• TRENDING | பர பர

எங்களுக்கு அதிகம் வேலை கொடுக்காதீர்! கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தில் எமதர்மன்!





உத்தரப்பிரதேசத்தில், எமதர்மராஜா போல் வேடமணிந்த ஒருவர் மக்களிடையே கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

கொரோனாவின் தாக்கம் முன்பிருந்ததைவிட, தற்போது 2-வது அலையில் படுவேகமாக பரவி வரும் நிலையில், மக்கள் எந்த அச்சமுமின்றி, போதிய விழிப்புணர்வு இல்லாமல், பொதுஇடங்களில் கூட்டமாகவும், சமூக இடைவெளி கடைபிடிக்காமலும், மாஸ்க் அணியாமலும் சென்று வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு குறித்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில், உத்தரப்பிரதேசத்தின் மொரதாபாத்தில், கலைஞர் ஒருவர் எமதர்ம ராஜா வேடமிட்டு, கொரோனா பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்திய விதம் அனைவரையும் கவர்ந்து வருகிறது.

ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் உறுப்பினராக இருக்கும் விக்கி என்ற கலைஞர்தான், எமதர்மராஜா போல் வேடமணிந்து, மக்களிடையே கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். திரைகளில் நாம் பார்த்து வந்த எமனைப் போல், ஆடைகளும், ஆபரணங்களும் அணிந்தபடி, கையில் கடாயுதத்துடன், மாஸ்க் அணிந்தபடி, தெரு வீதிகளில் கம்பீரமாக உலா வருகிறார்.

அவர் கொரோனா விழிப்புணர்வு வாசகங்களை இந்தியில் எழுதிவைத்தபடி, `பூலோக மக்களே! எமலோகத்தில் உள்ள எங்களுக்கு அதிக வேலை கொடுக்காதீர்கள். கட்டாயமாக மாஸ்க் அணிவதோடு, சமூக இடைவெளியை கடைபிடியுங்கள்` என வேண்டுகோள் விடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

இந்து மத நம்பிக்கை அதிகம் கடைபிடிக்கப்படும் உத்தரப்பிரதேச மாநிலத்தில், இந்த வித்தியாச விழிப்புணர்வு முயற்சி, அங்குள்ள மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :