். நன்றி சூர்யா

Viji R krishnan says :

அந்த காலத்தில் குடும்பஸ்திரீ களுக்கு கட்டுப்பாடுகள் அதிகம் என்பது உண்மை, அதையும் மீறி கடவுள் மேல் பாடல் இயற்ற கடவுள் துணை இருந்திருக்கிறார்

அமிர்தம் சூர்யா says :

கருத்து தெரிவித்த, வாழ்த்து அளித்த வாசகர்கள் / எழுத்தாளர்கள் / பக்தர்கள் அனைவர்க்கும் நெஞ்சார்ந்த நன்றி. எல்லா வளமும் உங்களை வந்தடையட்டும் வாழ்த்துக்கள்

Umapathy says :

Ullam urguthaiya Paadal arumai

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :