• JUST IN | சுட சுட

+2 தேர்வுகள் ஒத்திவைப்பு: ஆன்லைனில் கல்லூரி, பல்கலை தேர்வுகள்! தமிழக அரசு அறிவிப்பு!





தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக +2 தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா 2-ம் அலைத் தொற்று அதிகரித்துள்ளதால், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. மேலும் +2 தேர்வுகளை ஜூலை மாதம் நடத்த திட்டமிடப்பட்டது. இருப்பினும் பாதுகாப்புடன் _2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் இம்மாதம் 24-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், தற்போது பிளஸ் 2 தேர்வை தேதி குறிப்பிடாமல் அரசு ஒத்தி வைத்து அறிவித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு நேற்று அதிரடியாக மீண்டும் ஊரடங்கை அறிவித்துள்ளது. அதில் சிலவற்றுக்கு விதிவிலக்குகளை அறிவித்து இருந்தாலும், பிளஸ் 2 தேர்வை நடத்துவதில் உள்ள சிரமம் கருதி ஒத்தி வைத்துள்ளது.

அரசு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

* பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது. இருப்பினும் பிளஸ் 2 வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் மட்டும் ஏற்கனவே திட்டமிட்டபடி நடத்தப்படும்.

* கல்லூரி பல்கலைக் கழக ஆசிரியர்கள் தங்கள் வீட்டிலேயே இணைய வழியில் வகுப்புகள் நடத்த வேண்டும்.

* அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், பல்கலைக் கழகங்களின் தேர்வுகள் இணைய வழியாக மட்டுமே நடத்தப்பட வேண்டும்.

* கல்வி சார்ந்த பயிற்சி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள், இணைய வழியாக மட்டுமே பயிற்சி அளிக்க அனுமதிக்கப்படுகிறது.

* கோடைகால முகாம்கள் நடத்த தடை விதிக்கப்படுகிறது.

-இவ்வாறு அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :