• GLITTERS | பளபள

புத்தாண்டு பிறந்தல்லோ..!


- ரேவதி பாலு





இன்று தமிழ் புத்தாண்டுத் தொடக்கமான பிலவ வருடம் பிறக்கிறது. அதுபோல மலையாள வருஷப் பிறப்பும் இதே நாளில் தொடங்குகிறது. இது விஷு புண்யகாலம் என்று அழைக்கப்படுகிறது. மலையாள வருட மேஷ மாசத்தின் முதல் நாளே விஷு வருடப்பிறப்பு என்று அழைக்கப்படுகிறது.

விஷூ பண்டிகையையொட்டி சபரிமலை நடை திறப்பு உண்டு. விஷுவுக்கு இருமுடி கட்டிக் கொண்டு விரதம் இருந்து ஐயப்பனைக் காண சபரி மலை போகிறவர்கள் ஆயிரக்கணக்கில் இருப்பார்கள்.

விஷு பண்டிகையின் விசேஷமே, வீட்டில் விஷுக்கணி என்று பூஜையறையில் மங்கலப் பொருட்களை வரிசையாக வைத்து காலையில் எழுந்ததும் அதில் கண் முழிப்பதுதான். விஷுவிற்கு முதல் நாள் இரவு கணியை அலங்கரிப்பதே மிகவும் சுவாரசியமாக இருக்கும். முதல் நாள் மாலையே பூஜையறையில் மாக்கோலமிட்டு அழகுபடுத்துவார்கள். வாசல் நிலையின் இருபுறமும் தென்னம்பாளையைக் கட்டித் தொங்கவிடும் வழக்கமும் சில வீடுகளில் உண்டு. ஓணம் திருநாளுக்கு அலங்கரிப்பதைப் போல வாசலிலும் அதிகாலையில் பூக்கோலம் போடுவார்கள். அன்றிரவு விஷுக்கணி வைக்கும் கோலாகலம் ஆரம்பிக்கும். வசந்தகாலம் ஆரம்பிப்பதால் மஞ்சள் நிற சரக்கொன்றை பூக்கள் எங்கும் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கும்.

சரம் சரமாக அந்தப் பூக்கள் மரத்தில் தொங்குவதைப் பார்ப்பதே கண்களுக்கு விருந்தாக இருக்கும். அந்தப் பூச்சரங்களை பறித்துக் கொண்டு வந்து பூஜையறையில் விஷுக்கணியில் வைப்பார்கள்.

பூஜையறையில் தெய்வங்களின் படங்கள் பின்புலமாயிருக்க, அதன் முன்னே பெரிய நிலைக் கண்ணாடியை வைப்பார்கள். அந்தக் கண்ணாடிக்கு ஒரு முழு நீள பூமாலை போட்டு, நீளமான தங்க செயின் அணிவித்திருப்பார்கள். இதைத் தவிரவும் அவரவர் வசதிக்கேற்ப தங்க நெக்லஸ், அட்டிகை என்று எதை வேண்டுமானாலும் நிலைக்கண்ணாடிக்கு அணிவிக்கலாம். ஒரு தேங்காயை உடைத்து கண்ணாடியின் இரு பக்கங்களிலும் தேங்கா மூடிகள் வைக்கப்படும். தேங்கா மூடிக்குள், குருவாயூரப்பன் டாலர், சின்னச் சின்ன மோதிரம் போன்ற தங்க நகைகள், வெள்ளிக் காசுகள் இட்டு நிரப்பப்படும். தேங்கா மூடிகளுக்கு இடைப்பட்ட இடத்தில் புத்தம் புது ரூபாய் நோட்டுக்கள், நாணயங்கள் ஆகியவை தனித்தனியாக ஒரு வெள்ளிக் கிண்ணத்தில் வைக்கப்படும்.

அதன் எதிரே ஒரு வாழை இலை அல்லது தாம்பாளத்தில் அரிசியைப் பரப்பி மாக்கோலத்தின் நடுவில் வைப்பார்கள். அதன் இருபுறமும் காய்கனி வர்க்கங்கள் வைக்கப்படும். பிரதானமாக, பழுத்த வெள்ளரிக்கா, மாங்கா, மாம்பழம், சக்கைப் பழம், ஒரு டஜனுக்குக் குறையாமல் நேந்திரன் வாழைப்பழங்கள் வைக்கப்படும்.

இதெல்லாம் பாரம்பரியமாக வைக்கப்படுபவை. இதைத்தவிர காலத்திற்குத் தகுந்தாற்போல, பச்சை திராட்சை, ஆப்பிள், கொய்யா போன்ற பழவகைகளும் அடுக்கப்படும். அத்துடன் ஒரு சிறிய தட்டில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம் போன்ற மங்கலப் பொருட்கள் வைக்கப்படும்.

இப்போது நிலைக்கண்ணாடிக்கு இருபக்கங்களிலும், மொழுக்கென்று கண்ணாடி உயரத்திற்கு இருக்கும் பாலக்காட்டு விளக்குகளை காலையில் ஏற்றி வைத்தால் விஷுக்கணி ரெடி!

அதிகாலையில் வீட்டுத் தலைவி முதலில் எழுந்து தன் கண்களை மூடிக் கொண்டு மெதுவாக நடந்து பூஜையறைக்கு வந்து நமஸ்கரித்து அப்படியே கண்களைத் திறந்து நிலைக்கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போது கண்ணாடிக்குப் போடப்பட்டிருக்கும் பூமாலையும், தங்க நகைகளும் அந்த அம்மாள் கழுத்திலிருப்பது போலத் தோற்றமளிக்கும். கண்ணாடிக்கெதிரே வைக்கப்பட்டிருக்கும் சகல விதமான ஐஸ்வர்யங்களும், மங்கல பொருட்களும் கண்ணாடியில் தெரிய, சகல சௌபாக்யங்களுடன் தன்னைப் பார்த்துக் கொள்வார்.

குருவாயூரப்பன் டாலர், வெள்ளிக் காசுகளைக் கண்களில் ஒற்றிக் கொண்டு மிகுந்த சந்தோஷத்துடன், இந்த வருடம் முழுவதும் இதே போல எல்லா பாக்கியங்களும் கிட்ட வேண்டும் என்று ‘எண்டே குருவாயூரப்பா! என்னைக் காத்து ரட்சி!‘ என்று அந்த கிருஷ்ணனை அன்போடு விளித்து வேண்டிக்கொள்வார்கள்.

பிறகு வீட்டுத் தலைவி, தன் கணவர், பிள்ளைகளை கண்களைப் பொத்தி அழைத்து வந்து, விஷுக்கணி காணச் செய்வாள். விஷூ அன்று கண் முழிப்பதே அஷ்ட ஐஸ்வர்யங்கள், மங்கலப் பொருட்களில் தான் என்பதால் அந்த வருடம் முழுவதும் நன்றாக இருக்கும் என்பது ஐதீகம். ‘கணி காணணும் கிட்டியா?‘ என்று வீட்டுக்கு வரும் உறவினர்களையும் உபசரித்து விஷுக்கணி காண வைப்பார்கள்.

எல்லோருக்கும் புத்தாடை நிச்சயம் உண்டு. அன்று வீட்டிலுள்ள பெரியவர்களுக்கு, சிறியவர்கள் நமஸ்காரம் செய்து, ’விஷூக்கணி நீட்டம்’ என்று சொல்லப்படும் பணத்தை ஆசிர்வாதமாக வாங்கிக் கொள்வார்கள்.

மலையாள பண்டிகைகளில் தமிழ் நாட்டைப் போலவே சாப்பாட்டு விசேஷங்கள் உண்டு. சதயம் என்று விருந்து சாப்பாட்டைச் சொல்வார்கள். நிச்சயமாக, ஒரு இடிச்சுப்புழிந்த பாயசம் என்று சொல்லப்படும் தேங்காப்பால் பயசம், சக்கைப் பிரதமன் அல்லது பாலடைப் பிரதமனோ இருந்தால் தான் விஷு சதயம் (விருந்து சாப்பாடு) என்று ஒப்புக் கொள்வார்கள். இத்துடன் அவியல், பப்படம், மாங்கா கறி, கடுகு மாங்கா ஊறுகா, காராமணித் துவரன், கூட்டான் என்னும் அரைத்து விட்ட சாம்பார், பச்சடி, மொளகூட்டல் கண்டிப்பாக உண்டு.

ஒவ்வொருவர் வீட்டிலும் பல எண்ணிக்கைகளில் சாப்பாட்டு வகைகள் கண்ணுக்கு அலங்காரமாகவும் நாக்குக்கு சுவையாகவும் இலையில் பரிமாறப்படும். விருந்தினர்கள் வருகை அன்று வீடுகளில் களை கட்டும். புது வருஷத்திற்கும் சகல சௌபாக்கியங்களுக்கும் கட்டியம் கூறும் மங்களகரமான பண்டிகை ‘விஷு’. இது மலையாளக் குடும்பங்களில் மிக விமர்சையாக, குதூகலமாகக் கொண்டாடப்படும்.

இன்று புத்தாண்டு தினத்தில் நாம் அனைவரும் இதேபோல சகல சவுபாக்கியங்களும் கிடைக்கப் பெறுவோம்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :