• அமரர் கல்கியின் கல்வெட்டுகள்

42. ஓமந்தூருக்கு ஜே!


- அமரர் கல்கி

சமீபத்தில் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட அமரர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பற்றி 1948ல் கல்கி எழுதிய கட்டுரை இது.

சென்ற வருஷம் ஏப்ரல் மாதத்தில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் சென்னை மாகாணப் பிரதமரானபோது எல்லாரும் எத்தனையோ சந்தேகங்களுக்கு உள்ளானார்கள். “இவருக்கு இங்கிலீஷ் தெரியாதே? நிர்வாக அனுபவம் இல்லையே? இவர் எங்கே இராஜ்ய பாரம் செய்யப் போகிறார்? எத்தனை நாள் உத்தியோகம் பார்க்கப் போகிறார்?” என்று தலையை ஒரே அசைப்பாய் அசைத்தார்கள். அவர்களுடைய சந்தேகத்துக்கெல்லாம் ‘டிமிக்கி’ கொடுத்து விட்டு ஓமந்தூர் ரெட்டியார் இராஜ்ய பாரம் செய்து வருகிறார். நன்றாகவும், திறமையாகவும் நிர்வாகம் நடத்தி வருகிறார். ஓமந்தூரின் நிர்வாகத்துக்கு மலை போல வரும் அபாயங்கள் எல்லாம் பனிபோலப் பறந்து விடுகின்றன.

சென்னைச் சட்டசபையில் ஸ்ரீ கோபால் ரெட்டியார் சென்ற வாரம் சமர்ப்பித்த சென்னை மாகாண பட்ஜெட்டைப் பார்க்கும்போது யாரும் மூக்கில் விரல் வைத்து அதிசயப்படாமல் இருக்க முடியாது.

பழைய மந்திரி சபையைப் போல மீன மேஷம் பாராமல், தயங்காமல், தடுமாறாமல் சென்னை மாகாணம் முழுமைக்கும் மது விலக்கைக் கொண்டு வரப் போவதாகச் சென்ற வருஷம் கனம் ஓமந்தூர் ரெட்டியார் தெரியப்படுத்தினார். அந்தப்படியே வரப் போகிற அக்டோபரிலிருந்து சென்னை நகரம் உள்பட மாகாணம் முழுவதும் மதுவிலக்குச் செய்ய இந்த வருஷ பட்ஜெட்டில் திட்டம் போட்டிருக்கிறது. ஆக மொத்தம் மதுவிலக்குச் சட்டத்தினால் சென்னை மாகாணத்தின் வருமானத்தில் 18 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது.

அப்படியிருந்தும், சென்னை மாகாணத்தின் வரவு செலவுத் திட்டம் மிகவும் திருப்திகரமான நிலைமையில் இருந்து வருகிறது.

1948-49ல் சென்னை மாகாணத்தின் உத்தேச வருமானம் ரூ. 50 கோடி 32 லட்சம் கையிருப்பிலிருந்து ரூ. 5 கோடி 62 லட்சம். ஆக மொத்தம் வரவு ரூ. 55 கோடி 94 லட்சம். உத்தேசச் செலவு ரூ. 55 கோடி 93 லட்சம்.

ஒரு பெரிய இனத்தில் பதினெட்டுக் கோடி ரூபாய் வருமானம் நஷ்டமாகிவிட்ட பிறகும் மாகாண சர்க்காரின் செல்வநிலையில் ஒரு குறையும் ஏற்படவில்லை.

மது விலக்கினால் ஏற்படும் வருமான நஷ்டத்தோடு மதுவிலக்கை நிறைவேற்றவும் அதிகப்படி செலவு ஆகிறது.

1942 – 43ல் இம் மாகாணத்தில் கல்விக்காகச் செலவு செய்த தொகை மூன்று கோடி ரூபாய்.

1948-49ல் கல்விக்காகச் செலவு செய்யும் தொகை எட்டுக் கோடி ரூபாய்.

இப்படியாகப் பல பொதுநலத் திட்டங்களுக்குக் கோடிக்கணக்காக அதிகப் பணம் செலவு செய்தும் மாகாண பொக்கிஷம் நல்ல நிலைமையில்தான் இருக்கிறது. எடுக்க எடுக்கக் குறையாத அட்சய பாத்திரம்போல் இருக்கிறது. இந்தியவில் மற்ற எந்த மாகாணத்தையும்விடச் சென்னை மாகாணத்தின் பொருள் நிலைமை செழிப்பென்று சொல்லக்கூடும்.

வரப்போகும் வருஷத்தில் ஏற்கெனவே கையிருப்பிலுள்ள நிதியிலிருந்து ஐந்து கோடி சொச்சம் ரூபாய் எடுத்துக்கொண்டுதான் வரவு செலவைச் சரிக்கட்டுகிறார்கள். ஆனால் ஐம்பது கோடி வரவு செலவுக்கு ஐந்து கோடி 62 லட்சம் கையிருப்பிலிருந்து எடுப்பதில் தவறு ஒன்றுமில்லை. அட்வைஸரி கவர்ன்மெண்டு நடந்தபோது பின்னால் மதுவிலக்கு நடத்துவதற்கென்று சேர்த்து வைத்த கையிருப்புத்தான் இது. ஐந்து கோடி 62 லட்சம் ரூபாய் கட்டாயம் எடுத்துக் கொள்ளப்படும் என்பதும் நிச்சயமில்லை. சென்ற வருஷத்திலும் கையிருப்பிலிருந்து எடுத்துக் கொள்வதாகத் திட்டம் போட்டிருந்தார்கள். ஆனால் எடுப்பதற்குப் பதிலாகக் கையிருப்பு நிதியில் மேலும் பணம் சேர்த்தார்கள். அந்தப்படியே ஒருவேளை, வருகிற வருஷத்திலும் நடைபெற லாம்.

மதுவிலக்கு மட்டுமல்லாமல் குதிரைப் பந்தயத்தையும் ஒழிக்கப் போகிறார்கள். அதிலும் வருமான நஷ்டம் வரப் போகிறது.

இப்படிச் சமூக வாழ்க்கையில் தூய்மைப்படுத்துவதற்காகப் பல செல வினங்களைக் கைவிட்டும், மக்களின் முன்னேற்றத்துக்கான பல புதிய செலவுகள் மேற்கொண்டும் சென்னை சர்க்காரின் பொக்கிஷம் நல்ல நிலைமையில் இருக்கிறது.

“மதுவிலக்குச் செய்தால் ஓட்டையாண்டியாகிவிடுவார்கள்”, “இன்ஸா ல்வெண்ட் கொடுத்துவிடுவார்கள்” என்றெல்லாம் துக்கிரிவாக்குச் சொன்னவர்களின் ஜோசியம் பலிக்கவில்லை.

ஆனாலும் மதுவிலக்குப் பிடியாதவர்கள் இன்னமும் குறை கூறுவார்கள். “அடாடா! கலால் வருமானம் பதினெட்டுக் கோடியும் இருந்தால் இன்னும் எவ்வளவோ பொதுநன்மைக்குரிய காரியங்கள் செய்திருக்கலாமே” என்பார்கள்.

உண்மையில் மதுவிலக்கைப் போல் அவ்வளவு சிறந்த பொது நன்மைக்கான காரியம் வேறு ஒன்றும் கிடையாது. பூரண மது விலக்கினால் குறைந்தது இருபது லட்சம் மக்கள் கொடிய அரக்கனின் வாயிலிருந்து மீட்கப்படுகிறார்கள். நான்கு லட்சம் வீடுகளில் மங்கள தீபம் ஏற்றி வைக்கப்படு கிறது. நாட்டைப் பிடித்த ஒரு பெரும் பீடை தொலைகிறது.

மதுவிலக்கினால் சர்க்கார் பதினெட்டுக் கோடி ரூபாய் நஷ்டம் அடை கிறார்கள் என்றால், சமூகத்தில் மிகவும் தீனர்களான மக்களின் கையில் ஐம்பது கோடி ரூபாய் மிஞ்சுகிறது என்று வைத்துக் கொள்ளலாம். இதைக் காட்டிலும் பொது நன்மைக்குரிய திட்டம் வேறு என்ன இருக்க முடியும்?

வரவு செலவுத் திட்டம் சட்டசபையில் விவாதிக்கப்படும்போது சர்க்கார் பேரில் அங்கத்தினருக்கு உள்ள குறைகளையெல்லாம் எடுத்துச் சொல்வது வழக்கம். சென்னைச் சட்டசபையிலும் சில அங்கத்தினர் பிரதம மந்திரியின் பேரில் புகார் கூறினார்கள். “சட்டசபைக்குப் பிரதமர் வருவதில்லை”, எம்.எல். ஏ.க்களுக்குச் சட்டென்று பேட்டி கொடுப்பதில்லை” - இவைதான் புகார்கள். மற்றபடி “நிர்வாகம் ஊழல்” என்றோ, “பொதுப் பணம் விரயமாகிறது” என்றோ, “காங்கிரஸ் திட்டத்தை நிறைவேற்றவில்லை” என்றோ யாரும் புகார் சொல்லவில்லை.

ஓமந்தூர் மந்திரி சபை நிலைத்திருக்குமா, இராதா என்பது பற்றிச் சில காலமாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. ஓமந்தூர் மந்திரி சபை நிலைத்திருந்தாலும் நிலைத்திராவிட்டாலும் இம் மாகாணத்தின் நிர்வாக சரித்திரத்தில் அதன் புழ் நிலைத்து நிற்கும். சென்னை மாகாணம் முழுவதும் மதுவிலக்குக் கொண்டுவந்ததும், குதிரைப் பந்தயச் சூதாட்டத்தை ஒழித்ததும், லஞ்சத்தை ஒழிக்கப் பெரும் பிரயத்தனம் செய்ததும் ஆகிய இந்த மூன்று கைங்கரியங்களினாலும் ஓமந்தூர் மந்திரி சபை சரித்திரத்தில் இடம் பெறும்.

(கல்கி, மார்ச் 7, 1948)

Comments

கேஆர்எஸ் சம்பத் says :

அன்றைய நிலை ஆச்சரியமளிக்கிறது. இன்றைய நிலை வேதனை கொள்ளச் செய்கிறது. ஏகப்பட்ட கடன் என்கிறார்களே????????????

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :