• SPARKLES | மினுமினு

ஆட்டோவை ஆம்புலன்ஸாக மாற்றிய இளைஞர்!


- சுபஸ்தினி





கொரோனா 2-ம் அலை நாடெங்கும் தீவிரமாகப் பரவி வரும் நிலையில் ஆக்சிஜனுக்கும் ஆம்புலன்ஸுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் போபாலை சேர்ந்த ஜாவித் கான் என்ற இளைஞர் தனது ஆட்டோவை ஆம்புலன்ஸாக மாற்றி, கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக உதவி வருவது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா 2-வது அலை பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சக அறிக்கையின்படி, கிட்டதட்ட 4 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடெங்கிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஆம்புலன்ஸ் கிடைக்காமலும் மருத்துவமனைகளில் படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன் கிடைக்காமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜாவித் கான் என்பவர், தனது ஆட்டோவை ஆம்புலன்ஸாக மாற்றி கொரோனா நோயாளிகளை இலவசமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார். இவருக்கு எப்படி இந்த ஐடியா?! இதோ.. அவரே அதை உணர்வுபூர்வமாக பகிர்ந்து கொள்கிறார்..

’’ஆம்புலன்ஸ் பற்றாக்குறையால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை கொண்டு செல்ல அவரது உறவினர்கள் எந்தளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை டிவி-சேனல்களிலும் சமூக வலைதளங்களிலும் பார்த்து மனம் வருந்தினேன். அதனால் என் ஆட்டோவை ஆம்புலன்ஸ் போல மாற்றி உதவ முடிவு செய்தேன். என் மனைவியின் நகைகளை விற்று இப்படி மாற்றி அமைத்துள்ளேன். என் போன் நம்பர் சமூக வலைதளங்களில் கிடைக்கிறது. ஆம்புலன்ஸ் கிடைக்காவிட்டால் மக்கள் என்னை அழைக்கலாம். கடந்த 20 நாட்களாக இதை செய்து கொண்டிருக்கிறேன். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சீரியசான 9 பேரை, என் ஆட்டோவில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார் ஜாவீத்.

அவரது மனிதாபிமானம் போற்றுத்தக்கது அல்லவா?




Comments

s.kumarselvam says :

தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :