• SPARKLES | மினுமினு

‘மண்டேலா’ பட விமர்சனம்!


- ராகவ் குமார்





மறைந்த சினிமா இயக்குனர்கள் கே.பாலச்சந்தர், பாலுமகேந்திரா, மஹேந்திரன் போன்ற டைரக்டர்கள் இப்போது இல்லையே என்ற ஏக்கத்தைப் போக்கும் வகையில் சில தமிழ் படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இது போன்ற ஒரு படம்தான் ‘மண்டேலா’.

ஜாதி, பொருளாதார ஏற்றத்தாழ்வு, தேர்தல் அரசியல் இதை மூன்றையும் ஒரு முக்கோண காதல் கதையில் சொல்லி வெற்றி பெற்று உள்ளார் டைரக்டர் மடோனா அஸ்வின்.

பஞ்சாயத்து தலைவரான சங்கிலி முருகனுக்கு வெவ்வேறு ஜாதி மற்றும் ஊர்களை சேர்ந்த இரு மனைவிகள்! இந்த இருவருமே தத்தம் மகன்களை தலைவராக்க சங்கிலி முருகனை வற்புறூத்த அவர் அதை ஏற்கவில்லை. அதனால் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க முடிவாகிறது. இரு தரப்புக்கும் சம அளவு வாக்குகள் கிடைக்கக் கூடும் என்ற நிலை. அதிகப்படியாக அதிகப்படியாக ஒரேயொரு வாக்கு யாருக்குக் கிடைக்கிறதோ அவரே வெற்றியாளராகும் நிலை!

இச்சமயத்தில்தான் இருதரப்புக்கும் நெல்சன் மண்டேலா ஞாபகம் வருகிறது. ஊர்க்காரர்களால் இளிச்சவாயன் என்று அழைக்கப்படும், முடி திருத்தும் பணி செய்யும் நெல்சன் மண்டேலாவின் வாக்கை இரு தரப்பினரும் பயன்படுத்தி கொள்ள நினைக்கிறார்கள். மண்டேலா கேட்கும் அனைத்தையும் செய்து தருகிறார்கள். பணம் கொடுக்கிறார்கள், புதிய முடி திருத்தும் கடை வைத்துத் தருகிறார்கள்.

தன் ஒரு வோட்டின் மகத்துவத்தை புரிந்து கொண்ட மண்டேலா, இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தனது ஒரு வாக்கினை பயன்படுத்தி இரு தரப்பினரிடமும் கழிப்பறை, சாலை வசதி, பள்ளி கூடம் என கிராமத்திற்கு தேவையான அனைத்தையும் செய்து கொள்கிறார்.

தேர்தல் நாள் வருகிறது. ஒரு தரப்பு மண்டேலாவை தீர்த்து கட்ட முயல்கிறது. மண்டேலா தப்பித்தாரா? யாருக்கு ஓட்டு போட்டார் என்பது மீதி கதை!

நெல்சன் மண்டேலாவாக யோகி பாபு. முடி திருத்தும் நபராக நடிப்பை செதுக்கி நடித்து இருக்கிறார். ஜாதிய அவமானங்களை கடந்து போகும் போதும், என் ஓட்டை யாருக்கு வேண்டுமானாலும் போடுவேன் என்று கம்பீரமான தொனியில் சொல்லும் போதும், அட போடவைக்கிறரர். சோகத்தை மௌனமாக கடக்கிறார். சங்கிலி முருகன் வீல் சேரில் அமர்ந்தவாறே உடல் மொழியில் அசத்தி இருக்கிறரர்.

சங்கிலி முருகனின் மகன்களாக வருபவர்கள், போஸ்ட் ஆஃபிஸில் வேலை செய்யும் பெண், ஊர் மக்கள் என நடித்த அனைவரும் வட்டார மொழியில் வாழ்ந்து இருக்கிறார்கள். ஓட்டுக்கு பணம் வாங்குவதால் நாம் ஆட்சியாளர்களை கேள்வி கேட்கும் உரிமையை இழந்து விடுகிறோம் என்பதை நெற்றி பொட்டில் அடித்தார் போல் சொல்லி உள்ளது இப்படம். வாக்கு அரசியல் மூலமாகதான் அடிப்படை தேவைகளையும், உரிமைகளையும் பெற முடியும் என்பதை பிரச்சாரமாக இல்லாமல் படமாக சொல்லி இருக்கிறார் டைரக்டர்.

இந்த தேர்தல் நேரத்தில் ‘மண்டேலா’ படம் அல்ல. பாடம்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :