• GLITTERS | பளபள

ஸ்ரீ வைத்தீஸ்வரன் கோயில் மகா கும்பாபிஷேகம்!


- ஜே.வி.நாதன்

மயிலாடுதுறை மாவட்டம், ஸ்ரீ வைத்தீஸ்வரன் கோயில் மகா கும்பாபிஷேக விழா இன்று (29.4.2021) காலை நடைபெற்றது. 22 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மகா கும்பாபிஷேகம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, ஆலயத்தில் 147 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, யாகசாலை பூஜைகளை தருமபுரம் ஆதீன 27ஆவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியர் தொடங்கி வைத்தார். காலை ஆதிவாரம், யாகசாலை தான்யம் வைத்தல், பரிவார கலாகர்ஷணம், யாகசாலை பிரவேசம் ஆகியவை சிறப்பாக நடைபெற்றன. தொடர்ந்து, ருத்ராபிஷேகம், கட ஸ்தாபகம், ருத்ர ஹோமம் ஆகியன நடைபெற்றன.

108 யாக குண்டங்களிலும் 108 வகையான மூலிகைகள் மற்றும் நறுமண திரவியங்கள் இடப்பட்டு, சிவாச்சார்யர்கள் மந்திரங்களை முழங்க, பூர்ணாஹுதி செய்விக்கப்பட்டது. அனைத்து யாக குண்டங்களிலும் மகா தீபாராதனை நடைபெற்றது.

ஸ்ரீ தையல்நாயகி உடனான ஸ்ரீ வைத்தியநாத ஸ்வாமிக்கும், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ செல்வ முத்துக்குமார ஸ்வாமிக்கும், ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ அங்காரகன் எனப்படும் செவ்வாய் முதலிய பரிவார தெய்வங்களுக்கும் அவற்றின் கோபுரங்களுக்கும் ஒரு நாள் முன்னதாக அதாவது, 28.4.2021 அன்றே குடமுழுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன.

இன்று (29.4.2021) காலை ஸ்ரீ வைத்தீஸ்வரன் கோயில் ராஜகோபுரம் மற்றும் கருவறை கோபுரம் ஆகியவற்றுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கொரோனா நோய் தொற்றின் தீவிரத்தையொட்டி, ஆலய கும்பாபிஷேகத்தின்போது பக்தர்கள் திரளாகக் கூடுவதைத் தவிர்க்க, 29ஆம் தேதி காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

பக்தர்கள் ஆலயத்தில் வந்து திரளாகக் கூடாமல், தங்கள் இல்லங்களில் இருந்தபடியே, குடமுழுக்குக் காட்சிகளைக் காணும் வகையில் சமூக வலைதளங்களில் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் லலிதா அறிவித்திருந்தார்.

ஆலய சிறப்புகள் : சிதம்பரத்திலிருந்து சீர்காழி வழியாக 24 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஸ்ரீ வைத்தீஸ்வரன் திருக்கோயில். நாடி வரும் பக்தர்களின் தீராத நோய்களைத் தீர்த்து வைக்கும் ஸ்ரீ வைத்தியநாத ராக ஈசன், மகாசிவலிங்க வடிவில் எழுந்தருளியிருக்கும் ஒப்பற்ற ஆலயம் இது. புள்ளிருக்கு வேளூர் என்ற திருநாமமும் இத்தலத்துக்கு உண்டு.

புள் (ஜடாயு), இருக்கு (ரிக் வேதம்), வேள் (முருகப் பெருமான், ஊர் (சூரியன்) ஆகிய நால்வரும் இவ்வாலய ஈசனை பூஜித்ததால், ‘புள்ளிருக்கு வேளூர்’ எனப் பெயர் பெற்றதாகப் புராணம் கூறுகிறது. ஜடாயுவின் வேண்டுகோளின்படி, அவரது உடலை ஸ்ரீராமன் தகனம் செய்த இடம் இதுவென்றும் நம்பப்படுகிறது. எனவே, ’ஜடாயு குண்டம்’ என்ற பெயரும் இந்தத் தலத்துக்கு உண்டு.

ஊரின் நடுவே அழகுற அமைந்துள்ளது ஸ்ரீ வைத்தீஸ்வரர் ஆலயம். தருமபுரம் ஆதீன மடத்தின் பராமரிப்பின் கீழ் வரும் இந்த ஆலயத்தில் ஸ்ரீ வைத்தியநாதர் மேற்கு நோக்கியும், அம்பாள் ஸ்ரீ தையல்நாயகி தெற்கு நோக்கியும் அருள்கின்றனர். ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ காளி தேவி, ஸ்ரீ வீரபத்திரர், ஸ்ரீ பைரவர் ஆகியோர் திசைக்கு ஒருவராக, காவல் தெய்வங்களாகக் காட்சியருள்கின்றனர். மற்றும் மூன்று முகங்கள் கொண்ட ஜ்வரகடேஸ்வரர், ஆலயத்தின் கீழ் சன்னிதி அருகில் இருந்து அருள்பாலிக்கிறார். ஜுரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபட்டு பலன் பெறுகின்றனர்.

சூரபத்மனினின் மார்பைப் பிளக்க, முருகப் பெருமான் வேல் வாங்கியது இந்தத் தலத்தில்தான்! முருகனுக்கு இங்கு ஸ்ரீ செல்வ முத்துக்குமார ஸ்வாமி என்று திருநாமம். இக்கோயில் முருகக் கடவுளுக்கு அர்த்தஜாம பூஜையில் சாத்தப்படும் சந்தன பிரசாதத்தை அணிந்து கொண்டால், வேண்டிய பலன்கள் கிட்டும் என்பது நம்பிக்கை.

நவக்கிரகங்களுள் மூன்றாவதாக விளங்கும் அங்காரகன் எனப்படும் செவ்வாய் இங்கே தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்கிறார். ஆகவே, இது செவ்வாய் தோஷம் நீக்கும் தலமாகவும் போற்றப்படுகிறது. பார்வதி தேவியை பிரிந்த சிவபெருமான், கல் ஆலமரத்தின் கீழ் தவத்தில் இருந்தபோது, அவரது நெற்றிக்கண்ணில் இருந்து நீர்த்துளி ஒன்று பூமியில் வீழ்ந்தது. அதிலிருந்து பிறந்தவரே அங்காரகன். இதனால், குஜன் (பூமியின் மைந்தர்) என்றும் இவர் அழைக்கப்படுகிறார்.

இவர் பரத்வாஜ முனிவரின் மகனாகப் பிறந்து, பூமா தேவியால் வளர்க்கப்பட்டவர் என்றும், தட்ச யாகத்தை அழித்த ஸ்ரீ வீரபத்திரர், தேவர்களின் வேண்டுகோளை ஏற்று உக்கிரம் தணிந்து அங்காரக வடிவம் பெற்றார் என்றும் செவ்வாய் பகவானைக் குறித்து பலவாறு சிலாகிக்கின்றன புராணங்கள். அங்காரகன் செந்நிறமானவர். ஆதலால், இவரை செவ்வாய் என்பர். இந்தக் கோயில் தல விருட்சம் வேப்பமரம்.

ஸ்ரீ வைத்தீஸ்வரன் கோயில் திருச்சாத்துருண்டை அபூர்வமான மருந்தாக விளங்குகிறது. இங்குள்ள விபூதி குண்டத்தின் விபூதி, சித்தாமிர்த குளத்தின் தீர்த்தம் இரண்டையும் கலந்து அரைத்து, மிளகு அளவில் உருணையாகச் செய்து, ‘பாலாம்பாள்’ என்கிற தையல்நாயகியின் திருவடியில் வைத்து அர்ச்சனை செய்து பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இதனை உட்கொண்டால், தீராத நோயும் தீரும் என்கிறார்கள் கோயில் அர்ச்சகர்கள்.

Comments

Geetha says :

Divine

Jayanti Sundar Rajan says :

Spectacular view !!!

R.Meenalatha says :

Excellent.Nicely covered. Thx. Om Namo Namashivaya Namaha Om.

Prabha says :

Vaideswara Balambakai should bless us all

G.Ravindran says :

Superb guided tour through the temple precinct

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :