• அமரர் கல்கியின் கல்வெட்டுகள்

45. தீரத்திலே, படை வீரத்திலே...!


- அமரர் கல்கி

கல்கி கலெக்ஷன்

45. தீரத்திலே, படை வீரத்திலே...!

- அமரர் கல்கி

உலகத்தில் சாதாரணமான பொக்கிஷத்தைப் பாதுகாப்பதே கஷ்டமாக இருக்கிறது. திருடர்களும் தீவட்டிக் கொள்ளைக்காரர்களும் அதை லபக்கென்று லாவிக் கொண்டு போகாமல் இருப்பதற்காக போலீசும் இராணுவமும் தேவையாக இருக்கின்றன; கச்சேரிகளும் காராக்கிரகங்களும் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன.

சாதாரணமான பொக்கிஷங்களுக்கே அவ்வளவு ஆபத்து எனில், பொக்கிஷங்களுக்கெல்லாம் பொக்கிஷமான மாமணியைப் பாதுகாப்பது அற்ப சொற்பமான காரியமா?

கண்ணினுமினிய வீர சுதந்திரமாகிய மாசிலா மணியையே குறிப்பிடுகிறோம்.உடலையும் உயிரையும் பாதுகாப்பதற்காக மனிதர் பொருளைத் தியாகம் செய்வரேயல்லாது, பொருளைப் பாதுகாப்பதற்காக உடலையும் உயிரையும் தியாகம் செய்வார் எவருமிலர். ஆனால் ”தந்திரத்தைப் பெறவோ அல்லது பெற்ற ”தந்திரத்தைப் பாதுகாக்கவோ, உடல், பொருள், ஆவி எல்லாவற்றையும் தியாகம் செய்ய மனிதர் பின் வாங்குவதில்லை.

எனவே, ஒரு தேசத்தின் சுதந்திரத்தைக் காட்டிலும் அத்தேச மக்களுக்கு அரும் பெரும் பொக்கிஷம் வேறெதுவுமேயில்லை என்றாகிறது.

சென்ற வாரத்தோடு எழுபத்து நாலு வயது நிரம்பியுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல், மேற்படி ஜெயந்தி வைபவத்தையொட்டி நடந்த கூட்டமொன்றில் என்ன சொல்லியிருக்கிறார் என்பதைப் பாருங்கள்.

“நமது தேகத்தில் கடைசித் துளி இரத்தம் இருக்கும் வரையிலும், போராடி நமது தேசத்தின் சுதந்திரத்தைப் பாதுகாப்போம். நமது சுதந்திரத்தில் எவராவது தலையிடுவார்களாயின், அதனால் இந்தியாவே மறைவதாயினும், உலகமே நாசமாவாதாயினும், அத்தகைய தலையீட்டைச் சகித்துக் கொண்டிருக்க மாட்டோம்” என்று சர்தார் பட்டேல் கர்ஜித்திருக்கிறார்.

எனவே, என்ன நேர்ந்தாலும் பெற்ற சுதந்திரத்தைக் கை நழுவ விடுவது கூடவே கூடாது.

நவீன உலகில் ஒரு தேசத்தின் சுதந்திரத்துக்கு எந்த வழியாக ஆபத்து வரும் என்பதைச் சொல்ல முடியாது. தரைப் பாதையாக வரலாம்; திரை கடல் வழியாக வரலாம்; ஆகாய மார்க்கமாகவும் வரலாம்; ஏன், பாதாளத்தைப் பிளந்து கொண்டும் வரலாம்! அந்த ஆபத்து எந்த வழியாக வந்தாலும் அதை எதிர்த்து நின்று வெற்றி பெற இந்தியா வலிமை பெற்றிருக்க வேண்டும்.

தரைப் போரில் இந்தியரின் வீரதீர பராக்கிரமங்கள் சரித்திரப் பிரசித்தி வாய்ந்தவை. மகா அலெக்ஸாண்டரின் மண்ணாசைக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியர்கள், அதற்கு முன்பும் பின்பும் எத்தனையோ சந்தர்ப்பங்களில் தங்களுடைய போர்த் திறமையைக் காட்டியிருக்கிறார்கள்.

அஞ்சா நெஞ்சமும் ஆச்சரியகரமான போர்த் திறமையும் உள்ள இந்திய சிப்பாய்களடங்கிய இராணுவம், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியக் கோட்டையின் அஸ்திவாரம் என்று லார்டு கர்ஸான் ஒரு சமயம் குறிப்பிட்டார்.

முதலாவது உலக மகா யுத்தத்தில் இந்தியாவின், இந்திய வீரர்களின் உதவி இராவிடில் பிரிட்டன் வெற்றி பெற்றிருக்க முடியாதென்று, அப்போது பிரிட்டிஷ் பிரதம மந்திரியாக இருந்த லாயிட் ஜார்ஜ் பகிரங்கமாக ஒப்புக் கொண்டார்.

இரண்டாவது உலக மகா யுத்தத்திலும் பிரிட்டிஷாரின் வெற்றிக்கு அடி கோலியவர்கள் இந்திய வீரர்களேயாவர். மத்தியத் தரைக்கடல் பிரதேசத்திலும் வட ஆப்பிரிக்காவிலும் பிரிட்டிஷார் தோல்வி மேல் தோல்வியடைந்து ‘வெற்றிகரமாகப் பின்வாங்கி வந்தபோது, பிரிட்டிஷார் இழந்த இடங்களையெல்லாம் மீண்டும் கைப்பற்றிக் கொடுத்தவர்கள் இந்தியர்களே.

இந்தியாவின் பிரதம தளபதியாக இருந்த பீல்டு மார்ஷல் ஆர்ச்சிபால்டு வேவல் அவ்வமயம் மேற்படி உண்மையைப் பிரகடனம் செய்து இந்திய சிப்பாய்களைப் பெரிதும் பாராட்டினார்.

அவ்விஷயமாக லார்டு வேவல் கூறியதை அப்படியே இச் சந்தர்ப்பத்தில் குறிப்பிட விரும்புகிறோம்:-

“1940 டிசம்பர் மாதத்தில் ஸீடி பரானியிலே இரண்டே டிவிஷன்களடங்கிய இந்தியத் துருப்புகள், பொறுக்கியெடுக்கப்பட்ட ஐந்து டிவிஷன்களடங்கிய இத்தாலியத் துருப்புகளை ஹதம் செய்து வெற்றி பெற்றார்கள். பிரிட்டிஷார் இழந்த பர்பரா, பிரிட்டிஷ் ஸோமாலிலந்து இவற்றை மீண்டும் கைப்பற்றியவர்கள் தென்னிந்தியத் துருப்புகள்தான். பிரிட்டிஷார் சிரியாவை ஆக்கிரமித்துக் கொள்ள இந்தியத் துருப்புகள்தான் பேருதவி புரிந்தனர்.இவ்வாறாக மத்தியத் தரைக்கடல் பிரதேசங்களைக் காப்பாற்ற உதவி புரிந்த இந்தியாவுக்கு பிரிட்டன் சார்பில் வந்தனம் அளக்கிறேன்.”

சமீப காலம் வரையில் இந்தியாவின் பிரதம தளபதியாக இருந்த ஜெனரல் ஆக்கின்லெக்கும் இந்தியத் துருப்புகளின் சாகஸங்களை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார்.

சென்ற மகா யுத்தத்தின் போது பசிபிக் மகா சமுத்திரத்திலிருந்து அட்லாண்டிக் மகா சமுத்திரம் வரையிலுள்ள பல இடங்களிலும் போர் நடந்தது. அவற்றில் இந்திய வீரர்கள் கலந்து கொள்ளாத முக்கியப் போர்முனை எதுவுமே இல்லை.

இயற்கை எழிலிலும் செயற்கை அழகிலும் ஈடு இல்லாத காஷ்மீரப் பிரதேசத்தையும், ஸ்ரீநகரப் பட்டணத்தையும் கொள்ளைக்காரர்களிடமிருந்து காப்பாற்றி, ஸ்ரீநகருக்கு ஐந்து மைல்களுக்கு அருகில் வந்த கொள்ளைக் கூட்டத்தையும் அதற்குத் துணை புரிந்த பாகிஸ்தான் துருப்புகளையும் ஐம்பது மைல்களுக்கு அப்பால் விரட்டியடித்து வீரப்போர் புரிந்து வரும் இந்தியத் துருப்புகளின் தீரத்தை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும்.

மற்றும் அதர்மத்தை நிலை நிறுத்தக் கடைசித் துளி இரத்தத்தையும் சிந்தப் போராடுவோம் என்று வீராப்பு பேசிய ரஸாக்கர்கள் வெறும் வெண்ணெய் வெட்டி சிப்பாய்கள் என்பதை நிரூபித்து ஹைதராபாத் போரில் ஐந்தே நாளில் வெற்றி கண்ட இந்தியத் துருப்புகளின் அற்புத பராக்கிரமத்தைக் கண்ணெதிரில் கண்டோம்.

இவ்வாறாக இந்திய சேனா வீரர்கள் பூமியில் அன்றும் இன்றும் போர்த் திறமையைக் காட்டி தங்களுடைய கீர்த்தியை நிலை நாட்டியிருக்கிறார்கள்.

(கல்கி, நவம்பர் 7, 1948)

Comments

கேஆர்எஸ் சம்பத் says :

தந்திரமா- சுதந்திரமா ?? ஆனால் ”தந்திரத்தைப் பெறவோ அல்லது பெற்ற ”தந்திரத்தைப் பாதுகாக்கவோ, உடல், பொருள், ஆவி எல்லாவற்றையும் தியாகம் செய்ய மனிதர் பின் வாங்குவதில்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :