• TRENDING | பர பர

கொரோனா நோயாளிக்கு கரம் கொடுத்த சோனு சூட்!





கொரோனாவால் பாதிக்கப்பட்டு படுக்கை வசதிகூட இல்லாமல் அவதிப்பட்ட நபரை, விமான ஆம்புலன்ஸ் மூலம் படுக்கை வசதியுள்ள மருத்துவமனைக்கு இடம் மாற்றி உதவி புரிந்திருக்கிறார் நடிகர் சோனு சூட்.

இந்தி, தெலுங்கு, தமிழ உட்பட பல மொழிகளில் நடித்ததின் மூலம் சினிமாவில் வில்லனாக மக்கள் மனதில் இடம்பெற்றாலும், பிறருக்கு உதவி புரிவதில் ஹீரோவாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் சோனு சூட்.

இந்நிலையில், அவர் கொரோனா காலத்தில் செய்து வரும் பல உதவிகள், சமூக ஊடகங்களில் பேசப்பட்டு வந்தாலும், தற்போது அவர் செய்த உதவி இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாக்பூரை சேர்ந்த கைலாஷ் அகர்வால் என்ற 25 வயதான பெண், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, படுக்கை வசதி மற்றும் வெண்டிலேட்டர் கிடைக்காமல், மிக தீவிரமாக பாதிக்கப்பட்டார். இந்நிலையில் இதையறிந்த சோனு சூட், கொரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை, நாக்பூரிலிருந்து ஐதராபாத் தனியார் மருத்துவமனைக்கு விமான ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்து வர உதவியிருக்கிறார்.

முன்னதாக, கைலாஷ் அகர்வால் சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனையில், பெரிய மருத்துவமனைக்கு இவரை அழைத்து செல்லுமாறு மருத்துவர்களே கூறியிருந்த நிலையில், மேற்கொண்டு சிகிச்சையளிக்காமல் கைவிட்டிருக்கின்றனர். வேறுவழியின்றி, அப்பெண்ணின் குடும்பத்தினர், அப்பகுதி எம்.எல்.ஏ. மூலமாக வேறு சில மருத்துவமனைகளிலும் விசாரித்துள்ளனர். அப்போதும் சரியான உதவி கிடைக்காததால், சமூக வலைதளமான ட்விட்டரில் இதுகுறித்து பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், ட்விட்டர் பதிவு குறித்து அறிந்த நடிகர் சோனு சூட், உடனடியாக அவசர சிகிச்சை பிரிவுடன் இருக்கும் ஐதராபாத் தனியார் மருத்துவமனைக்கு அவரை கொண்டு செல்லும் முயற்சியை தொடங்கியிருக்கிறார்.

இந்த உதவி குறித்து பத்திரிகையாளரிடம் சோனு சூட் பேசியபோது, "விமான ஆம்புலன்ஸூக்கு நோயாளியை மாற்றுவதில், ஆரம்பத்தில் சில தடங்கல்கள் இருந்தது. அந்நோயாளி சிகிச்சை பெற்று வந்த பகுதியில் விமான நிலையம் இல்லாததால், வேறொரு இடத்துக்கு அவரை அழைத்து வர வேண்டியிருந்தது. இதற்காக, மருத்துவமனை மற்றும் உள்ளூர் மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டிடமும் அனுமதி பெற்று, மருத்துவக் குழுவினர் உதவியுடன் அப்பெண்ணை விமான நிலையத்துக்கு பாதுகாப்பாக அழைத்து வர முடிந்தது. தற்போது சிகிச்சை பெற்று வரும் அவர், விரைவில் குணமடைவார் என நம்புகிறேன்" எனக் கூறியுள்ளார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :