• தீபம் - ஆன்மீகம்

அறிவோமே அக்னி நட்சத்திரத்தை!


- எம்.கோதண்டபாணி

அக்னி நட்சத்திரம் இன்று (மே -4) தொடங்கி மே-28ம் தேதி வரை நீடிக்கிறது.

கிருத்திகை நட்சத்திரத்தின் அதிபதி அக்னி பகவான். தர்மத்தின் வடிவமாகத் திகழும் அக்னி பகவான், சூரியனின் கதிர்களிலிருந்து பிறப்பெடுத்தவன் என்று பதினெண் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

புராண காலத்தில் பன்னிரெண்டு வருடங்கள் இடைவிடாமல் நெய்யூற்றி, ‘சுவேதகி’ யாகம் செய்தார்கள். யாகத்தீயில் வார்க்கப்பட்ட நெய்யை அதிகமாக உண்ட அக்னி தேவனுக்கு மந்த நோய் தாக்கி விட்டது. அந்த நோய் நீங்குவதற்கு மூலிகை செடிகள் நிறைந்த காண்டவ வனத்தை எரித்த இருபத்தியோரு தினங்களே அக்னி நட்சத்திர நாட்கள் என்று புராணம் கூறுகிறது.

காண்டவ வனம் யமுனை ஆற்றங்கரைக்கு அருகில் உள்ளது. அந்தக் காட்டுக்குள் நிறைய மூலிகைச் செடிகள் இருப்பதால் அதன் மணம் ஆற்றங்கரைக்கு வருபவர்களைக் கவரும். அந்த வனம் இந்திரனின் காவலில் இருந்தது. அந்த வனத்தில் அரிய மூலிகைகள் செழித்து வளர, அவ்வப்போது மழை பெய்ய வைத்தான் மழையின் அதிபதியான இந்திரன். காண்டவ வனத்தை எரித்து மூலிகைகளை கபளீகரம் செய்தால் தனது நோய் நீங்கி விடும் என்று நினைத்தார் அக்னி தேவன்.

ஒருநாள் யமுனை நதியில் கண்ணனும் அர்ஜுனனும் குளித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் கரையேறும் சமயத்தில் ஓர் அந்தணர் அங்கே வந்தார். கண்ணனையும் அர்ஜுனனையும் பார்த்து, “உங்களைப் பார்த்தால் கருணைமிக்கவர்களாகத் தெரிகிறீர்கள். எனக்கு அதிக பசி. என் பசிக்கு உங்களால்தான் உதவ முடியும். இந்த வனத்தில் என் பசிப்பிணியைத் தீர்க்கும் மருந்து உள்ளது. நான் இந்த வனத்துக்குள் பிரவேசிக்க நீங்கள்தான் உதவி செய்ய வேண்டும்” என்று வேண்டினார்.

கண்ணனுக்கு அந்த அந்தணரின் பேச்சு வித்தியாசமாக இருக்கவே, அவரை உற்றுப் பார்த்தார். “அக்னி தேவனே! ஏன் இந்த வேடம்? நேரிடையாகவே எங்களிடம் உங்கள் பசிப்பிணிக்கு உணவு கேட்கலாமே” என்று கண்ணன் சொன்னதும், தனது வேடத்தைக் கலைத்தார் அக்னி தேவன். தனக்கு ஏற்பட்ட மந்த நோயை பற்றி சொன்னார்.

“பரமாத்மாவே! சுவேதசி என்ற மன்னனுக்காக துர்வாச முனிவர் நூறாண்டுகள் தொடர்ந்து யாகம் ஒன்றை நடத்தினார். யாகத்தின் விளைவால், அதிகப்படியான நெய்யை உட்கொள்ளும் நிலைக்கு நான் ஆளானேன். அதனால் மந்த நோய் என்னைத் தாக்கிவிட்டது. அந்த மந்த நோய் நீங்குவதற்குத் தகுந்த மூலிகைச் செடிகள் இந்த வனத்தில் நிறைந்துள்ளன. இங்குள்ள அரிய மூலிகைகளை நான் சாப்பிட்டால் மட்டுமே எனது மந்த நோய் தீரும்” என்று கூறினார்.

நீங்கள் காட்டுக்குள் நுழைவதற்கு எங்கள் தயவை ஏன் நாடுகிறீர்கள்?” என்று கேட்டான் அர்ஜுனன்.

அதற்கு அக்னி தேவன், “நான் காட்டுக்குள் நுழையும் போதெல்லாம் இந்திரன் மழை பெய்ய வைத்து என்னுடைய முயற்சியை தடுத்து விடுகிறார். எனவே, நீங்கள்தான் எனக்கு உதவி செய்ய வேண்டும்” என்றார்.

அக்னி தேவனின் வேண்டுகோளை ஏற்று அர்ஜுனனும், கண்ணனும் உதவி செய்ய ஒப்புக்கொண்டனர். பின்னர், “உங்களுக்கு உதவி செய்ய அம்பும், வில்லும் தேவை” எனக் கூறினர். அதன்படி அக்னிதேவன், சக்தி வாய்ந்த காண்டீப வில், அம்புகளை அவர்களிடம் கொடுத்தார். அதைப் பெற்றுக்கொண்ட கண்ணன், “நீங்கள் இருபத்தியோரு நாட்கள் மட்டுமே இந்த வனத்துக்குள் பிரவேசிக்க வேண்டும். அப்போது மழை பெய்யாமல் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” என்று கூறினார்.

அக்னிதேவன் வனத்துக்குள் பிரவேசித்து எரிக்கத் தொடங்கினான். இதைக் கண்ட இந்திரன் மழை பெய்விக்க காளமேகத்துக்கு உத்தரவிட்டான். மேகங்கள் கூட்டமாக வானில் வருவதைக் கண்ட கண்ணன், அர்ஜுனனைப் பார்க்க, அவன் வனத்தில் மழை பொழியாமலிருக்க சரக்கூடு ஒன்றை தன்னிடம் உள்ள அம்புகளால் கட்டித் தடுத்தான்.

அக்னி தேவனும் முதல் ஏழு நாட்கள் வேகமாக தன் பசிக்கு வனத்தில் உள்ள மூலிகைப் பகுதிக்குள் நுழைந்து கபளீகரம் செய்தான். அடுத்த ஏழு நாட்கள் சுற்றியிருக்கும் அரிய மரங்களை உணவாக உட் கொண்டான். அடுத்த ஏழு நாட்கள் மிதமாக உண்டு, இறுதியில் கண்ணனிடமும் அர்ஜுனனிடமும் விடைபெற்று வெளியேறினான். இவ்வாறு அக்னிதேவன் காண்டவ வனத்தை எரித்த நாட்களே அக்னி நட்சத்திர நாட்கள் என்று புராணம் கூறுகிறது.

அக்னி தேவனுக்கு உதவி செய்த அர்ஜுனனுக்கு சக்தி வாய்ந்த காண்டீப வில் கிடைத்தது. இந்த வில்தான் குருக்ஷேத்ர போரில் பாண்டவர்களின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.

இந்த ஆண்டு மே 4-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை அக்னி நட்சத்திர காலம். அக்னி நட்சத்திர நாளில் முருகனையும், மீனாட்சி அம்மையையும் வழிபடுவது நல்லது. பரணி நட்சத்திரத்துக்குரிய துர்கையையும், ரோஹிணி நட்சத்திரத்துக்குரிய பிரம்மனையும் வழிபடுவதுடன், கிருத்திகைக்குரிய தேவதை அக்னியையும் வழிபட்டால் நற்பலன்கள் கிடைக்கும். இந்நாளில் சுப விசேஷங்கள் செய்வதைத் தவிர்த்து இறைவழிபாட்டில் சிந்தனையை செலுத்த வேண்டியது அவசியம்.
Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :