• TRENDING | பர பர

மகனுக்கும் மகளுக்கும் திருமணம்: கண்டுகளித்த பெற்றோர்!





திருமண நிகழ்வின்போது, தனக்கு மருமகளாக வரவிருப்பவள் தனது மகள் என்பதை தாய் கண்டறிந்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

சீனாவில் உள்ள ஜியாங்சு மகாணத்தில் நடக்கவிருந்த திருமணத்தின் போது, மணமகனின் தாய், மணமகளின் கையில் இருந்த பிறப்பு அடையாளத்தைக் கண்டு, இவள் தனது தொலைந்துபோன மகள் என்பதைக் கண்டறிந்து கண்ணீர் வடித்துள்ளார்.

இந்த விஷயத்தை உறுதிபடுத்திக்கொள்ள, மணப்பெண்ணின் பெற்றோரிடம் நீங்கள் இவளை 20 வருடங்களுக்கு முன் தத்தெடுத்தீர்களா? என்று கேட்க, இந்த கேள்வியால், அதிர்ச்சியடைந்த மணப்பெண்ணின் பெற்றோரும், இவ்வளவு நாள் கட்டிக்காத்த ரகசியத்தை உடைத்தனர். ஆம். இந்த பெண்ணை சாலையோரத்தில் கண்டெடுத்தோம். ஆதரவின்றி இவள் தனியாக இருந்ததால், நாங்கள், எங்கள் சொந்த குழந்தை போல் வளர்த்து வந்தோம் என்றனர்.

தனது திருமண நாளில் இப்படியொரு விஷயத்தைக் கேள்விப்பட்டதும், மணமகள் ஆனந்தத்தில் கண்ணீர் வடித்து தன்னை பெற்றெடுத்த பெற்றோரை பார்த்து மகிழ்ச்சியடைந்தார். இந்த சம்பவம் இத்தோடு முடியாமல், இன்னும் பல சுவாரசியங்களையும் உள்ளடக்கி இருந்தது.

தனக்கு வரவிருந்த மாமியாரே தன்னை பெற்ற தாய் என்று அறிய வந்ததால், மணப்பெண் தனது சகோதரரை திருமணம் செய்வதில் தயக்கம் காட்டினார். ஆனால் பெற்றோர் இவர்களது திருமணத்திற்கு எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. காரணம், அந்த மணமகனையும் அவர்கள் தத்தெடுத்து தான் வளர்த்து வந்துள்ளனர்.

மகள் காணாமல் போன துக்கத்தில் ஒரு வருடமாக அவரைத் தேடியும் எங்கும் கிடைக்காததால், இவர்கள் ஒரு சிறுவனை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளனர். இதனால் இருவருக்கும் உடல்ரீதியான எந்த பந்தமும் இல்லை என்பதால், இந்த திருமணத்தில் எந்த பிரச்சினையும் இருக்காது என்று கூறியுள்ளனர். இதனால் தம்பதியினரும் மேற்கொண்டு திருமண சடங்குகளில் ஈடுபட்டனர். திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் இந்த சம்பவம் மிகுந்த சந்தோஷத்தை அளித்தது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :