• TRENDING | பர பர

தினமும் டெலிவரி பெட்டியில் பயணிக்கும் குழந்தை!





சீனாவைச் சேர்ந்த டெலிவரி செய்யும் நபர் ஒருவர், தான் வேலைக்குச் செல்லும்போது, குழந்தையையும் டெலிவரி பெட்டியில் வைத்துக்கொண்டு செல்லும் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வேலைக்குச் செல்லும் பெற்றோருக்கு இருக்கும் பெரிய கவலையே தங்கள் குழந்தையை யார் பார்த்துக் கொள்வது என்பதுதான்.

இதுபோன்ற ஒரு சூழலில் ஒரு தம்பதி, தங்கள் குழந்தையை வளர்க்கும் விதம் தற்போது வைரலாகி வருகிறது. சீனாவைச் சேர்ந்த லி யுவான் என்ற நபர் கொரியர் டெலிவரி செய்து வருகிறார். இவரது மனைவி அங்குள்ள ஒரு சந்தையில் முழுநேர வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு தற்போது 2 வயதில் ஃபீயர் என்ற மகள் இருக்கிறார்.

இந்நிலையில் தந்தை லி தனது மகளை தான் கொண்டு செல்லும் டெலிவரி பெட்டியில் சிறிய மெத்தை ஒன்றை அமைத்து அதில் மகளுக்குத் தேவையான பொருட்களையும் வைத்துக்கொண்டு, வண்டியின் முன்பக்கத்தில் அமர வைத்தபடி டெலிவரி செய்யக் கிளம்பி விடுகிறார்.

தன் மகளை லி கண்ணும் கருத்துமாக பார்த்து கொள்வதை பலர் பாராட்டினாலும், குழந்தையை இப்படி தினமும் கொண்டு செல்வது ஆபத்தானது எனவும் சில நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :