• தீபம் - ஆன்மீகம்

‘பறவை சித்தர்’ ஸ்ரீ சக்கரை அம்மா!


அமிர்தம் சூர்யா

சித்தர்கள் பற்றி 2000களில் நான் படித்தபோது எனக்குள் எழுந்த ஒரு கேள்வி. ’ஏன் ஆன்மிகத் தேடலில் 18 சித்தர்களும் ஆண்களாகவே இருக்கிறார்கள்? ஒரு பெண் கூட சித்தராக, சித்த மனநிலையில் இல்லையா? ஒரு பெண் ஆன்மிகத்தில் பயணப்பட சமுகக் கட்டுபாடுகள்; குடும்பம் பெரும் தடையாக இருந்திருக்குமோ?’ என்றெல்லாம் யோசித்து, ’இருள்வாசம்’ என்ற பெயரில் 19வது பெண் சித்தர் என்று ஒரு சிறுகதை எழுதினேன். இன்று 20 வருடங்கள் கடந்து வந்து பார்க்கிறேன். எண்ணற்ற பெண் சித்தர்கள் தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் ஜீவசமாதி அடைந்துள்ளனர். அவர்களை மக்கள் கொண்டாடுகின்றனர். நான் உண்மையில் ஏதும் தெரியாமல் எங்கோ இருள்வாசத்தில்தான் இருந்திருக்கிறேன். இப்போது உங்களுக்காகப் பெண் சித்தர்கள் பற்றிய இந்தத் தொடரை எழுதுவதில் பெருமிதமும் பெரும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.

‘சீவம் எனச் சிவன் என வேறில்லை

சீவனார் சிவனாரை அறிகிலர்

சீவனார் சிவனாரை அறிந்தபின்

சீவனார் சிவனாயிட்டு இருப்பரே...’

என்று திருமூலர் சொல்வதுபோல், சீவன், சிவன் வேறில்லை என அறிந்து, அரிய அற்புதங்களை நிகழ்த்தி சிவனோடு ஐக்கியமான சித்தர்களைப் பற்றி நினைத்தபோது, முதலில் புத்தியில் நின்றவர், ஸ்ரீ சக்கரை அம்மா என்ற பறவை சித்தர்தான்.

எல்லாவற்றையும் துறந்த சித்தர்கள், துறவிகள் கூட அம்மாவின் நினைவுகளை மட்டும் துறக்கவியலாமல், அம்மாவின் இறப்பில் கதறிக் கதறி அழுத சாட்சியங்கள் உண்டு. உதாரணம் பட்டினத்தார்.

பூத்துக் குலுங்கும் நமது பசுமைக்கு அம்மா எனும் ஆணிவேர்தான் ஆதாரம். அம்மா என்பது இறைவனின் ஜெராக்ஸ்; இனிப்பின் அவதாரம். அந்த அம்மா என்ற சொல்லோடு சக்கரையும் சேர்த்துக்கொண்டால் சந்தோஷத்துக்கு பஞ்சமேது?

சக்கரை அம்மா என்ற வசிய வார்த்தைக்கு உரிய சித்தர் இருப்பது எங்கு தெரியுமா?

திருவான்மியூரில் மருந்தீசர் ஆலயத்துக்கு இடப்புறம் செல்லும் சாலையில் கலாக்ஷேத்ரா ரோட்டில், எண் : 75ல் தன் ஜீவ சமாதியிலிருந்தபடியே அருள்பாலிக்கிறார்.

ஸ்ரீ சக்கரை அம்மா ஜீவ சமாதி சன்னிதியில் பெண்கள் கூட்டம் அதிகம். அங்கு வந்திருந்த ஒரு பெண்மணியிடம், ’இந்த அம்மாவிடம் என்ன கேட்டீங்க? என்ன கொடுத்தாங்க?” என்று சிறு பிள்ளைத்தனமான கேள்வியைக் கேட்டேன்.

அவர், “ஸார்! கேட்காம கொடுக்கிறதுதான் அம்மா. நான் எதுவும் கேட்க வரலை. எனக்கு அம்மா ஞாபகம் வந்தது. பார்க்க வந்தேன். தாய் வீட்டுக்கு வர ரீசன் வேணுமா என்ன?” என்று அசத்திவிட்டார்.

காஞ்சி மகா பெரியவர் 1948, ஜனவரி மாதத்தில் ஐந்து நாட்கள் சக்கரை அம்மா சன்னிதியில் உட்கார்ந்து தியானம் செய்ததாகக் குறிப்பு இருக்கிறது. அப்படியான முக்கியத்துவம் வாய்ந்தது இந்த பறவை சித்தர் ஸ்ரீ சக்கரை அம்மா ஆலயம்.

பறவை சித்தர் என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா?

அம்மாவின் இயற்பெயர் அனந்தாம்பாள். 1854ல் வட ஆற்காடு மாவட்டத்திலுள்ள போளூரில் தேவிகாபுரத்தில் சிவாச்சாரியார் குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயது முதலே தியானத்திலும் பக்தியிலும் பரவசப்பட்ட இவர், தனது 20வது வயதில் கணவரை இழக்கிறார். கணவர் இறந்த 11வது நாள், பலர் தடுத்தும் கேட்காமல் தன் கூந்தல் களைந்து, தண்ணீர்கூட அருந்தாமல் வீட்டின் மொட்டை மாடியில் வெட்டவெளியில் தவம் செய்யத் தொடங்கி விட்டார். ஒரு மாதம் அல்ல; ஒரு வருடம் அல்ல; பத்து வருடங்கள். பத்தாவது வருட இறுதியில் சூரிய, சந்திரருக்கு அப்பாற்பட்ட பிரபஞ்ச பரவொளியைக் கண்டு பரவசமடைகிறார். அந்த தரிசனம் கிடைத்தபின், அஷ்டமஹா சித்திகளுள் ஒன்றான, ’லஹிமா’ என்ற சித்தியை அடைகிறார். இந்த சித்தி காற்றை விட லேசாக உடலை மாற்றி ஆகாயத்தில் பறக்க வைக்கும். அனந்தாம்பாள் அப்படிப் பறந்ததைப் பார்த்த மக்கள் அவரை, ‘பறவை சித்தர்’ என்று அழைக்கத் தொடங்கினர்.

யாரையும் குருவாகக் கொண்டிராத அம்மா, பிரபஞ்ச குருவான சிவனையும் ஸ்ரீ சக்கரத்தையும் மட்டுமே வழிபட்டு வந்ததால், ஸ்ரீ சக்கர அம்மா என்ற பெயர் தோன்றி அது, சக்கரை அம்மாவாக மனத்தின் இனிப்பு போல் மருவிவிட்டது.

‘மனிதன் பறக்க முடியுமா? சாத்தியமா? பார்த்த சாட்சி உண்டா?’ என்று கேட்டால்...

‘உண்டு’ என்பதே என் பதில். தமிழ்த்தென்றல் திரு.வி.க. தனது, ‘உள்ளொளி’ என்ற நூலில் ‘சென்னை, கோமளீஸ்வரன்பேட்டையில் ஒரு அம்மா இருந்தார். அவர் டாக்டர் நஞ்சுண்டராவின் குரு. ஒருமுறை யான் வசித்த கல்லூரியின் மாடியில் ஒரு பறவை போல் பறந்து வந்து நின்றார். மானுடம் பறப்பது விந்தையல்லவா? யான் தேசபக்தன் இதழின் ஆசிரியராக இருந்தபோது ராவிடம் நெருங்கிப் பழகியபோதுதான், அவ்வம்மையார் சித்தர் இனத்தைச் சேர்ந்தவர் என அறிந்தேன்’ என்று எழுதியுள்ளார். திரு.வி.க.வை விட ஒரு சான்று வேண்டுமா என்ன?

‘ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம்

நடுங்குவதில்லை நமனுமங்கில்லை

இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை

படும் பயன் இல்லை பற்றுவிட்டோர்க்கே’

என்று திருமூலர் (திருமந்திரம்:1624) சொல்வதற்கு சாட்சியம் சக்கரை அம்மாதான். சக்கரை அம்மாவின் வளர்ப்பு மகன் இறந்தபோது, அம்மா அவர் உடலைப் பார்க்க வராமல் மாடியிலேயே சிரித்துக்கொண்டே இருந்தாராம்.

“மகன் இறந்து கிடக்க, துக்கமற்று இப்படிச் சிரிக்கலாமா?” என்று ஒருவர் கேட்க, “சாவே ஒரு மகாபொய். அந்தப் பொய் என்னைத் துக்கப்பட வைக்குமா? உங்கள் சாவு எனக்கு சிரிப்பை மூட்டுகிறது’ என்றாராம்.

இந்த மனோபாவத்தை, ‘ஸ்தித ப்ரக்ஞ நிலை’ என்பர். இன்ப, துன்பத்தை ஒரே நேர்க்கோட்டில் வைத்துப் பார்க்கும் சமத்துவ ஞானம் இது.

இதே தாய்தான், தன் பக்தர்களை எல்லாம் மருந்தீசர் ஆலயத்தில் அழைத்துப்போய் கடவுளிடம் (மூல விக்ரகத்தைப் பார்த்து), “என்னோட வந்த இந்தக் குழந்தைகளுக்கு ஒரு குறையும் வராமல் பார்த்துக்க. உன்னிடம் ஒப்படைக்கிறேன். நீதான் முக்தி கொடுக்கணும் சரியா?” என்று அதிகாரத்தோடு உரக்கச் சொன்னாராம். அப்படிச் சொன்ன பத்தாவது நாளில்தான் 1901, பிப்ரவரி 28, பிற்பகல் 3.30 மணிக்கு பறவை சித்தரின் ஆத்மா அவரது உடலை விட்டு சிவனை நோக்கிப் பறந்தது.

தாய், தன் பிள்ளைக்காக தன்னையே தியாகம் செய்பவள். அந்தத் தாய் ஒரு துறவு நிலைக்கு வந்தால், ‘தன் பிள்ளை’ என்ற வட்டம் உடைந்து உலக ஜீவராசியெல்லாம் தன் பிள்ளையாகி விடுகிறது அவருக்கு.

இதற்கு உதாரணம், ஒரு சம்பவம். சக்கரை அம்மாவின் இடுப்பில் ஒரு நாகம் எப்போதும் சுற்றியபடியே இருக்குமாம். பக்தர்கள் பயப்படும்போது, “செல்லம், இறங்கிப் போடா. பிள்ளைங்க பயப்படுறாங்க’ என்றதும், அது நகர்ந்து விடுமாம். பாம்பு - செல்லம்; பக்தர்கள் - பிள்ளைகள். இதுதான் அம்மாவின் தாய்மை.

’இந்த ஆலயத்தில் (ஜீவ சமாதியில்) இங்குமங்கும் அவர் நடந்தபடி இருக்கும் காலடி ஓசையை இன்றும் கேட்கலாம்’ என்கிறார்கள். அவர் இன்னும் இங்கேயே வசிப்பதால், பிள்ளைகளின் குறைகளை காதுகொடுத்து கேட்டு, உடனுக்குடன் நிவர்த்தி செய்கிறார் என்பதுதான் தினமும் இங்கே கூடும் பக்தர்களின் கூட்டத்துக்கு சாட்சியம் ஆகும்.

‘அம்மான்னா சும்மா இல்லடா; அவ இல்லேன்னா யாரும் இல்லடா’ என்று சினிமா பாடல் ஒலிக்கிறது. திரும்பிப் பார்த்தால், அங்கு வந்திருந்த பக்தர் ஒருவரின் ரிங்டோன் அது. சென்னைதானே நீங்களும். உங்கள் அம்மாவைப் போய் பார்த்துவிட்டு வாங்களேன்.

(தரிசனம் தொடரும்)

Comments

Ramani Rama says :

ஒரு முறையாவது ஜீவ சமாதிக்கு போய் அம்மாவை பார்க்கணும்னு ஆவல் வருது. தாய் பாசத்தை உணர இந்த மகளுக்கு அவங்கதான் அருளணும்

Iswarya prabhakar says :

Arumai.. Nalla information

Preethi Rajagopal says :

அருமையான இடம், நிறைய தடவை சென்றிருக்கிறேன், ஆனாலும் ஒவ்வொரு முறை செல்லும் போதும், ஒரு புது அனுபவம், சிறப்பு

வே.எழிலரசு. says :

மிகவும் சிறப்பாக இருக்கிறது. இறைநிலை அடைந்த மகளிர் குறித்த பதிவுகள் நமது மொழியில் மிகவும் குறைந்த அளவே இருக்கின்றன. அந்த குறையை அமிர்தம் சூர்யாவின் எழுதுகோலும் அழிக்க முனைவது ஆன்மீக ஆனந்தம். அம்மாக்கள் ஆண்டவனின் ஜெராக்ஸ் என்பதை நகல் என்றே எழுதியிருக்கலாம்.

K. Anuradha says :

அருமையா எழுதி இருக்கீங்க. கட்டாயம் ஒருதரம் சென்று வரனும்.

அமிர்தம்சூர்யா says :

அன்புமிகு எழுத்தாளர் திறனாய்வாளர் வே.எழிலரசு அவர்கள் ஜெராக்ஸ் என்பதற்கு பதில் நகல் என்று போடலாமே என்கிறார். உண்மைதான் ஏற்கிறேன். ஆயினும் புழக்கத்தில் ஜெராக்ஸ் என்றால் நகலெடுப்பது என்று எளிதாக விளங்கி கொள்வர் என்று நம்பினேன்..இனி வரும் தொடரில் ஆங்கில சொல் இல்லாமல் பார்த்துக்கொள்கிறேன் .நன்றி

Prabhamurugesh says :

பறவை சித்தர் ஸ்ரீ சக்கரை அம்மா அவர்களை பற்றி பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டோம்.பெண் சித்தர்களை பற்றி எமுத தூண்டிய கல்கி குழுமத்திற்கு அதை எழுதி எங்களுக்கு கொண்டு வந்த அமிர்தம் சூர்யாவுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்..அடுத்த தரிசனம் நோக்கி..

இன்பா says :

பெண் சித்தர்கள் பற்றி அறிதலுக்கான நல்ல முயற்சி சென்று பார்க்கவேண்டுமென்ற ஆவலைத் தூண்டுகிறது சூர்யாவின் எழுத்து.. அம்மா இல்லாததால் அதிகம் உணரமுடிகிறது. தொடருங்கள் காத்திருக்கிறோம்.

Viji muruganathan says :

அருமை..இன்னும் வரக்கூடிய சித்தர்களுக்கு காத்திருக்கிறேன்.

Chermadevisuresh says :

மிக அருமை

முகமது பாட்சா Mohumed batcha says :

அருமையான தொடர்! இறை என்பதற்கு மனிதம் என்பதே சரியான விளக்கமாக இருக்க முடியும். இறை நேசர்கள் என்பவர்கள் இறையை மனிதனுக்குள் செலுத்தும் அற்புதர்கள். அவர்களுக்கு மதம் சாதி எப்போதும் குறுக்கே நிற்பது கிடையாது. மனிதர்களின் அருகில் இருப்பவர்களை பேசத் தொடங்கியுள்ளீர்கள். பறவை சித்தர் அற்புத தகவல்கள்.

U Somasundaram says :

Really great to hear amirtham surya, It is new information for me, I had visited many times to marudeeswarar temple to get God blessings, but never visited amma to get her blessings. Now I will get. Please write more about sithars in tamilnadu.

மதுரா says :

சிறப்பான தொடர். பறவை சித்தர் பற்றிய அபூர்வ தகவல்கள். சென்னை வரும் போது அவசியம் தரிசிக்க வேண்டும்.

Soundammal says :

வணக்கம் சூர்யா சார். அருமையான தகவல்..பதிவு. கண்டிப்பாக சென்று அம்மாவின் ஆசி பெறுவேன்.

அன்புச்செல்வி சுப்புராஜூ says :

பெண் சித்தர்கள் பற்றிய தொடர் எழுதுவது ஆகச்சிறந்த விசயம். பெண் சித்தர்கள் ஏன் கொண்டாடப்படுவதில்லை என்று நீண்ட நாள்களாக மனதினுள் ஒலித்தக் குரல் அமைதியாகிறது. அன்பின் நல்வாழ்த்துகள் சூர்யா

அன்புச்செல்வி சுப்புராஜூ says :

பெண் சித்தர்கள் பற்றிய தொடர் எழுதுவது ஆகச்சிறந்த விசயம். பெண் சித்தர்கள் ஏன் கொண்டாடப்படுவதில்லை என்று நீண்ட நாள்களாக மனதினுள் ஒலித்தக் குரல் அமைதியாகிறது. அன்பின் நல்வாழ்த்துகள் சூர்யா

G Srikanth says :

லஹிமா சித்தி பெற்ற சக்கரை அம்மா பற்றி எழுத சூர்யாவுக்கு கிடைத்த வாய்ப்பு ரொம்ப லக்கி மா.... மாயம்மா இந்த சித்தர் வரிசையில் வருவார்களா எனக் கொஞ்சம் சொல்லுமா....

Nandakumar says :

நேர்த்தியான சொல்லில் நிறைவான தகவல்களால் முதல் பெண் சித்தரை வாசிக்கும்போது; அடுத்த சித்தரைப் பற்றி எப்படி இருக்கும் என்ற ஆவலில் மனம் இருக்கிறது காத்திருப்பில் (தமிழ் வாசிக்க தெரியாத என் மனைவிக்கு வாசித்து சொன்னேன்.... அருமையாக இருக்கிறது இந்த தொடர் முழுவதும் வாசித்து காண்பிக்க சொன்னாள்) அடுத்த சித்தருக்கு காத்திருக்கிறேன்.... வாழ்த்துகள் நண்பா.

bala says :

பெயரே இனிமையாக இருக்கிறது சூர்யா. அம்மாவை தரிசிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது உங்கள் எழுத்து செம்ம சூர்யா இன்னும் நிறைய சித்தர்களை பற்றி அறிந்து கொள்ள ஆவலுடன்

Kalaivani Mohan says :

சென்னை சென்ற போது 2 முறை மருந்தீஸ்வரர் கோவில் சென்றுள்ளேன்.உங்கள் பதிவு படித்து விட்டேன்ல.அடுத்த முறை நிச்சயமாய பறவை சித்தர் பீடம் சென்று வணங்குவேன்.

MATHIPRIYA S says :

அருமையான கட்டுரை. படிக்கும் போதே உடல் சிலிர்த்தது. சக்கரை அம்மாவை காண கண்கள் ஏங்குகிறது.

கங்கா says :

சென்னையிலேயே வசித்திருந்தாலும் இந்த ஆலயம் பற்றி முதன்முறை படிக்கிறேன். திரு. வி. கவின் கூற்றை இணைத்திருப்பது பலம்.

ரிஷபன் says :

புதிய தகவல். இன்றுதான் அறிகிறேன். பறவை சித்தரில் ஆரம்பிக்கும் ஆன்மீக எழுத்து சிறகடிக்கட்டும்

மருத்துவர்.ம.ஜீவரேகா says :

பதிணென்சித்தர்கள் என்று கேள்விப்படும்போதெல்லாம் நானுமே யோசித்ததுண்டு. பெண்களில் ஆத்மரீதியாய் இறைவனை அணுகி அவனடி சேர்ந்தவர்கள் யாருமே இல்லையாயென நினைத்ததும் உண்டு. நிச்சயம் இருந்திருப்பார்கள் என்ற அசைக்கமுடியாத ஆழ்மனக்கருத்தும் இருந்துகொண்டுதான் இருந்தது. உங்களின் இந்தப் பதிவின் மூலம் பறவை சித்தர் சக்கரை அம்மாவைப்பற்றி தெரியவந்ததும் ஆச்சர்யம். இவ்வளவு அருகில் இருக்கிறோம்,இதுவரை கேள்விப்படவுமில்லை, தரிசிக்கவுமில்லையே என்ற வருத்தம் மேலோங்குகிறது. காரணம் இல்லாமல் காரியமிவ்லை என்பதை நம்புகிறேன்.எதுயெப்போது நடக்கவேண்டுமென விதிக்கப்பட்டிருக்கிறதோ அப்போதுதான் நடக்கும்.உங்களால் அறியப்பட்டு அவரைத் தரிசிக்கவேண்டும் என்ற கர்மாவின் பலனை உணர்கிறேன்.நிச்சயம் விரைவில் தரிசிப்பேன்.தகவல் தந்தமைக்கு மிக்கநன்றியும்,மென்மேலும் அரிய தகவல்களை அனைவருக்கும் கொண்டுசெல்லவிருக்கும் முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் கட்டுரையாசிரியர் நண்பர் அமிர்தம் சூர்யா அவர்களுக்கு உளப்பூர்வமாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இரவி says :

புதிய தகவலாக இருந்தாலும் மூட நம்பிக்கையை வளர்ப்பதாக உள்ளது. வருணனைகள் மிகைப்படுத்தப்பட்ட தோற்றத்தைத் தருகின்றன.

தாய் பிரபு says :

அணு விற்கு அணு வாய் அப் பாலு க்கு அப் பாலா ய் என்று அவ்வை சொல்லும் அகவல் படி தங்கள் தகவல் நேர் த் தி..ஸ்ரீ சக்கர ம் தான் இன்றைய ஆலயத்தில் பிரதான ம்..ஸ்ரீ சக்கர வழிபாடு ஆதிசங்கரர் நிர்மாணி த்து நமக்கு தந்தது..தங்கள் சித்தர் எழுத்து அங்கிருந்து தொடங்கி யதும் இறைவன் சித்தம்..நீங்கள் கருவி மட்டுமே.. தீபம் அருளொழியில் அமிர்தம் போல சித்தர்கள் சூரிய வலம் வரட்டும்....

ப்ரியா பாஸ்கரன் says :

பெண் சித்தர்கள் இருந்தார்கள் என்று தெரியுமே தவிர, அவர்களைப் பற்றிய தகவல்களை அறிந்ததில்லை. அதுவும் சென்னையிலேயே இருந்த்திருக்கிறார்கள் என்பது வியக்கதக்க செய்தி. பல அரியத் தகவல்களுடன் சுவாரசியமான விடயங்கள் நிறைந்த இந்த கட்டுரையை தொடர்ந்து வெளியிடுமாறுக் கேட்டுக்கொள்கிறேன். ஆண் சித்தர்களைக் கொண்டாடிய அளவிற்கு பெண் சித்தர்கள் கொண்டாடப்படவில்லை. இந்தத் தொடரின் வாயிலாகத் தொடர்ந்து பல பெண் சித்தர்களை வாசிக்க ஆவலாக உள்ளேன். உடனே இந்த சித்தரைச் சென்று தரிசிக்க ஆவலாக உள்ளது. அயல் நாட்டில் வசிப்பதால், அடுத்த முறை ஊருக்கு வரும்பொழுது நிச்சயம் தரிசிக்க வேண்டும். இனிய வாழ்த்துக்கள் எழுத்தாளர். அமிர்தம் சூர்யாவிற்கும், கல்கி குழுமத்திற்கும்.

murugan says :

சித்தர்கள் குறித்து எழுதும் போது தூய தமிழோடு இருக்கும் என்கிற மனநிலையை உடைக்கும் வகையில் எல்லோரும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் பாம்பு - செல்லம்; பக்தர்கள் - பிள்ளைகள். இதுதான் அம்மாவின் தாய்மை. அம்மான்னா சும்மா இல்லடா; அவ இல்லேன்னா யாரும் இல்லடா’ என்று சினிமா பாடல் ஒலிக்கிறது. திரும்பிப் பார்த்தால், அங்கு வந்திருந்த பக்தர் ஒருவரின் ரிங்டோன் அது. என அமிர்தம் சூர்யா வின் எழுத்து பாரட்டக்கூடியது வாழ்த்துக்கள்.

Kunthavai says :

Super surya...

Sekar Nagarathinam says :

எங்கள் ஊரைச் சேர்ந்த சக்கரை அம்மாவைப் பற்றி எழுதியதற்கு நன்றி. எங்கள் ஊரில் காது வழியாக கேட்டதுண்டு. இந்த கட்டுரையை முடிந்தவரை ஷேர் செய்துள்ளேன். ஆயிரக்கணக்கான அன்பர்கள் படிப்பார்கள்.

Leela Ammu says :

ஆகா ! அற்புதமான தகவல்கள், தொய்வில்லா நடையில் அருமையாக பறக்கிறது, இனிக்கிறது தமிழ். வாழ்த்துக்கள்.‌ திரு.வி.க அவர்களின் நூல் குறிப்பு தேடலுக்கான சான்றுஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம் நடுங்குவதில்லை நமனுமங்கில்லை இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை படும் பயன் இல்லை பற்றுவிட்டோர்க்கே’ திருமந்திரம் அற்புத பொருண்மை. சித்தர் ஆனப்பின் ஆண்,பெண் பேதமில்லை... நாம் மானிடர்கள்தானே ....

Sasishail says :

அருமை அருமை புதிய தகவல் எனக்கு ஆரம்பமே அதகலம்...பெண் சித்தர்கள் ஏன் இன்னும் கொண்டாட படாமல் இருக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது... பயணம் சிறக்கட்டும் பெண் சித்தர்களோடு........

பூங்கொடி says :

சீவம் எனச் சிவன் என வேறில்லை சீவனார் சிவனாரை அறிகிலர் சீவனார் சிவனாரை அறிந்தபின் சீவனார் சிவனாயிட்டு இருப்பரே...’ சீவனும் , சிவனும் வேறு இல்லை..அற்புதமான ஆரம்பம். சூர்யாவின் சிறப்பான எழுத்து நடை பெண் சித்தர்கள் பற்றி அறிந்து கொள்ளும் ஆவலை வெகுவாகத் தூண்டுகிறது. முற்றும் துறந்தவர்களைக் கூட கதற வைத்த அம்மா பாசம் " ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து , பெற்றுப் பயல் என்ற போதே பரிந்தெடுத்து, செய்ய இரு கை புறத்திலேயே ஏந்தி

பூங்கொடி says :

கனக முலை தந்தாளை எப்பிறப்பில் காண்பேன் இனி" என்ற பட்டினத்தாரின் வரிகளில் மூழ்க வைத்தது. சென்னையில் இருந்தும் அம்மாவை தரிசிக்கவில்லையே என்று ஏங்க வைத்தது. அடுத்து எந்த பெண் சித்தரைப் பற்றி எழுதப் போகிறார் என்று ஆவலோடு காத்திருக்கிறோம். வாழ்த்துகள் சூர்யா.

Suganthi Doss says :

மிக அருமையான பகிர்வு , வாழ்த்துக்கள் தோழர்

கேஆர்எஸ் சம்பத் says :

வாசகர்களுக்கு மங்கலமான பகிர்வு.

devika says :

Arumayaga ulladhu. Sakkarai Amman Aalaya Trustee Tmt Sumana enadhu uyirththozhi. Angu niraya nalla adhirvugall ullana. Vazhthukkall thozhar amirtham surya!

மு.இராஜேஷ் says :

ஆசிரியர் அவர்களுக்கு. பறக்கும் சித்தர் பற்றிய தகவல் ஏற்கனவே பல நூல்களில் வந்துள்ளது. அதை எல்லாம் தொகுத்த ஒரு தொகுப்பாக உள்ளது. மேலும் பல விரிவான தகவல்களை கூறுவீர் என்று எதிர்பார்த்தேன். ஏமாற்றம். கட்டுரை சிறப்பு

Sai says :

அருமை.... நன்றி..... வாழ்த்துக்கள்

Yogikrishna says :

Thanks for your beautiful narration Surya ji.. I have heard about this place but your words inspired me to feel the presence of Siddhar chakkarai Amma. Namaskarams

ப. தாணப்பன் says :

சென்னை வரும் போது பார்க்க வேண்டிய இடத்தினில் முதன்மைப்படுத்திக் கொள்கிறேன். ஜீவ சமாது இருக்கும் இடத்தில் போய் நின்றாலே நம்மையறியாமல் ஒரு சிலிர்ப்புணர்வு ஏற்படும். தென் தமிழகச் சிததர்களோடு இனி வடதமிழக பெண் சித்தர்களையும் தெரிந்து கொள்வோம்.. தொடர்ந்து அன்னையரை அறிமுகம் செய்யுங்கள். அடி தொழுவோம் நாம்

அமிர்தம் சூர்யா says :

எல்லோரும் வாசிப்பார்கள். அது இயல்பு.ஆனால் நேரம் ஒதுக்கி கருத்து எழுதி வாழ்த்துவதும் தவறை சுட்டிக் காட்டுவதும் தான் முக்கியமான அவசியமான நற்செயல் .சிறப்பான பணி. அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்

Umapathy says :

மிக நல்ல வீஷயம் edhu vari parthathilai

Pennagadam pa.prathap says :

அருமை...நன்றாக இருந்தது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :