• JUST IN | சுட சுட

திமுகவுக்கு அளித்த வாக்குகள் பாஜகவுக்கு போயிற்று: ஸ்டாலின் குற்றச்சாட்டு!





தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் கடந்த செவ்வாயன்று (ஏப்ரல் 6) நடந்து முடிந்தது. இந்நிலையில், ஆவடி, விருதுநகர், திருவையாறு, நாகர்கோவில் ஆகிய ஊர்களில் வாக்குச்சாவடிகளில் மக்கள் திமுகவுக்கு அளித்த வாக்குகள் பாஜகவுக்கு போய் சேர்ந்தன என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

கொரோனா தொற்றுக்கிடையிலும் கழகத்தினரும், கூட்டணிக் கட்சியினரும் தேர்தல் பணிகளை சிறப்பாக ஆற்றியது பாராட்டுதலுக்குரியவை.

ஆனால், ஆவடி, விருதுநகர், திருவையாறு, நாகர்கோவில் வாக்குச் சாவடிகளில் உதயசூரியனுக்கு அளித்த வாக்கு தாமரை சின்னத்துக்கு விழுந்தது அதிர்ச்சிஅளிக்கிறது.

மேலும் வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றது.. ஒட்டன்சத்திரம் மற்றும் மானாமதுரை தொகுதிகளில் நடந்த அத்துமீறல்கள் என தமிழகத்தின் பல பகுதிகளிலும் புகார்கள் எழுந்துள்ளன.

இந்த அதிகார துஷ்பிரயோகத்தையும், அராஜகத்தையும் தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும், தோழர்களும் துணிச்சலுடன் எதிர்கொண்டு இந்தத் தேர்தல் களத்தில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியிருப்பது, ஜனநாயகத்தில் நம் கூட்டணிக் கட்சியினர் வைத்துள்ள நம்பிக்கைக்குப் பொருத்தப்பாடாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

ஆகவே மே 2-ஆம் தேதி வரை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ள மையங்களைக் கவனமாகப் பாதுகாத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அந்த மையங்களில் நடைமுறையில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், சி.சி.டி.வி. கேமிராக்களின் செயல்பாடுகள், அங்கு பணியிலிருப்போர் தவிர வெளியாட்களின் நடமாட்டங்கள், யாரேனும் அத்துமீறி அந்த மையங்களுக்குள் நுழைகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும்.

-இவ்வாறு தன் அறிக்கையில் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :