• JUST IN | சுட சுட

தமிழகத்தின் அனைத்து தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தொடக்கம்!





தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கப்படும் நிலையில் வாக்குச்சாவடிகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப் பதிவு இயந்திரங்கள் 234

தொகுதிகளுக்கும் அனுப்படுகிறது. அத்துடன் விவிபேட் இயந்திரங்களும் கொண்டுச் செல்லப்பட உள்ளன.

தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ், பாஜக வேட்பாளர்களும் களம் காண்கின்றனர். தமிழகம் முழுவதும் மொத்தம் 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன. இவற்றில் 537 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவையாகவும், 10,830 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகவும் தேர்தல் ஆணையத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு நடக்கும். இந்நிலையில் நாளை வாக்குப்பதிவை முன்னிட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இதுவரை பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த ஸ்ட்ராங் ரூம் எனும் மையத்திலிருந்து வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்படுகின்றன.

அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் தேவையான 1,55,102 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1,14,205 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 1,20,807 விவிபாட் இயந்திரங்கள் (யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் இயந்திரம்) ஆகியவை தயார் நிலையில் உள்ளன. பாதுகாப்பு பணிக்கு 300 துணை ராணுவப்படையினர் வந்துள்ளனர். 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

வாக்குப்பதிவுக்கு தேவையான இயந்திரங்கள் இன்று மாலைக்குள் 234 தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கும் அனுப்பப்பட்டு விடும். நாளை காலைக்குள் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :