• அமரர் கல்கியின் கல்வெட்டுகள்

டி.கே.ஸி. வயது மர்மம்!


- அமரர் கல்கி

அமரர் கல்கியின் கல்வெட்டுகள்

டி.கே.ஸி. வயது மர்மம்!

அமரர் கல்கி

சில பேர் “உங்களுக்கு வயது என்ன?” என்று கேட்டால் சொல்ல மாட்டார்கள். அதிக வயதானதாகக் காட்டிக் கொள்வதற்கு வெட்கப்படுவார்கள். தமிழ்நாட்டின் ரஸிக சிகாமணியான ஸ்ரீ டி.கே.சிதம்பரநாத முதலியார் அவர்கள் மேற்படி கூட்டத்தைச் சேர்ந்தவர் அல்ல. “உங்களுக்கு வயது என்ன?” என்று கேட்டவர்களுக்குச் சரியான பதில் சொல்லாமலே மழுப்பிக்கொண்டு வந்தார். அவர் சொல்லாதபோதிலும் எப்படியோ தமிழன்பர்கள் சிலர் அவருடைய வயதின் மர்மத்தைக் கண்டுபிடித்துவிட்டார்கள். இந்த செப்டெம்பர் முதல் வாரத்தில் அவருக்கு அறுபதாம் ஆண்டு நிரம்பி அறுபத்தோராம் வயது பிறக்கி றது என்று அறிந்தார்கள். உடனே, டி.கே.ஸி.யின் சஷ்டியப்த பூர்த்தியைக் கொண்டாட வேண்டும் என்பதாக ஒரு முயற்சி தொடங்கினார்கள். நண்பர்க ளுக்கெல்லாம் கடிதம் எழுதினார்கள். ஒரு கமிட்டியும் ஸ்தாபித்தார்கள். குறிப்பிட்ட தேதியில் கமிட்டி கூடுவதற்கு இருந்தது.

வந்துவிட்டது கோபம்!

யாருக்கு? டி.கே.ஸி. அவர்களுக்குத்தான். மேற்படி முயற்சியைப் பற்றி எப்படியோ அவருக்குத் தெரிந்துபோய்விட்டது. உடனே தொடுத்தார் சண்டை! “ஆமாம், எனக்கு அறுபது வயதாகிவிட்டது. வாஸ்தவந்தான். ஆனால் ‘நீங்கள் யார் கேட்பதற்கு? அப்படித்தான் எனக்கு அறுபது வயதாகும். நீங்கள் எதற்காக அதைக் கொண்டாட வேண்டும்? கொண்டாடினால் தெரியும் சேதி? அப்புறம் நம்முடைய சிநேகத்துக்கே ஆபத்து வந்துவிடும். ஜாக்கிரதை. கண்டிப்பாகக் கூடாது” என்று இப்படியெல்லாம் எல்லா சிநேகிதர்களுக்கும் கடிதம் எழுதினார். அதற்குக் ‘காலநிலை’ முதலிய காரணங்களையும் எடுத்துக்காட்டினார். பார்த்தார்கள் நண்பர்கள், உண்மையிலேயே மிரண்டு போனார்கள். குறிப்பிட்ட தேதியில் கமிட்டியைக் கூட்டவில்லை. “உடும்பு வேண்டாம். கையைவிட்டால் போதும்” என்கிற கதையாக டி.கே.ஸி.யின் சிநேகிதம் மிஞ்சினால் போதும் என்று சும்மா இருந்துவிட்டார்கள்.

விடாக்கண்டர்கள் பாராட்டு

ஆனால் குற்றாலத்தில் விடாக்கண்டர்களான சில தமிழன்பர்கள் இவ்வருஷத்தில் கூடியிருந்தார்கள். முக்கியமாக இவர்கள் செட்டிநாட்டுத் தமிழன்பர்கள். இவர்கள் “இருக்கட்டும் இருக்கட்டும்” என்று முணுமுணுத்துக் கொண்டே நாளை எண்ணிக் கொண்டிருந்தார்கள். டி.கே.ஸி.யும் குற்றாலத்தில்தான் இருந்தார். குறிப்பிட்ட தினம் - அதாவது அறுபத்தோராவது பிறந்த தினம் - வந்தது. நேமத்தான்பட்டி பழகி. கிருஷ்ணன் செட்டியார் முதலியவர்கள் கும்பலாக டி.கே.ஸி.யிடம் வந்தார்கள். “குமாரகோவிலுக்கு வாருங்கள்” என்றார்கள். ஸ்வாமி தரிசனத்துக்குத்தானே என்று டி.கே.ஸி. போனார். போன இடத்தில் பிடித்துக்கொண்டார்கள். தூக்கமுடியாத மாலை யைப் போட்டார்கள். விருந்தளித்துத் திணறச் செய்தார்கள். பாராட்டுக் கூட்ட மும் கூட்டினார்கள். வாழ்த்துக்களைச் சொரிந்தார்கள். படமும் எடுத்தார்கள். “இப்போது என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார்கள். “என்னத்தைச் செய்ய? அல்லது என்னத்தைத்தான் சொல்ல? அறுபது வயது நிறைந்தது. உங்கள் விருந்தினால் வயிறு நிறைந்தது. உங்கள் அன்பினால் மனமும் நிறைந் திருக்கிறது” என்றார். இவ்வளவு சாமர்த்தியமாக டி.கே.ஸி. அவர்களை மடக்கிக்கொண்டு சஷ்டியப்த பூர்த்திக் கொண்டாட்டத்தை நடத்திய செட்டியார் நண்பர்களுக்கு நாம் பாராட்டு விழா நடத்த விரும்புகிறோம்.

(கல்கி, செப்டெம்பர் 20, 1942)

Comments

கேஆர்எஸ் சம்பத் says :

ஒரு சின்ன விஷயத்தை எவ்வளவு சுவாரசியமாக , விறுவிறுப்பாக எழுதியுள்ளார் கல்கி அவர்கள் !

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :