• GLITTERS | பளபள

குழந்தைகளுக்கும் மாஸ்க் போட வேண்டுமா?


- சுதாவல்லி ரங்கராஜன்





கொரோனாவின் முதல் அலையின்போது பெரும்பாலான குழந்தைகள் பாதிக்கப்படாதது சற்று ஆறுதலான விஷயம். ஆனால், தற்போது கொரோனா 2-ம் அலையில் குழந்தைகளும் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர்.

குழந்தைகள் கொரோனாவின் பிடியில் சிக்காமல் தடுக்கவோ எதிர்கொள்ளவோ என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ’’இந்தியன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ்’’ தெரிவித்துள்ளது. இதுபற்றி மேலும் சில விபரங்கள் அறிய மகப்பேறு மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான ஆலோசகர் டீனா அபிஷேக்கிடம் பேசினோம்.

1.. குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் அது கொரோனாவா அல்லது சாதாரண காய்ச்சலா என்று கண்டறிய முடியுமா?

காய்ச்சல் அறிகுறியை மட்டும் வைத்து அது கொரோனாவா என்று யூகிக்க முடியாது. ஆனால் வீட்டில் யாருக்காவது கொரோனா தொற்று இருந்தால், குழந்தைக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டியது கட்டாயமாகலாம்

2.. குழந்தைகளுக்கு எப்போது கொரோனா தொற்று பரிசோதனை செய்ய வேண்டும்?

வீட்டில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று இருந்தாலும் இல்லாவிட்டாலும் குழந்தைகளுக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் மூன்று நாட்களுக்கு மேல் இருந்தால் கொரோனா பரிசோதனை செய்வது மிக அவசியம். பெரியவர்களுக்கு செய்யப்படும் அதே ஆர்.டி- பி.சி.ஆர். பரிசோதனைதான் குழந்தைகளுக்கும் செய்யப்படுகிறது.

3.. குழந்தைக்கு மாஸ்க் போடணுமா?

இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மாஸ்க் பயன்படுத்தத் தேவையில்லை. ஆனால் அதற்கு மேற்பட்ட வயதுடைய குழந்தைகளுக்கு கண்டிப்பாக மாஸ்க் பயன்படுத்த வேண்டும்.

4.. குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதியானதும் எப்படி அவர்களை பார்த்துகொள்வது?

குழந்தைக்கு கொரோனா பாஸிட்டிவ் என்று வந்தால் உடனடியாக மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை. டெலி கன்சல்டேஷன் வழியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம். இதற்கான வாய்ப்பு இல்லையெனில் இந்தியன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் இணையதளத்தில் கொடுத்துள்ள குறிப்பை பின்பற்றலாம்.

5.. கொரோனா தொற்று குழந்தைக்கு வந்தால் வீட்டு வைத்தியமாக செய்ய வேண்டியவை என்னென்ன?

குழந்தையின் வெப்பநிலையையும் பல்ஸ் ஆக்ஸிமீட்டரையும் 6 மணி நேரத்துக்கு ஒருமுறை பரிசோதிக்க வேண்டும். காய்ச்சல் 100 டிகிரிக்கு மேல் இருந்தால் குழந்தைக்கு பாரசிட்டமால் மருந்துகள் எவ்வளவு அளவு என்பதை கேட்டு சரியான அளவில் கொடுக்க வேண்டும். திரவ ஆகாரங்கள் அதிகமாக கொடுக்க வேண்டும். குளிர்ச்சியாக இல்லாமல் வெதுவெதுப்பாக இருக்க வேண்டும். உணவு மென்மையானதாக எளிதில் ஜீரணிக்க கூடியவையாக இருக்க வேண்டும். குழந்தைகளை சுத்தமாக சுகாதாரமாக பராமரியுங்கள். குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி, ஜிங்க் மருந்துகளை பாதுகாப்பாக கொடுக்கலாம்.

6.. காய்ச்சல் வந்த குழந்தையை எப்போது மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும?

குழந்தைக்கு 4 நாட்களுக்கும் மேலாக காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். குழந்தை தண்ணீர், சாப்பாடு என எதையும் சாப்பிடாமல் இருந்தால், மூச்சுவிடுதலில் சிரமம் இருந்தால், உடலில் ஆக்ஸிஜன் அளவு 95-க்கு கீழ் இறங்கினால், சிறுநீரின் அளவு குறைந்தால், குழந்தை மிகவும் சோர்வாக காணப்பட்டால் என்று மேற்கண்ட அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.

.

7.. தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி உண்டா?

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி இன்னும் வரவில்லை. அவர்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி குழந்தைகளைக் கையாள்வது அவசியம்.

8. குழந்தைகளை கொரோனாவிலிருந்து பாதுகாப்பது எப்படி?

குழந்தைகளை பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்காதீர்கள் நீங்களும் பார்ட்டி கொண்டாட வேண்டாம். குழந்தைகளை விளையாட அனுமதிக்காதீர்கள். காய்ச்சல் இருப்பவர்களுடன் பழக விட வேண்டாம். வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்று திரும்பிய உடன் குளித்து உடைகளை மாற்றிக் கொள்வது நல்லது. மேலும் முகக்கவசம், சானிடைசர் போன்றவற்றை சரியாக பயன்படுத்துங்கள். நீங்கள் தடுப்பூசிக்கு தகுதியானவராக இருந்தால் முதலில் தடுப்பூசி போடுங்கள். இது குழந்தைக்கு கொரோனா பாதிப்பு வருவதை 50% வரை தடுக்க செய்யும்.

Comments

Kumarselvam says :

பயனுள்ள கட்டுரை.

Ragothaman says :

Kudos to doctor... useful information

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :