• SPARKLES | மினுமினு

வன்முறை தீர்வாகுமா? ‘சுல்தான்’ பட விமர்சனம்!


- ராகவ் குமார்





எம்.ஜி.ஆர் நடித்த ‘பல்லாண்டு வாழ்க’ படத்தை ஒரு 100 ரவுடிகளின் பின்புலத்துடன் கொஞ்சம் மசாலா சேர்த்து, விவசாயம், ஊர் நன்மை என்று கலந்துகட்டி அடித்தால் - அதுதான் ‘சுல்தான்’!

சென்னையில் மிகப்பெரிய தாதா நெப்போலியன். இவரின் மகன் சுல்தான். மகனைப் பெற்றெடுத்தவுடன் தாய் இறந்து விடுகிறார். தாய் இல்லாத குழந்தையான சுல்தானை ரவுடிகள் வளர்க்கிறார்கள். இந்த சூழலில் தந்தை நெப்போலியன் இறந்துவிட, காவல் துறை ரவுடிகளை என்கவுண்டர் செய்ய முயற்சிக்கிறது. கார்த்தி அந்த ரவுடிகளைத் திருத்துவதாக சொல்லி, போலீசிடம் ஆறு மாதம் அனுமதி பெற்று, ரவுடிகளுடன் சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு செல்கிறார்.

ரௌடிகள் திருந்தினர்களா? இல்லை பழைய நிலைமைக்கு சென்று விட்டார்களா? என்று மீதம் உள்ள கதை சொல்கிறது. கிராமத்தில் காதல், நிலத்தை அபகரிக்க முயலும் கார்ப்பரேட் தாதா, விவசாயம் செய்யும் ரௌடிகள் என படம் நீள்கிறது.

கார்த்தி கதாபாத்திரத்திற்கு, டைரக்டர் பாக்யராஜ் கண்ணன் தரும் பில்டப் திரைக்கதையில் ஒட்டவே இல்லை. ‘கைதி’க்கு பிறகு மிக பெரிய எதிர்பார்ப்புடன் வரும் ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமே. வன்முறை வேண்டாம் என்று அறிவுரை சொல்லும் கார்த்தி, கிராமத்தில் நடக்கும் பிரச்சனைகளை வன்முறை மூலமாகவே தீர்க்கிறார்.

நடிகை அமலாவை நினைவு படுத்துகிறார் ராஷ்மிகா மந்தனா. அதிலும் கார்த்தியின் காதலை தவிர்ப்பதும், பின் ஏற்பதும் என நடிப்பில் நுணுக்கமான உணர்வுகளை அழகாக்க் காட்டுகிறார். டைரக்டர்கள் சரியான வாய்ப்பு தந்தால் ஒரு ரவுண்டு வருவார். படத்தில் பலர் நடித்திருந்தாலும், ஸ்கோர் செய்வது லால்தான்.

ஆசையாக குழந்தையை தூக்கி சுல்தான் என்று பெயர் வைப்பதும், தான் வளர்த்த மருமகன் சுல்தானிடம், தான் பெரிய தாதாவாக இருந்தும் பாசத்திற்கு பணிந்து போவதும், கடைசியில் சுல்தான் மடியில் மகிழ்வுடன் உயிரை விடுவதும் என சிறப்பாக நடித்திருக்கிறார். வாழ்த்துக்கள் சேட்டா. படத்தின் ஒரே ஆறுதல் ஒளிப்பதிவும், பின்னணி இசையும்தான்.

விவசாயிகள் டெல்லி முதல் தேனி வரை அரசின் திட்டங்களை எதிர்த்து போராடுகிறார்கள். ஆனால் யாரும் தங்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு கேட்டு எந்த ரௌடிகளையும் அணுகியதாக நினைவில் இல்லை. அதிலும் டெல்லி விவசாயிகள் போராட்டம் மாதக்கணக்கில் அமைதியான வழியில் நடந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் - டைரக்டர் பாக்யராஜ் கண்ணனுக்கு எப்படி இப்படியொரு ஐடியா தோன்றியது என்பது புரியாத புதிராக உள்ளது.

‘சுல்தான்’ - பெயரில் மட்டுமே கம்பீரம்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :