• GLITTERS | பளபள

டவுன் சிண்ட்ரோம் குழந்தைகள் பிறக்க காரணம் என்ன?


சாந்தி கார்த்திகேயன்





பிறந்த குழந்தைக்கு டவுன் சிண்ட்ரோம் என்று சமீப காலமாக பலரும் சொல்ல கேட்டிருக்கிறோம்.

ஒரு சிசுவானது தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே, அது டவுன் சிண்ட்ரோமால் பாதிக்கப் பட்டுள்ளதா என்று கண்டறிய முடியுமா? அப்படிப் பிறந்த குழந்தைகளை வளர்ப்பது எப்படி?

-இந்த சந்தேகங்கள் குறித்து டாக்டர். தீப்தி ஜம்மியிடம் கேட்டோம்.. டாக்டர் தீப்தி ஜம்மி. மகப்பேறு மருத்துவர் மற்றும் கருவில் சிசு வளர்ச்சியை துல்லியமாக கணிக்கும் நிபுணர் மற்றும் ஆலோசகர்.

டாக்டர் தீப்தி ஜம்மி சொல்லத் தொடங்கினார்.

’’இப்போது மருத்துவம் வேகமாக முன்னேறிவருகிறது. கருவில் குழந்தையின் வளர்ச்சியை ஆரம்பத்திலிருந்தே துல்லியமாக பார்க்க முடிகிறது. முன்பெல்லாம் கர்ப்பிணிக்கு ஐந்து மாதத்தில்தான் அனாமலி ஸ்கேன் எடுப்பார்கள். அதாவது கருவில் வளரும் சிசுவின் உறுப்புகளை பார்க்க உதவும் ஸ்கேன் இது! .

ஆனால் இப்போது மூன்று மாதத்திலேயே சிசுவுக்கு. டவுன் சிண்ட்ரோம் குறைபாடு இருக்கிறதா கா என்பதை கண்டறிவதற்காக ஸ்கேன் செய்யும் முறை வந்துவிட்டது. இந்த ஸ்கேன் மூலம், கருவில் வளரும் சிசுவுக்கு குறிப்பிட்ட மரபணுக்கள், குரோமோசோம் பிரச்சனை உள்ளதா என்பதைக் கண்டறியலாம். அதிலும் துல்லியமாக குழந்தையின் கழுத்துப்பகுதியில் இருக்கும் திரவம் (nuchal translucency ) பரிசோதிக்கப்படும். இது என்.டி. ஸ்கேன் என்று அழைக்கப்படுகிறது.

இது கர்ப்பிணிக்கு 12 முதல் 13 வாரத்துக்குள் செய்ய வேண்டும். ஏனெனில் சிசு வளர வளர இந்த திரவம் குறைந்துவிடும் என்பதால், இந்த கால வரம்புக்குள் செய்ய வேண்டும்.இதனோடு சேர்ந்து மூக்குத்தண்டு வளர்ச்சியும் பார்க்கப்படும். இவை தவிர குழந்தையின் கை, கால்,இதயத்துடிப்பு, இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாய்கள் எல்லாம் பரிசோதிக்கப்படும்.

ஸ்கேன் பரிசோதனையில் ரத்தப்பரிசோதனையும் அவசியமா?

கண்டிப்பாக! ஏனெனில் ஸ்கேன் பரிசோதனையில் குழந்தையின் உறுப்புகளை பார்க்கலாம். ஆனால் அதன் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ள ரத்தப்பரிசோதனை அவசியம். சிசுவின் வளர்ச்சி குறித்து அறிந்து கொள்ள தாயின் உடலிலிருந்து மாதிரி ரத்தம் சேகரிக்கப்படும். வயிற்றில் வளரும் சிசுவின் உடல், தாயின் ஹார்மோனை ஒத்திருப்பதால் தாய்க்கு செய்யும் ரத்தப் பரிசோதனையிலேயே சிசுவின் உறுப்பு செயல்பாட்டை கண்டறிந்துவிடமுடியும்.

டவுன் சிண்ட்ரோம் என்றால் என்ன?

கர்ப்பிணி பெண்கள் முதலில் டவுன் சிண்ட்ரோம் என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 ஆம் தேதி டவுன் சிண்ட்ரோம் விழிப்புணர்வு தினமாக கொண்டாடப்படுகிறது. பொதுவாக நம் உடலில் 46 குரோமோசோம்கள் இருக்கும். அதில் 23 அப்பாவிடமிருந்தும் 23 அம்மாவிடமிருந்தும் பெறப்படுகிறது. இவை எல்லாமே ஜோடி ஜோடியாக இருக்கும். இதில் டவுன் சிண்ட்ரோம் குழந்தைகளுக்கு 21-வது குரோமசோம் ம்ட்டும் ஜோடியாக இல்லாமல் மூன்று குரோமோசோம்களாக இருக்கும். ஆகவே இது ட்ரைசோமி என்றழைக்கப்படுகிறது. ட்ரை என்றால் மூன்று என்று அர்த்தம். இந்த மூன்று குரோமோசோம்களாக இருப்பதால்தான் இந்த 21-வது செட் ட்ரைசோமி என்று அழைக்கப்படுகிறது. இதுதான் பொதுவாக பாதிப்பை உண்டாக்கும்.

டவுன் சிண்ட்ரோம் உறுதி செய்ய மேற்கொண்டு வேறேதும் பரிசோதனை உள்ளதா?

என் டி. ஸ்கேன் பரிசோதனையில் குழந்தைக்கு டவுன் சிண்ட்ரோம் இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்தால், அடுத்த பரிசோதனைக்கான ஆலோசனை செய்யப்படும். அதில் ஒன்று அம்னோசெண்டெசிஸ் டெஸ்ட்! இது எல்லோருக்கும் செய்வது கிடையாது. அதோடு இது குறித்த அச்சமும் தேவையில்லை. குழந்தையின் நஞ்சுக்கொடி, குழந்தை எங்குள்ளது என்பதை கண்டறிந்து பிறகு குழந்தையை சுற்றி இருக்கும் பனிக்குட நீர் சேகரிக்கப்படுகிறது. அதிகபட்சமாக 5 விநாடிகளுக்குள் இது சேகரிக்கப்படுகிறது.

எங்களிடம் அம்னோசெண்டெசிஸ் பரிசோதனை செய்து கொண்ட கர்ப்பிணிகள் ஒருவருக்கு கூட இது வரை உதிரபோக்கோ, வலியோ இருந்ததில்லை. மிகக் குறிந்த பட்சமாக .01 % மட்டுமே உதிரபோக்கு, வலி இருக்கலாம். இந்த பரிசோதனைக்கு பயந்து பலரும் முதல் ஸ்கேனில் சிசு வளர்ச்சி குறைபாடு இருக்கலாம் என்று சந்தேகம் கொள்ளும்போதே கருக்கலைப்பு செய்துவிடுகிறார்கள்.

உண்மையில் அந்த குழந்தை டவுன் சிண்ட்ரோம் இல்லாத குழந்தையாகவும் இருக்கலாம். கடந்த வாரம் எங்களிடம் வந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு டவுன் சிண்ட்ரோம் சந்தேகத்தால் இந்த பரிசோதனை செய்யும் போது அது நார்மல் பேபி என்ற முடிவு கிடைத்தது. அந்த கர்ப்பிணியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதனால் தான் முதல் ஸ்கேன் செய்யும் போது ஏதேனும் சந்தேகம் வந்தால் அவர்களுக்கு ஆலோசனை தருவதோடு அடுத்த பரிசோதனைக்கும் தயார் செய்கிறோம்.

ஏனெனில் இந்த குழந்தையை கருக்கலைப்பு செய்து அடுத்த முறை கருத்தரித்தாலும் அவர்கள் இந்த பிரச்சனையை எதிர்கொள்ள அதிகம் வாய்ப்புண்டு. அதனால் இந்த அம்னோசெண்டெசிஸ் அச்சம் குறித்து பயப்பட வேண்டியதில்லை என்று அறிவுறுத்துகிறோம். அதையும் மீறி அவர்கள் பயந்தால் அவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்யப்படுகிறது.

டவுன் சிண்ட்ரோம் உறுதியானால் கருக்கலைப்பு செய்யலாமா? அல்லது பெற்றுகொள்ளலாமா?

ஸ்கேன் பரிசோதனையில் டவுன் சிண்ட்ரோம் குழந்தை என்பது உறுதி செய்யப்பட்டால் நீங்கள் கருக்கலைப்பு செய்ய வேண்டியதில்லை. அந்த குழந்தைக்கு சற்று கூடுதலாக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். பெற்றோர்கள் இத்தகைய குழந்தை வளர்ப்பில் பொறுமை காண்பிக்க வேண்டும். இந்த குழந்தைகளை வளர்க்கும் முறைகள் குறித்து ஆலோசனை அளிக்க சிறப்பு நிபுணர்கள் உண்டு.

குழந்தை பிறந்ததும் குழந்தைக்கு இதய செயல்பாடு, செவிப்புலன், பார்வை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை சரிபார்க்க சோதனைகள் செய்யப்படும். மற்றபடி குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும் வகையிலான மருத்துவ ஆலோசனைகள், பரிசோதனைகளை திட்டமிட வேண்டும். ஏனெனில் இவர்கள் பேசுவதற்கும், நடப்பதற்கும் சற்று காலம் ஆகும்.

குழந்தைக்கு உடற்பயிற்சி, சிகிச்சை, பேச்சு சிகிச்சை, சிறப்பு கல்வி என வழங்குவதன் மூலம் இவர்களும் மற்ற குழந்தைகளோடு ஆரோக்கியமாக வளர்வார்கள். ‘டவுன் சிண்ட்ரோம் குழந்தை வளர்ப்பில் அரசு மற்றும் இதற்கான சங்கங்கள் உண்டு. அந்த குழுவுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் குழந்தை வளர்ப்பு சவால்களை சமாளிக்க முடியும்.

குழந்தைகளுக்கு ஒன்றும் தெரியாது என்று நினைக்க வேண்டாம். அவர்களுக்கான உணவு, ஆடை, நேரம் என எல்லாமே சுயமாக முடிவெடுக்க கற்றுகொடுங்கள். இது அவர்களது சிக்கலை தீர்க்க உதவும். அவர்களுக்கான பிரச்சனையை அவர்களே சரிசெய்து கொள்ள உதவுங்கள்.

உங்கள் தினசரி நாட்களில் அவர்களுக்கு பிரத்யேகமான நேரத்தை ஒதுக்குங்கள். குழந்தைகள் சிறப்பு குழந்தைகளாக இல்லாமல் சாதனை குழந்தைகளாக வளர்வார்கள். இந்த நம்பிக்கையை தான் நான் எங்களிடம் வரும் பெற்றோர்களுக்கு அளிக்கிறேன்’’ என்று சொல்லி முடித்தார் டாக்டர் தீப்தி ஜம்மி.

Comments

G.Ravindran says :

Quite amazing to see medical science constantly pushing new frontiers. Very useful article

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :