• தீபம் - ஆன்மீகம்

கரை சேர்த்த பாண்டுரங்கன்!


எம் அசோக்ராஜா

ஆதரவில்லாத வயதான மூதாட்டி ஒருவர் தனது தள்ளாத வயதிலும் தினமும் கொஞ்சம் அரிசி வாங்கி அதில் இட்லி, தோசை செய்து விற்று பிழைப்பு நடத்தி வந்தார். அந்த மூதாட்டியின் பெயர் கோமாபாய். விட்டலன் பாண்டுரங்கன் மீது அளவற்ற பக்தி அவளுக்கு.

இட்லி வேகும்போது சும்மா இல்லாமல் பாண்டுரங்கனை நினைத்து பஜனை செய்துகொண்டே சமைப்பது அவளது வழக்கம். ஒரு வேப்ப மரத்தடிதான் அவளுக்கு வெகு காலமாக வீடு.. அந்த பெரிய விருக்ஷத்தின் கிளைகளுக்கு இடையே இருந்த இடைவெளிகள்தான் அவளுக்கு சாமான்கள் வைக்கும் அலமாரி.

அவளது வாழ்க்கையின் ஒரே குறிக்கோள் எப்படியாவது ஒரு முறை பண்டரிபுரம் போய் பாண்டுரங்கனை தரிசனம் செய்து விட வேண்டும் என்பதே. ஒரு ஏகாதசி அன்று பண்டரிபுரம் போக முடிவு செய்து விட்டாள். நடையாய் நடந்து சந்திரபாகா நதிக்கரை வரை சென்று விட்டாள். சந்திரபாகா நதியைக் கடந்து விட்டால் பாண்டுரங்கனை தரிசித்து விடலாம்.

நதியை எப்படிக் கடப்பது?. அவள் போன சமயம் நதியில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. ’பாண்டுரங்கா நீதான் அருள்புரிந்து உன்னை தரிசிக்க எனக்கு ஒரு சந்தர்ப்பம் தரவேண்டும்’ என்று அவள் உள்மனம் விடாமல் வேண்டிக்கொண்டே இருந்தது.

இருள் கவிய ஆரம்பித்து விட்டது. வெகுநேரம் நின்று கொண்டிருந்தாள் அந்த மூதாட்டி. நதியில் ஒரே ஒரு ஓடம் மட்டும் வந்து போய்க் கொண்டிருந்தது. அந்த ஓடக்காரன் ஒரு வாலிபன்.

“அப்பனே, என்னை கொஞ்சம் அக்கரை கொண்டு விடுகிறாயா?” - மூதாடி.

“ஒரு ரூபாய் கொடுத்தால் கொண்டு சேர்க்கிறேன். அதுதான் வழக்கமான வாடகை.” - ஓடக்காரன்.

“என்கிட்டே காசு இல்லையே?”

“நான் சும்மா உன்னை ஓடத்தில் ஏற்றிக்கொள்ள முடியாது. போ!.. போ! அப்படி ஓரமாக’ என்றான் ஓடக்காரன்.

அந்த மூதாட்டி இருந்த இடம் ஜன சஞ்சாரம் இல்லாத வனாந்திர பிரதேசம். அதன் வழியேதான் அந்த நதி வேகமாக ஓடிவந்துக் கொண்டு இருந்தது. அதன் இரு மருங்கிலும் அடர்ந்த மரங்கள். காற்றில் அவற்றின் கிளைகள் அசைந்து, உராய்ந்து எழுப்பிய சப்தம் அடிவயிற்றைக் கலக்கியது. போதாததற்கு புதர்களில் இருந்தும் எங்கோ காட்டுக்குள்ளிலிருந்தும் வித விதமான அச்சமூட்டும் சப்தங்கள் கேட்டுக்கொண்டே இருந்தன.

நிறைய பேர் நதியின் அடுத்த கரைக்கு ஓடத்தில் போனார்கள். அவர்களையும் அந்த மூதாட்டி கெஞ்சிப்பார்த்தாள். ஒரு பயணிகூட அவளுக்காக ஒரு ரூபாய் கொடுக்க முன்வரவில்லை, ’என்ன செய்வது? இருட்டிவிட்டதே? பாண்டுரங்கா விட்டலா!’ மறுபடியும் ஒடக்காரனையே கெஞ்சினாள்.

“தம்பி நீ கடைசி தடவை அந்தப் பக்கம் போகும்போதாவது என்னை தயவுபண்ணி கூட்டிச் செல்லேன்? ரொம்ப பயமாக இருக்கிறதே, இங்கு தனியாக இருக்க’ என்றாள்.

ஓடக்காரன், ’கிழவி! அப்பறம் பார்க்கலாம். இப்போ பேசாம போ. இன்னும் ஒரு நடை ரெண்டு நடை திரும்பி வரும்போது சொல்றேன், இங்கேயே இரு’ என்றான்.

நரிகள் ஊளையிட ஆரம்பித்தன. இருட்டு கருப்பு திரையை அடர்த்தியாகப் போர்த்த ஆரம்பித்தது. ’சரி நமது கடைசி முடிவு நரிகள் வாயில்தான் போலிருக்கிறது. இங்கு சாவதை விட பண்டரிபுரத்தில் மண்டையைப் போட்டாலாவது கொஞ்சம் புண்ணியமாச்சே’ என்று நினைத்தார்.

ஓடக்காரன் வரவில்லை. அங்கேயே தங்கி விட்டானோ?.

“விட்டலா அவ்வளவு துர்பாக்கியசாலியா நான்?’ என அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஓடம் ஒன்று கண்ணில் தென்பட்டது. ’அப்பாடா! அதோ ஓடக்காரன் வருகிறான். பாடிக்கொண்டே வருகிறானே. என்ன ஆச்சரியம்.... நாம் பாடும் பாட்டு அவனுக்கும் தெரிந்திருக்கிறதே. ரொம்ப சந்தோஷம் போல இருக்கிறது. நிறைய சம்பாதித்திருப்பான் போல’ என்று நினைத்தாள்.”

“ஏ பாட்டி.., சட்டு புட்டுன்னு வா. ஓடம் கிளம்பப்போகிறது. இதுதான் இன்றைக்கு கடைசி நடை. சீக்கிரம் ஏறி வா ஆடாம அசையாம ஒரு இடத்தில் உக்காரு’ என்றான் ஓடக்காரன்.

“நீ ரொம்ப நல்லவன்பா, பெரிய மனசு பண்ணி காசில்லாத இந்தக் கிழவியை பண்டரிபுரம் போக வைத்தாயே. நாளைக்கு பண்டரிபுரம் போய் பிச்சையெடுத்தாவது உனக்கு சேர வேண்டிய கூலி ஒரு ரூபாயை கொடுத்து விடுகிறேன்’ என்றாள் மூதாட்டி.

’சரி... சரி.. அமைதியாக உட்காருங்கள்’ என்றான் ஓடக்காரன்.

ஓடம் பண்டரிபுரம் போய் சேர்ந்தது. மெதுவாய் நடந்து பண்டுரங்கனை தரிசித்தாள்... மனதில் மிகுந்த மகிழ்ச்சி அவளுக்கு.

மறுநாள் காலை கோயில் வாசலில் அமர்ந்து பஜனை பாடி பிச்சை எடுத்தாள். நிறையவே காசு சேர்ந்தது. சந்தோஷமாக சந்திரபாகா நதிக்கரைக்கு வந்தாள். ஓடக்காரன் அங்கு உட்கார்ந்திருந்தான்.

“தம்பி இந்தா உனக்கு சேர வேண்டிய ஒரு ரூபாய் என்று கொடுத்தவளை ஏற இறங்க பார்த்தான் அவன்.

“நீ எப்படி இங்கு வந்தே?” என்றான் ஓடக்காரன்.

“நீதானே நேத்து ராத்திரி என்னை ஓடத்தில் இங்கு கூட்டி வந்தே. மறந்து போய் விட்டாயா?”.

“நானா? என் ஓடத்தில் உன்னை நான் கூட்டி வரவே இல்லையே?”

’அப்போ வேறே ஏதாவது ஓடத்தில் வந்து சேர்ந்தேனா?’ என்று கேட்டார் கோமாபாய்.

’நான் ஒருத்தன்தான் இங்கே ஓடம் வைத்துக்கொண்டு ஓட்டுபவன். அவன் யாரு வேறே ஒருத்தன்? என்றான்.

அப்போதுதான் கோமாபாய்க்கு புரிந்தது... தனது பயத்தைப் புரிந்து கொண்டு அந்த விட்டலன்தான் ஓடக்காரனாக வந்து தன்னை கரை சேர்த்தான் என்று.

பக்தியில் மனம் விம்மிய கோமாபாய், மீண்டும் ஓடினாள் விட்டலனை தரிசிக்க...

ஆனந்தக் கண்ணீருடன் விட்டலன் காலடியில் ஒரு ரூபாயை வைத்த அவள், ’இந்தா உன் ஓடக்கூலி ஒரு ரூபாய் என்றாள்.

அங்கே கருவறையில் இடுப்பில் இரு கைகளையும் வைத்துக்கொண்டு மந்தகாசமாக சிரித்துக் கொண்டிருந்தான் பாண்டுரங்கன்.

கண்ணீருடன் விட்டலனை உற்றுப்பார்த்த கோமாபாய்க்கு ஓடக்காரப் பையன் முகம் அங்கே தெரிந்தது.

Comments

Bhargavi Kumar says :

தீபம் அட்டைப் படம் ஏன் கல்கி, மங்கையர் மலர் அட்டைப் படங்களுடன் இல்லை.. இதழ் நிறுத்தமா..?

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :