• SPARKLES | மினுமினு

மெல்போர்னில் மருத்துவ வசதி!


- சிவா, மெல்போர்ன்

கடந்த ஒரு வருடமாக ’வொர்க் பிரம் ஹோம்’ தான்! அன்றும் அப்படித்தான் மாலையில் ஆபீஸ் வேலைகளை முடித்துவிட்டு, சிறிது ஓய்வு எடுக்கலாம் என்று படுக்கையில் சாய்ந்தேன். ஆனால் ஏதோ அசவுகரியாமாக உண்ர்ந்தேன். அதாவது அதிக நேரம் படுக்கவும் முடியவில்லை. அமரவும் முடியவில்லை. இப்படியே அன்றிரவு வரை நீடித்தது. இங்கு நான் சொல்ல வருவது என்னுடைய உடல் நிலையைப் பற்றியோ, அதிலிருந்து மீண்டு வந்ததையோ அல்ல!

இங்கு ஆஸ்திரேலியாவில் குறிப்பாக மெல்போர்னில் இருக்கும் மருத்துவ வசதிகளைப் பற்றி சொல்ல விரும்புகிறேன். அன்றிரவு நான் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும்போதே என் மனைவி HotDoc எனும் App மூலமாக வீட்டருகே உள்ள கிளினிக் டாக்டரிடம் மறுநாளுக்கான முதல் அப்பாயின்மென்ட் வாங்கினாள். மறூநாள் காலையில் அந்த டாகடரை காண சென்றோம்.

இங்கு முக்கியமான சிலவற்றை கூறியே ஆக வேண்டும். நான் வசிக்கும் இந்த புறநகரில் சுமார் மூவாயிரம் குடும்பங்கள் உள்ளன. எங்களுக்கு இரண்டு கிலோமீட்டர் சுற்று வட்டாரத்திலேயே ஐந்து கிளினிக்கள் உள்ளன. அதில் நான் இன்று வந்த கிளினிக்கில் ரத்தப் பரிசோதனை முதல் எம் ஆர் ஐ வரை எல்லா வசதிகளும் உள்ளது.

ஆஸ்திரேலியாவில் நீங்கள் வசிப்பவர் என்றால் உங்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளுக்கு வருடம் முழுவதும் தினமும்கூட மருத்துவரை சென்று பார்க்கலாம். அதற்குக் கட்டணம் கிடையாது. இது அந்நாட்டில் வசிக்கும் பொதுமக்களுக்காக அரசாங்கம் ஏற்படுத்தியுள்ள ‘மெடிகேர்’ வசதி!. அதிலும் ரத்தப் பரிசோதனை முதற்கொண்டு அல்ட்ரா சவுண்ட் சோதனை வரை ஆஸ்திரேலிய பிரஜைகளுக்கு அனைத்தும் இலவசம். மற்றபடி மருந்து, மாத்திரைகளுக்கு மட்டும் நாம் செலவு செய்ய வேண்டும்.

காலை மருத்துவரை சந்தித்தேன். முன்தினம் மாலை முதல் அன்றுகாலை வரை நடந்த எல்லாவற்றையும் அவரிடம் கூறினேன். எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டறிந்த அவர் உடனடியாக எனக்கு ரத்தப் பரிசோதனையும் அல்ட்ராசவுண்ட் சோதனையும் செய்து பார்க்க வேண்டும் என்றார. பின்னர் அதற்கான படிவங்களை எழுதிக் கொடுத்துவிட்டு அதில் ’அவசரம்’ என்று சிவப்பு ஸ்டாம்பிங் செய்து கொடுத்தார்.

ரத்தப் பரிசோதனை அடுத்த பதினைந்து நிமிடங்களுக்குள் முடிந்துவிட்டது. அல்ட்ராசவுண்ட் சோதனைக்கு என் முரை வருவதற்கு இரண்டு மணி நேரம் ஆனது. பின்னர் டாக்டரை சந்திக்கச் சென்றேன். டெஸ்ட் ரிப்போர்ட்கள் வந்தபிறகுதான் சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டுமென்பதால, அன்று என்னை வீட்டுக்குச் செல்ல சொல்லிவிட்டார். ‘’எமர்ஜென்ஸி என்றால் போன் செய்கிறோம்’’ என்றார்.

நானும் வீட்டிற்கு வந்து ஆஸ்திரேலியா நியூசிலாந்து 20-20 கிரிக்கெட் பார்க்கத் துவங்கினேன். அப்போதுதான் கிளினிக்கில் இருந்து எனக்கு போன் வந்தது! என்னை உடனடியாக அவசர பிரிவுக்கு ஹாஸ்பிடலுக்கு செல்ல அறிவுறுத்தினார்கள். என்னுடைய ரத்த பரிசோதனை முடிவுகளையும் அல்ட்ரா சவுண்ட் முடிவுகளையும் ஏற்கெனவே ஹாஸ்பிடலுக்கு அனுப்பி விட்டதாகவும் உடனடியாக நான் அந்த மருத்துவமனையின் அவசர பிரிவில் அட்மிட் ஆக வேண்டுமென்றார்கள். நானும் என் மனைவும் அதிர்ச்சியுற்றாலும், வெளியே காட்டிகொள்ளாமல் ஆஸ்பத்திரிக்குக் கிள்ம்பினோம்.

ஆஸ்திரேலியா வந்தபின், நான் ஹாஸ்பிடலுக்கு செல்வது இதுவே முதல்முறை. சற்று பதட்டமாக இருந்தது. உடனடியாக கிளம்பி அந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு சென்றோம். அங்கு கொரோனா செக்கப் செய்து உள்ளே அனுப்பினார்கள். எமர்ஜென்ஸி பிரிவு ரிசப்ஷனில் என்னுடைய பெயரைக் கூறியதும் ரெக்கார்டுகளை செக் பண்ணிவிட்டு, என்னை அவசர சிகிச்சைக்கு அனுமதிக்க படிவங்களை பூர்த்தி செய்ததுடன், என் கையில் சிவப்பு நிற டேப்பை கட்டினார்கள். பிறகுதான் தெரிந்தது... ஏதேனும் அலர்ஜி இருந்தால் சிவப்பு நிற டேப்பை கட்டுவார்களாம்.

அட்மிஷன் படிவங்களைப் பூர்த்தி செய்த பிறகு டாக்டர் வரும்வரையில், கத்திருக்கச் சொன்னார்கள். அடுத்த அரைமணியில் டாக்டர் வந்ததும் என்னை அழைத்தார்கள். நானும் உள்ளே சென்றேன். அவர் ஒரு தமிழ் டாக்டர். என்னை ஒருமுறை முதலிலிருந்து எனக்கு நடந்ததை கேட்டு தெரிந்துகொண்டார். பின்னர் ஒருவர் வந்து என்னை சக்கர நாற்காலியில் அமரச் சொல்லி அழைத்துச் சென்றார். அப்போது இரவு சுமார் 11 மணியாக இருக்கலாம்.

எனக்காக எமர்ஜென்சி டிபார்ட்மெண்டில் ஒரு அறை ஒதுக்கி இருந்தார்கள். நான் உடுத்திச் சென்ற உடைகளை களைந்துவிட்டு மருத்துவமனை அங்கியை அணிந்து கொள்ளச் சொன்னார்கள். பிறகு எல்லாம் மடமடவென்று நடந்தது. ரத்த அழுத்தத்தையும், சர்க்கரை அளவை பரிசோதித்தனர். ஒருவர் வந்து மூன்று tubeகளில் ரத்தம் எடுத்துச் சென்றார். சிறிது நேரம் கழித்து அங்கேயே படுக்கையிலேயே ஈசிஜி எடுத்தனர். ஒரு ஒரு மணி நேரம் கழித்து ஒருவர் வந்து சக்கர நாற்காலியில் என்னை அழைத்துச் சென்று எக்ஸ்-ரே எடுத்தனர். அன்றிரவு அப்சர்வேஷனில் வைத்துவிட்டு மறுநாள் வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள் என்று நினைத்தேன்.ஆனால் மறுநாள் எனக்கென்று ஒரு வார்டை ஒதுக்கி அங்கு அட்மிட் செய்தார்கள்.

எனக்கு ஏற்பட்ட உடல்பாதிப்பு என்னெவென்றே சொல்லவில்லையே என்று நினிக்கிறீர்களா?! இது என்னுடைய உடல்நிலை பற்றி அல்ல.. ஒரு அரசாங்க மருத்துவமனையில் ஆஸ்திரேலியவாசிகளுக்கு என்னென்ன வசதிகள் உள்ளது என்பதை மட்டுமே கூற விரும்புகிறேன்.

மறுநாள் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டதும், காலை 9 மணி அளவில் ஒருவர் சாப்பாட்டு மெனு படிவத்தைக் கொண்டு வந்து நீட்டினார். அடேயப்பா! ஸ்டார் ஓட்டல் ரேஞ்சில் பல வகை சத்தான உணவுகளின் லிஸ்ட்!. தேவையான உணவித் தேர்ந்தெடுத்து படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தேன். அன்று துவங்கி ஒரு வாரத்துக்கு மேலாக அந்த ஆஸ்பத்திரியில் தங்க வேண்டி வந்தது.

தினமும் ஆறுமுறை ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, ஆக்சிஜன் அளவு போன்றவற்றை கண்காணித்தார்கள். இவைத் தவிர தினமும் காலை 9 மணிக்கு ரத்தப் பரிசோதனையும் நடந்தது. ஒருவழியாக பத்து நாட்களுக்குப் பிறகு இறுதியாக அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தார்கள். மருத்துவர் குழுவுடன் வந்த சீப் டாக்டர் என்னிடம் எல்லாவற்றையும் விளக்கி கூறினார்.

இந்த இடத்தில் நான் மருத்துவமனையைப் பற்றி அதுவும் அரசாங்க மருத்துவமனை பற்றி கூறியே ஆக வேண்டும். மேலே உள்ள இந்த கேஸி மருத்துவமனையில்தான் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். ஆனால், நம் நாட்டுடன் இவற்றை ஒப்பிட வேண்டாம் என்று தயவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஒரு அரசாங்க மருத்துவமனையில் இப்படி 8 பைவ் ஸ்டார் ஓட்டலுக்கு நிகரான சர்வீஸூம் தரமான சிகிச்சையும் நடந்தது. இதுமட்டுமல்ல.. டிரான்ஸ்போர்ட் வசதி இல்லாமல் உயிருக்கு போராடும் நிலையில் எந்தவொரு நோயாளியையும் தகவல் தெரிவித்தால் இலவசமாக ஹெலிகாப்டரில் அழைத்து வரும் வசதியும் உண்டு. இவை எல்லாமே சாதாரண கூலித் தொழிலாளர்கள் முதற்கொண்டு முதலமைச்சர் வரை அனைவருக்கும் இலவசமாக கிடைக்கப் பெறும்.

சரி.. என்னுடைய அறுவை சிகிச்சைக்கு வருகிறேன்..

அன்று மாலை 7 மணி அளவில் அறுவை சிகிச்சை மருத்துவர் வந்து அன்றிரவு எனக்கு அறுவை சிகிச்சை என்ற தகவலைச் சொல்லி சென்றார். அதன்படி இரவு 8.15-க்கு என்னை ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் செல்ல ஒரு ரஷ்யப் பெண்மணி வந்திருந்தார். நான் குளிரில் மெல்லியதாக நடுங்குவதைக் கண்டு உடனடியாக சென்று அடர்த்தியான சூடான கம்பளிப் போர்வையை எடுத்து வந்து என் மீது முழுவதுமாக போர்த்திவிட்டு நான் படுத்திருந்த கட்டிலிலேயே ஆபரேஷன் தியேட்டர் நோக்கி அழைத்துச் சென்றார். ஆபரேஷன் தியேட்டருக்கு செல்லும் வழி ஹாலிவுட் சினிமாக்களில் வருவது போன்ற அண்டர்கிரவுண்ட் வழி! இறுதியாக ஒரு அறைக்குள் என்னை விட்டு அந்த ரஷ்ய பெண்மணி வாழ்த்துக்கள் கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.

பிறகு மயக்க மருந்து கொடுக்கும் டாக்டர் வந்து எல்லாவற்றையும் விசாரித்து என்னுடைய உயரம், எடை இவைகளை கேட்டு சரிபார்த்து விட்டு சென்றார். பிறகு ஆபரேஷன் தியேட்டருக்குள் அழைத்துச் சென்றனர். அங்கு என்னைப் பற்றிய விபரங்களை மீண்டும் ஒருமுறை கேட்டு தெரிந்துகொண்டு எனக்கு மயக்க மருந்து கொடுக்கப் போவதாக கூறி என்னுடைய சம்மதத்தைப் பெற்றுக் கொண்டனர். அவ்வளவுதான் எனக்குத் தெரியும்.

மீண்டும் எனக்கு லேசாக நினைவு தெரியும்போது, யாரோ என் பெயர் சொல்லி அழைப்பது கேட்டுக் கண்விழித்தேன். மயக்க மருந்து டாக்டர் நின்று கொண்டிருந்தார். ’’ஆபரேஷன் சக்ஸஸ்’’ என்று கையை உயர்த்த, எனக்கு ஆபரேஷன் முடிந்து விட்டதா என்று ஒரே ஆச்சரியம். அந்த டாக்டர் குட்நைட் சொல்லி விடைபெற்றுச் சென்றதும், ‘’நீங்கள் தென்னிந்தியரா?’’ என்று ஒரு குரல் கேட்டது. ஒரு இளம் ந்ர்ஸ் நின்றிருந்தார்.

நான் ஆம் என்று தலையசைத்தேன். அவர் தனக்கு சொந்த ஊர் கேரளா என்றும், ஆனால் வளர்ந்தது எல்லாம் கர்நாடகாவின் பெல்காம் என்றும் கூறினார். ’’குடிக்க ஜூஸ் அல்லது ஐசிபோல் வேண்டுமா?’’ என்று கேட்டார். எனக்கு ஐசிபோல் சுவைக்க வேண்டும் போல் இருந்ததால், அதை கேட்டு வாங்கி நன்றி கூறினேன்.

அந்த மருத்துவமனையில் நான் இருந்தவரை ஐந்து இந்திய நர்ஸ்கள் எனக்கு பணிவிடை செய்தனர். எல்லோருமே கேரளாவில் இருந்து வந்தவர்கள். மூன்று தமிழ் டாக்டரகளைப் பார்த்தேன். ஆஸ்பத்திரியின் 90 சதவிகித சமையலறை வடஇந்தியர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. எந்தத் தொழிலுமே கேவலம் இல்லைதான் என்றாலும், அங்கு கிளீனர்களாக குஜராத்திகளைப் பார்த்தபோது மனது வலித்தது.
Comments

லதா ஆனந்த் says :

ஆஹா. இவ்வளவு வசதிகளா? மலைப்பாக இருக்கிறது!

மா.சுசீலா says :

மெல்போர்னில் மருத்துவம் மெல்லிய தென்றல்... இங்கோ பல சமயங்களில் புயல் காற்று...

Anuradha says :

Very nice to know about the facilities available in a government hospital and also about the large number of Indians serving in different capacities.

R BALA says :

நம்பவே முடியலை நமக்கு கிடைக்கலேன்னாலும் யாருக்கு கிடைத்தாலும் இறைவனுக்கு நன்றி .

அனுராதா சேகர் says :

சாமி..அடுத்த ஜன்மத்துல நா கங்காருவா பொறந்தாவது இந்த வசதியெல்லாம் பெறணும்..

G.Ravindran says :

Medical facilities for Australians are really impressive. However, let`s not forget that India is a sought-after destination for `medical tourism`. Yes, universal Healthcare of the highest standards in India is still far away but we will eventually get there....

ச.இரவிந்திரன் says :

இவ்வளவு வசதிகள் ஆச்சிரியமாக உள்ளது அரசு மருத்துவமனை இன்னும் ஆச்சிரியம்

SUKUMAR says :

இவ்வளவு வசதிகளா? ஆச்சரியமாக உள்ளது

Durairaj says :

I think most of the developed countries provide excellent helthcare and education faculty free of cost. I am seeing such facilities are being made by present Delhi government. Jai hind

Jayanti Sundar Rajan says :

Incredible! Such a vast facilities are available in a Government Hospital , is very much interesting to know...

தொ.ச.சுகுமாறன் says :

ஆஸ்திரேலியா நாடு ஜனத்தொகை அதிகமில்லாவிட்டாலும்..பத்து மடங்கு பரப்பளவு நம் நாட்டை விட அதிக பரப்பளவு கொண்ட நாடு.. செல்வம் கொழிக்கும்...ஊழலற்ற.. அதிகாரம் கொண்ட வளா்ச்சிப்பெற்று நல்ல கட்டமைப்பைக்கொண்டநாட்டில் மக்களின் நலன் காக்க அருமையான வசதிகளைக்கொண்டுள்ள மருத்துவமனைகளைக்கொண்டிருப்பதோடு நல்லிதயம் கொண்ட மருத்துவர்கள்..மற்றும் செவிலியர்கள் ஆகியோா்களின் அணுகுமுறையும் போற்றதலுக்குரியது..நம் நாட்டை விட்டு எந்த நாட்டிற்கு சென்றாலும்.. நம் மக்களுக்கு அந்நாட்டிலிலுள்ள வசதிகள்..வாய்ப்புக்கள் பிரமிப்பை ஏற்படுத்தும்..நம் நாட்டின் ஜனத்தொகையோ 145 கோடி.. நாட்டின் பரப்பளவுமிகவும் குறைவு.. இருக்கும் வளங்களை எடுக்கக்கூடாது என்ற பிடிவாதமான போராட்டங்கள்.. இவைகளெல்லாம் அல்லாத நாட்டின் செழிப்பும்..அரவணைப்பும்.. அங்குள்ள சுகாதார மேம்பாடுகளும்.. அவர்களின் இன்முகம் கொண்ட வரவேற்பும் வாா்த்தைகளும் யாரைத்தான் பிரமிக்க வைக்காது.. நாம் இங்கிருக்கும் போது நம்மால் காட்டமுடியாத அன்பை அந்த நாட்டில் பணிபுரிகின்ற நம் இந்திய மக்கள் காட்டும் போது நமக்கு கூடுதல் பெருமையாக உள்ளது. வாழ்ந்தால் இது போன்ற நாட்டில் வாழ வேண்டும் என்ற எண்ணம் படிக்கும் ஒவ்வொருவருக்கும் தோன்றாமலிருக்காது.நன்றி.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :