• SPARKLES | மினுமினு

இடுப்பளவு தண்ணீரில் நம்பெருமாளை சுமந்து சென்ற ஸ்ரீபாதம் தாங்கிகள்!


மங்களம் ஸ்ரீனிவாசன்.





பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாதர் கோவிலில் கோரதம் எனப்படும் பங்குனி தேர்த்திருவிழா ஒவ்வொரு வருடமும் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப் படும். இத்திருவிழா கொடியேற்றத்துக்குப் பின், நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கண்ணாடி அறைக் கொண்டு செல்லப்படுவார்.

இதன் பிறகு 11 நாட்கள் நடைபெறும் தேர்த் திருவிழாவில், நம்பெருமாள் தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருவார். அந்த வகையில் பங்குனி உற்சவத்தின் சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்று- உறையூர் சேர்த்தி சேவை.

இதற்காக கடந்த வியாழனன்று ( மார்ச்-25) நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு காவிரிக்கரையைக் கடந்து உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலைச் சென்றடைந்தார். அங்கு அன்று இரவு 12 மணி வரை கமலவல்லி நாச்சியாருடன் சேர்ந்திருந்து பக்தர்களுக்கு பெருமாள்-தாயார் சேர்த்தி சேவையாக காட்சியளித்தார்.

நாம் ரொம்ப எளிதாக நம்பெருமாளை சேவித்து விடுகின்றோம். ஆனால் அவர் புறப்பாடு என்பது சாதரணமானது அல்ல. உறையூருக்கு படை பரிவாரங்களுடன் ஒய்யாரமாக கிளம்ப வேண்டும்.

இதில் முக்கியமானவர்கள் ஶ்ரீபாதம்தாங்கிகள்.

நம்பெருமாள் உறையூருக்குச் செல்ல, காவிரி ஆற்றையும் வயல் வெளிகளையும் இரண்டு நதிகளையும் கடந்து மேடேறி சாலைகளில் பயணித்து கோவிலை வந்தடைய வேண்டும்.

இதில் முக்கியமானது - காலம் காலமாக எந்த பாதையில் நம்பெருமாள் எழப் பண்ணி அழைத்து சென்றார்களோ அதே பாதையில்தான் செல்ல வேண்டும். மாற்று வழிகளில் செல்லக் கூடாது. குறிப்பாக, மனிதர்களின் பாதம் பட்ட இடங்கள் வழியாக நம்பெருமாள் பயணிக்க கூடாது என்பது போன்று பல கட்டுப்பாடுகள் உண்டு!

அதிலும் இந்த வருடம் புதிய சிக்கலாக நம்பெருமாள் உறையூர் செல்லும் தினத்தில், வழியில் முக்கொம்பில் தண்ணீர் திறக்கப்பட்டது. உடனடியாக, கோவில் சார்பில் விரைந்து சென்று தண்ணீரை அடைக்க சொல்வதற்குள், பெருமாள் கடக்கும் காவிரி பாதையில் நெஞ்சளவு தண்ணீர் மடுவில் தேங்கிவிட்டது. பின்னர் அவசர அவசரமாக ஒரு நாள் முழுவதும் பலர் வேலை செய்தும்கூட, இடுப்பளவு தண்ணீர் நிரம்பிய பாதையில்தான் ஸ்ரீபாதம் தாங்கிகள் நம்பெருமாள் சிவிகையை தாங்கிச் சென்றனர்.

அதன் பிறகு மிக பெரிய மேடு...நாம் தனியாக அந்த மேட்டில் ஏறினாலே நாக்கு தள்ளும்..ஆனால் நம்பெருமாள் சிவிகையை அத்தனை ஶ்ரீபாதம் தாங்கிகளும் சிறிதும் அலுங்காமல் குலுங்காமல் மேலேற்றிச் சென்றது அற்புதமான காட்சி.

இத்தனைக்கும் நம்பெருமாளைச் சுமக்கும் ஸ்ரீபாதம் தாங்கிகள் யாரும் தொழில்முறை பாரம் சுமப்பவர்கள் அல்ல. இவர்கள் அனைவரும் மிக பெரிய பணிகளில் மிக பெரிய பொறுப்பில் இருப்பவர்கள்! பக்தியின் காரணமாக நம்பெருமாள் கைங்கர்ய பணிகளில் தங்களை ஈடுபடுத்தி கொண்டவர்கள்.

உறையூருக்கு நம்பெருமாளை எழப் பண்ணி சேர்த்தி சேவையில் கமல்நாச்சியாருடன் நம்பெருமாளைக் கண்ணார சேவித்தது பெறும்பேறு!

Comments

கேஆர்எஸ் சம்பத் says :

அரங்கனிடம் பக்தி கொண்ட பாதம் தாங்கிகள் சேவை பாராட்டுக்குரியது. ஓம் நமோ நாராயணா!

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :