• அமரர் கல்கியின் கல்வெட்டுகள்

43. என்ன சேதி?


- அமரர் கல்கி

சங்கமும் தங்கமும்

“சங்கம் செய்கிறது தங்கம் செய்யாது” என்னும் பழமொழியை இதுவரை யில் நாம் கேட்டதில்லை. பம்பாய்த் தமிழ்ச் சங்கத்தார் அனுப்பியுள்ள அறிக்கையொன்றிலேதான் பார்த்தோம். மேற்படி பழமொழியையோ, புது மொழியையோ, அனுசரித்து, பம்பாய் - மாதுங்காவிலுள்ள தமிழர்கள் ஒரு தமிழ்ச் சங்கம் ஸ்தாபித்திருக்கிறார்கள். இந்த விஜயதசமியன்று ஸ்ரீ என்.என். ஐயர் அவர்களின் தலைமையில் கடந்த மேற்படி சங்கக் கூட்டத்தில் தமிழ் வளர்ச்சியைக் குறித்து அருமையான பிரசங்கங்கள் நடந்தனவாம். இப்படி அப்படி என்று கடைசியில் இமயமலையின் உச்சியிலேயே தமிழ்த் தாயின் கொடி பறக்கும் காட்சியை நம்முடைய காலத்திலேயே பார்த்து விடுவோ மென்று தோன்றுகிறது.

தீபாவளி மலர்

இமயமலையின் உச்சியில் தமிழ்க் கொடிகட்டிப் பறக்கும்போது, அதிலே இந்த வருஷத்துக் ‘கல்கி’ தீபாவளி மலரின் அட்டை பொறிக்கப்பட்டிருக்கும் என்று கருதுகிறோம். தமிழ்க் கடவுளை அட்டைப் படத்திலே தாங்கிக்கொண்டு, கலைத் தேவிக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கும் இந்த வருஷத்துக் “கல்கி” தீபாவளி மலர் உலக அற்புதங்களில் ஒன்றாக விளங்கும் என்று தோன்று கிறது.

சர்க்கார் காகிதக் கட்டுப்பாட்டின் காரணமாகப் பக்கங்கள் குறைவுதான். ஆனால் பக்கங்களின் குறைவுக்காக மலரின் விலையை இந்த வருஷம் கூட்டவும் இல்லை. குறைக்கவும் இல்லை. சென்ற வருஷத்தைப் போலவே இந்த வருஷமும் ரூ. 2-8-0 தான். இதிலிருந்து மலரில் அடங்கிய சித்திர அற்புதங்களும், விஷய அதிசயங்களும் எப்படியிருக்குமென்று நேயர்கள் ஊகித்துக்கொள்ளலாம். சொல்வது குறைவாகவும் செய்வது அதிகமாகவும் இருக்க வேண்டுமே என்பதற்காக மலரின் வர்ணனையை இத்துடன் நிறுத்து கிறோம்.

அபத்தப் பரிசு

வருஷத்துக்கு ஒருமுறை நோபல் பரிசு கொடுப்பதுபோல், வாரத்துக்கு ஒரு தடவை “அபத்தப் பரிசு” என்று ஏற்படுத்தி, அந்தந்த வாரத்திலே வெளி யான சிறந்த அபத்தத்துக்குப் பரிசு கொடுப்பதாயிருந்தால் சென்ற வாரத்துப் பரிசு நமது மாஜி வைஸராய் லின்லித்கோ பிரபுவுக்குத்தான் கொடுக்க வேண்டும்.

மனுஷர் இந்தியாவை விட்டுப்போன பிறகும் இந்தியாவின் க்ஷேமத்தை மறந்துவிடவில்லை. “இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி திடீரென்று காலமாகி விட்டால், இந்தியாவில் அராஜகமும் இரத்தக்களரியும் ஏற்படும். இந்திய மக்கள் பெரும் கஷ்டத்துக்கு உள்ளாவார்கள். ஆகையால் இந்தியாவின் நன்மைக்காக அப்படிப்பட்ட காரியத்தை பிரிட்டிஷார் செய்யக்கூடாது” என்று எச்சரித்திருக்கி றார்.

பாவம்! மனுஷர் காளை மாடுகளுடன் பழகிப் பழகி மூளை ரொம்ப ரொம்பக் கட்டையாகிவிட்டதென்று தோன்றுகிறது? இல்லாவிட்டால், பக்கத்தி லுள்ள ஐரோப்பாவில் ஒரே இனத்தையும் ஒரே நிறத்தையும் ஒரே மதத்தையும் சேர்ந்த ஜனங்கள் இப்படி இரத்தக்களரி செய்து செத்து வரும்போது, எங்கேயோ ஆறாயிரம் மைலுக்கு அப்பாலுள்ள இந்தியாவைப் பற்றி இப்படித் தமது அருமையான கண்ணீரைச் செலவு செய்து கொண்டிருப்பாரா?

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :