• GLITTERS | பளபள

தபால் முறையில் யாரெல்லாம் வாக்களிப்பு செய்ய முடியும்?


- ஜி.எஸ்.எஸ்.

இந்தியாவில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் இந்த ஆண்டு (2021) ஏப்ரலில் தொடங்கி ஜூன் வரையில் பலகட்டங்களாக நடந்து வருகிறது.

இதில் நேரில் வந்து வாக்களிக்க இயலாத நிலையில் வயதானவர்களும் வெளியூர்களில் வசிப்பவர்களும் தபால முறையில் வாக்களிக்கும் வசதி ஏற்படுத்தப் பட்டது.

இந்த தபால் முறை வாக்களிப்பு முறையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாகச் சாடுகிறது. மேலும் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளும் தபால்முறை வாக்களிப்பில் கொண்டு வந்துள்ள மாற்றங்களை எதிர்க்கின்றன.

தபால் மூலம் பெற்ற வாக்குகளை ஒருநாள் முன்னதாகவே அறிவிக்கலாமா என்ற கேள்வி தமிழக முக்கிய அரசியல் கட்சிகளை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது.

இந்த சூழலில் தபால் வாக்குப் பதிவு குறித்த தெளிவைப் பெறலாமா?

தேர்தல் தினத்தன்று நேரில் வந்து வாக்களிக்க முடியாதவர்களுக்காக ஏற்படுத்தப் பட்டதுதான் இந்த தபால் வாக்குப் பதிவு முறை! அதாவது தேர்தல் மற்றும் தேசம் தொடர்பான பணிகளில் ஈடுபட்டிருப்பவர்கள், தங்கள் வாக்குகளை அளிப்பதற்காக வாக்குச்சீட்டுகள் அனுப்பப்படுகின்றன. (இவற்றை Electronically Transmitted Postal Ballot Papers என்கிறார்கள்). அவற்றின் மூலம் வாக்களிக்கப்படுகிறது.

அதென்ன சிலருக்கு மட்டும் இந்த சலுகை என்று கேட்கக் கூடாது. ராணுவத்தில் இருப்பவர்கள், வேறு ஊர்களில் பணியாற்றும் காவல்துறையினர், இந்தியாவுக்கு வெளியே பணி நியமனம் செய்யப்பட்ட மத்திய அரசுப் பணியாளர்கள் போன்றோர் தங்கள் ஜனநாயகக் கடமையாற்ற தபால் மூலம் வாக்களிக்கும் வசதி அளிக்கப்படுகிறது. இவர்கள் தேர்தல் தினத்தன்று வெவ்வேறு ஊர்களில் இருந்தாலும், தங்கள் சொந்த தொகுதிக்கான வேட்பாளர்களில் ஒருவருக்கு வாக்களிக்கும் உரிமை உண்டு.

65 வயதுக்கு மேற்பட்டவர்களும் மாற்றுத்திறனாளிகளும் கூட தபால் முறையில் வாக்களிக்கலாம் என்றாலும் நடைமுறையில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குதான் இந்த வசதி அளிக்கப்படுகிறது.

கலவரத்தில் ஈடுபடலாம் என்ற கோணத்தில் சிலரை லாக்கப்பில் வைத்திருப்பார்கள் (preventive detention). இவர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம். ஆனால் சிறைக் கைதிகளுக்கு வாக்குரிமை கிடையாது.

மேலே குறிப்பிட்டவர்களின் மனைவிகளுக்கும் தபால் மூலம் வாக்களிக்க அனுமதி உண்டு. ஆனால் மேற்கூறிய பிரிவில் ஒரு பெண்மணி இருந்தால் (எடுத்துக்காட்டு – ராணுவத்தில் பணியாற்றும் பெண்) அவரது கணவருக்கு தபால் மூலம் வாக்களிக்கும் அனுமதி கிடையாது. அதேபோல ராணுவம் மற்றும் மத்திய அரசு பணியில் வேலை செய்பவர்களின் மகன், மகள் ஆகியோருக்கும் தபால் மூலம் வாக்களிக்கும வசதி கிடையாது.

தபால் மூலம் வாக்களிக்க விரும்புபவர்கள் அதற்கான தகுதி தங்களுக்கு இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொண்டு முன்னதாகவே மாநில தேர்தல் அதிகாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

வேட்பாளர்கள் பட்டியல் முடிவான 24 மணி நேரத்துக்குள் வாக்குச்சீட்டுகளை தேர்தல் கமிஷன் அச்சிட்டாக வேண்டும். அப்போதுதான் உரிய காலத்தில் மேற்கூறியவர்களுக்கு தபாலில் அவற்றை அனுப்பி மீண்டும் பெறுவதற்கு நேரம் இருக்கும்.

தபால் மூலம் எப்படி வாக்களிப்பது?

உங்கள் தொகுதிக்கான வாக்கு சீட்டு தபாலில் அனுப்பப்படும் அதில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் வேட்பாளருக்கு எதிராக டிக் செய்ய வேண்டும் பிறகு அந்த தாளை தபால் உறைக்குள் வைத்து ஒட்ட வேண்டும். தவிர தபால் உறையின் மீது இதற்காக வழங்கப்படும் லேபிளை ஒட்ட வேண்டும். அதனருகே உங்கள் கையெழுத்தையும் போட வேண்டும். இப்படி அனுப்ப எந்த அஞ்சல் தலையையும் ஒட்ட வேண்டியதில்லை.

இவர்கள் தனக்கு பதிலாக குறிப்பிட்ட ஒருவரை நியமித்து தன் சார்பில் அவரை நேரடியாக வாக்களிக்கும்படியும் செய்யலாம். (இதற்கு வேறொரு விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும்). இந்தப் பிரதிநிதி தன் சார்பாகவும், தபால் ஓட்டுத் தகுதி உள்ளவர் சார்பாகவும் இரு வாக்குகளை அளிக்கலாம்.

புலம்பெயர் தொழிலாளர்கள் தபால் மூலம் வாக்களிக்கும் வசதி அறிமுகமாகவில்லை.

பீஹார் தேர்தலிலேயே கோவிட் காரணமாக வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டிருப்பவர்கள் தபால் முறையில் வாக்களிக்கலாம் என்ற அனுமதி அளிக்கப்பட்டது.

குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், ஆளுநர்கள், அமைச்சர்கள், சபாநாயகர், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகள் ஆகியோரும் தபால் மூலம் வாக்களிக்கலாம். ஆனால் இவர்களில் யாராக இருந்தாலும் மேற்கூறிய விண்ணப்பத்தை முதலில் தேர்தல் வாரியத்துக்கு அனுப்ப வேண்டும்.

தபால் முறை வாக்களிப்பை ஏன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக சாடுகிறது?

தபால்முறை வாக்குப் பதிவில் தில்லுமுல்லு செய்வதற்கு வழி இருக்கிறது என்றும் வெளிப்படைத் தன்மையைக் குறைக்கிறது என்றும் காரணம் சொல்லப்படுகிறது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :