• JUST IN | சுட சுட

தமிழகத்தில் இன்றுமுதல் புதிய கட்டுப்பாடுகள்!





கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் இன்றுமுதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.

கொரோனா 2-வது அலை தீவிரம் காரணமாக தமிழகத்தில் முதலில் இரவு நேர ஊரடங்கும் பிறகு ஞாயிறு முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. அடுத்து மேலும் புதிய கட்டுப்பாடுகள் இன்றுமுதல் அமலுக்கு வருகிறது.

அதன்படி, இன்று முதல் அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை கூடங்கள், அனைத்து மதக்கூடங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் இயங்க அனுமதி இல்லை.

பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க அனுமதி கிடையாது. வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் சிறிய மளிகை, காய்கறிக்கடைகள் மற்றும் இதர அத்தியாவசிய கடைகள் உரிய வழிமுறைகளை பின்பற்றி வழக்கம் போல் செயல்பட அனுமதி.

தனியாக செயல்படுகின்ற மளிகை உள்ளிட்ட பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் பெரிய கடைகள், குளிர்சாதன வசதி இன்றி இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரே சமயத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர்.

சென்னை உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகள் மற்றும் அனைத்து நகராட்சிகளில், அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்க அனுமதி இல்லை. உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதியில்லை. பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

விடுதிகளில் தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்க வேண்டும் என்றும், விடுதி உணவு கூடங்களில் அமர்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மின் வணிக சேவைகள் வரையறுக்கப்பட்டுள்ள நேரக் கட்டுப்பாடுகளுடன் இயங்கலாம். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை.

திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது. இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 25 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனங்களில் குறைந்த பட்சம் 50 சதவீத பணியாளர்கள் வீட்டிலிருந்தே கண்டிப்பாக பணிபுரிய வேண்டும்.

கோல்ஃப், டென்னிஸ் கிளப் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு பயிற்சி சங்கம் / குழுமங்கள் செயல்பட அனுமதி இல்லை. எனினும், சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளுக்கான பயிற்சிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும்.

புதுச்சேரி தவிர்த்து, ஆந்திரபிரதேசம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் நபர்கள் http://eregister.tnega.org என்ற வலைதளத்தில் பதிவு செய்த விவரத்தினை தமிழ்நாட்டிற்குள் நுழையும்போது காண்பித்த பின்னரே அனுமதிக்கப்படுவர்.

வெளிநாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு விமானம் / கப்பல் மூலம் வரும் பயணியர் அனைவரும் http://eregister.tnega.org என்ற வலைதளத்தில் பதிவு செய்த விவரத்தினை தமிழ்நாட்டிற்குள் நுழையும்போது காண்பித்த பின்னரே அனுமதிக்கப்படுவர்.

தனியார் மற்றும் அரசு பேருந்துகளில், இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுவர். பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை.

வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களில், ஓட்டுநர் தவிர்த்து மூன்று பயணிகள் மட்டும் பயணிக்கவும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்கவும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :