• GLITTERS | பளபள

செவ்வாயில் ஆக்சிஜன் தயாரிக்கிறது நாசா விண்வெளி ஆய்வு மையம்!


சாந்தி கார்த்திகேயன்





அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான் நாசா, கடந்த ஆண்டு ஜூலையில் செவ்வாய் கிரகம் பற்றிய ஆராய்ச்சிக்காக ‘பெர்சவரன்ஸ் ரோவர்’ என்ற விண்கலத்தை அனுப்பியது. இது கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாயின் ஜெசேரோ பள்ளத்தில் தரையிறங்கியது. செவ்வாயில் உயிர்கள் வாழ்ந்தனவா என்பதை ஆய்வு செய்வதுதான் நாசாவின் முதன்மையான திட்டம்.

இந்த விண்கலம் செவ்வாயில் தரையிறங்கி பல்வேறு ஆர்ய்ச்சிகளை செய்து வருகிறது. இந்த விண்கலத்துடன் இணைக்கப்பட்ட மாக்சி கருவி மூலம், செவ்வாய் கிரகத்தில் ஆக்ஜிஜன் தயாரித்து சாதனை படைத்துள்ளது நாசா.

கொரோன 2-ம் அலை காரணமாக பூமியெங்கும் மக்கள் ஆக்சிஜன் தேடி தவித்து கொண்டிருக்கும் சமயத்தில், சுமார் 30 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய்க் கோளில் ஆக்சிஜன் தயாரித்து சாதனை படைத்திருக்கிறது அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பு. வேறொரு கோளில் ஆக்சிஜன் தயாரிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

பெர்செவெரன்ஸ் ரோவர் விண்கலத்துடன் இணைக்கப்பட்டிருந்த மாக்சி கருவியின் உதவியுடன் செவ்வாயில் ஆக்சிஜன் தயாரித்துள்ளது. சிறு பெட்டியைப் போன்றுள்ள இக்கருவி, பெர்செவெரன்ஸ் விண்கலத்தின் வயிற்றுப் பகுதியில் வைத்து அனுப்பப்பட்டது.

இதே தருணத்தில் மற்றொரு சாதனை செவ்வாயில் படைக்கப்பட்டிருக்கிறது. கடந்த திங்கட்கிழமை செவ்வாயில் பறந்து விஞ்ஞானிகளைச் சிலிர்க்கச் செய்த இன்ஜெனியூட்டி ஹெலிகாப்டர், மீண்டும் ஒரு முறை வெற்றிகரமாகப் பறந்திருக்கிறது. தரையில் இருந்து சுமார் 5 மீட்டர் உயரத்துக்கு மேலே எழுந்து, 2 மீட்டர் தொலைவுக்கு நகர்ந்தது இன்ஜெனியூட்டி. பின்னர் புறப்பட்ட இடத்துக்கே திரும்பி வந்து தரையிறங்கியது. ஆக்சிஜன் தயாரிக்கும் மாக்சியும், செவ்வாயில் பறக்கும் இன்ஜெனியூட்டி ஹெலிகாப்டரும் நாசாவின் வரலாற்றில் புதிய அத்தியாயம் படைத்துள்ளன.

அது சரி.. செவ்வாயில் ஆக்சிஜன் தயாரித்தது எப்படி?

செவ்வாயின் வளி மண்டலம் 96% கார்பன் டை ஆக்சைடால் நிறைந்தது. ஆக்சிஜன் இருப்பதோ வெறும் 0.13 சதவிகிதம்தான். பூமியின் வளிமண்டலத்தில் 21 சதவிகிதம் ஆக்சிஜன் உள்ளது. இந்நிலையில், கார்பன் டை ஆக்சைடிலிருந்து ஆக்சிஜனைத் தயாரிக்க விஞ்ஞானிகள் முடிவு செய்தானர். கார்பன் டை ஆக்சைடு மூலக்கூறு இரண்டு ஆக்சிஜன் அணுக்களையும், ஒரு கார்பன் அணுவையும் கொண்டது. இதிலிருந்து ஒரு ஆக்சிஜன் அணுவைப் பிரித்தெடுத்தது மாக்சி. மீதமிருந்த ஒரு கார்பன் மற்றும் ஒரு ஆக்சிஜன் அணுக்களைக் கொண்ட கார்பன் மோனாக்சைடு வாயு செவ்வாயின் வளி மண்டலத்திலேயே விடப்பட்டது.

செவ்வாயில் தயாரித்த ஆக்சிஜனால் என்ன பயன்?

செவ்வாயில் மாக்சி இயந்திரம் தயாரித்த ஆக்சிஜனின் அளவு வெறும் 5 கிராம்தான். இதைக் கொண்டு மனிதனால் 10 நிமிடம்தான் சுவாசிக்க முடியும். இதன் மூலம் என்ன செய்ய முடியும் என்று பலரும் நினைக்கலாம். ஆனால், வருங்காலத்தில் செவ்வாயில் மேற்கொள்ளவிருக்கும் பல ஆராய்ச்சிகளுக்கு இது மைல் கல்லாக அமையும்.

அதாவது இதே தொழில்நுட்பத்தில் சற்று பெரிய மாக்சி கருவியை உருவாக்கினால், விண்வெளி வீரர்கள் ஆக்சிஜனை பூமியில் இருந்து கொண்டு செல்ல வேண்டிய தேவை இருக்காது.

செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும்போது அவர்கள் சுவாசிக்கவும், பூமிக்குத் திரும்பவதற்கான ராக்கெட்டுகள் செயல்படுவதற்கும் தேவையான ஆக்சிஜனை செவ்வாய் கிரகத்திலேயே தயாரித்து கொள்ள முடியும். மாக்சி போன்ற கருவியை மட்டும் கொண்டு சென்றால் போதும் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

வரும் நாள்களில் வெவ்வேறு இடங்களில் மாக்சியைக் கொண்டு ஆக்சிஜனை தயாரிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. மாக்சியால் ஒரு மணி நேரத்தில் 10 கிராம் வரை ஆக்சிஜன் தயாரிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்கள்.

Comments

M.Kothandapani says :

கார்பன் டை ஆக்ஸைடிலிருந்து ஆக்ஸிஜன் தயாரிக்க முடியும் என்பது நம்பிக்கையூட்டும் செய்திதான். வாழ்க மனித குலம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :