• TRENDING | பர பர

கிரெட்டாவிற்கு சிலை வைத்த பிரிட்டன் பல்கலைக்கழகம்! கோபமுற்ற மாணவர்கள்!





ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இளம் சூழலியலாளரான கிரெட்டா துன்பெர்க்கிற்கு பிரிட்டனில் உள்ள வின்செஸ்டர் பல்கலைக்கழகம் தங்களது வளாகத்தில் முழு உருவசிலை நிறுவியிருப்பது பல்கலைக் கழக மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சிலை 23,760 யூரோ செலவில் நிறுவப்பட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு, ஸ்வீடனைச் சேர்ந்த கிரெட்டா துன்பெர்க், ஐ.நா. காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில் காலநிலை மாற்றத்திற்கு எதிராக உலக நாடுகள் தலைவர்களிடம் கேள்வியை எழுப்பினார். அப்போது பிரபலமானவர்தான் கிரெட்டா. அன்று முதல் உலகின் பல்வேறு பகுதிகளில் நிகழும் பிரச்னைகளில் தலையிட்டு கேள்விகளை எழுப்பி, உலகம் முழுவதும் அறியப்பட்டார்.

இந்நிலையில், கிரெட்டா துன்பெர்க்கின் சிலையை, பிரிட்டனில் உள்ள வின்செஸ்டர் பல்கலைக்கழகம் தங்களது வளாகத்தில் நிறுவியுள்ளது. இதன் மதிப்பு 23,760 யூரோ ஆகும். இந்த சம்பவம் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா கோரப்பிடியில் உலகமே சிக்கி வெளிவர முடியாமல் திணறும் இந்த வேளையில், கிரெட்டாவிற்கு இவ்வளவு மதிப்பில் சிலை அமைத்திருப்பது ஏன் என பல்கலைக்கழக நிர்வாகத்திடம் மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளதோடு, தொடர்ந்து, அவர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து பல்கலைக்கழக முதல்வர் மெகான் பால் கூறியதாவது "கிரெட்டா துன்பெர்க் அனைவரும் அறிந்த சுற்றுச் சூழல் ஆர்வலர். இவர் உலக அளவில் ஏற்படும் பிரச்னைகளைப் பற்றி குரல் எழுப்பி, அதற்கான தீர்வை அளிக்க உதவியுள்ளார். கிரெட்டாவின் உருவச் சிலை மாணவர்கள் மத்தியில் புது உத்வேகத்தைக் கொடுக்கும் என நம்பினோம். மேலும் இதற்காக மாணவர்கள் மத்தியில் எந்த வித நிதியும் வசூலிக்கவில்லை" எனவும் தெரிவித்துள்ளார்.




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :