• அமரர் கல்கியின் கல்வெட்டுகள்

41. புத்தகங்கள் சம்பாதிக்கும் வழிகள்!


- அமரர் கல்கி

புத்தகங்களின் சக்தியைப் பற்றிப் பெரியோர்கள் எவ்வளவோ சொல்லியிருக்கிறார்கள். புத்தகங்கள் அலமாரிக்கு அலங்காரம் என்றும், கரங்களுக்குப் பூஷணம் என்றும் கூறியிருக்கிறார்கள். ‘அனுபவ வைத்திய’ முறையில் புத்த கங்கள் உறக்கம் வராமைக்குச் சிறந்த மருந்து என்றும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

சிலருக்குக் காபி அல்லது தேயிலைப் பானம் அருந்தினால் தூக்கம் போய்விடும். புத்தகத்தைக் கையில் எடுத்தால் தூக்கம் வந்துவிடும். புத்தகத்தின் மகிமையைப் பற்றி வேறு என்ன சொல்ல வேண்டும்?

புத்தகங்களைச் சம்பாதிப்பதற்குச் சாதாரணமாக மூன்று வழிகள் உண்டு என்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. யாசகம் வாங்குதல், கடன் வாங்குதல், திருடுதல் ஆகியவை அந்த மூன்று வழிகள். விலைக்கு வாங்குதல் என்னும் நாலாவது வழி ஒன்றும் இருக்கிறது. இவற்றில் நாலாவது வழியைக் கடைப் பிடிக்கும்படியான அவசியம் ரயில் பயணத்தின்போது நம்மில் பலருக்கு ஏற்பட்டுவிடுகிறது.

ரயில் பிரயாணத்தில் பலருக்குத் தூக்கம் சரியாக வருவதில்லை. மந்திரி காட்கில் போன்றவர்கள் பாக்கியசாலிகள். அவர்கள் ரயில் பிரயாணத்தி ன்போது நன்றாகத் தூங்குவது மட்டுமின்றித் திருட்டுக் கொடுக்கவும் செய்கிறார்கள். ஆனால் நம்மில் பலருக்கு ரயிலில் தூக்கம் வருவது கிடையாது. ரயில் ஆடி அசைந்து குலுங்கிப் போகிற போட்டில் வருகிற தூக்கமும் விரைந்து ஓடிப் போகிறது. ஆகையால் பொழுதுபோக்குகிறதற்கு ஏதேனும் புத்தகம் இருந்தால் நல்லது என்ற எண்ணம் உண்டாகிறது. இவ்வாறு புத்தகப் படிப்பின் வளர்ச்சிக்கு ரயில்வேக்கள் மிக்க உதவி செய்கின்றன. இதற்காகவே பெரிய ரயில்வே நிலையங்களில் புத்தகக் கடைகளும் வைத்திருக்கிறார்கள். புத்தகம் சம்பாதிக்கும் முறைகளில் முதல் மூன்று முறைகளும் ரயில் பிரயாணத்தின்போது அவ்வளவாகச் சௌகரியப்படுவதில்லை. நாலாவது முறையைத்தான் கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது.

ஒரு சமயம் ரயில் பிரயாணம் செய்ய நேரிட்டபோது எனக்கும் அத்தகைய அவசியம் ஏற்பட்டது. “தூக்கந்தான் வருவதில்லை. ஏதேனும் ஒரு புத்தகமாவது படித்து வைக்கலாம்” என்று எண்ணி, திருச்சி ரயில் சந்திப்பில் உள்ள புத்தகக் கடையில் ஒரு புத்தகம் வாங்கச் சென்றேன். கடையில் இருந்த புத்தகங்களைக் கண்ணோட்டம் இட்ட பிறகு, பளபளவென்று மூவர்ண அட்டை போட்டதாக ஒரு புத்தகத்தைக் கண்டுபிடித்து வாங்கினேன். அது வோட்ஹவுஸ் என்றும் பிரபல ஆங்கில நாவலாசிரியர் எழுதிய புத்தகம். ஆசிரியர் வோட்ஹவுஸ் நகைச்சுவைக்குப் பேர்போனவர். ஆங்கில மக்களின் நடை உடை பாவனைகளையும் பேச்சுக்களையும் வைத்துக்கொண்டு குலுங்கக் குலுங்கச் சிரிக்கும்படியான புத்தகங்களை எழுதிவிடுவார். சிற்சில பாத்திரங்களை வைத்துக்கொண்டே அடுத்தடுத்துக் கதைகள் எழுதுவார்.

‘சிரிப்பு வந்தால் வரட்டும்; அல்லது ஒருவேளை தூக்கம் வந்தால் வரட்டும்’ என்று எண்ணிக்கொண்டு ஐந்தே முக்கால் ரூபாய் துணிந்து எடுத்துக்கொடுத்து, முந்நூறு பக்கமுள்ள ஒரு புத்தகத்தை வாங்கிக்கொண்டு போய் ரயிலில் என் இடத்தில் அமர்ந்தேன். அந்தப் புத்தகம் அதுவரையில் இருபத்தேழு லட்சத்து முப்பதினாயிரம் பிரதிகள் விற்றிருப்பதாக மேலட்டை யிலேயே தெரிவித்திருந்தார்கள். விலைக்கு வாங்கிப் படித்தவர்கள் அத்தனை பேர்கள் எனில், மற்ற மூன்று வழிகளில் படித்தவர்கள் எத்தனை பேர் இருக்க வேண்டும்? ஆங்கிலத்தில் புத்தகம் எழுதும் ஆசிரியர்கள் கொடுத்து வைத்த வர்கள்தான். அவர்களுடைய அதிர்ஷ்டத்தை வியந்துகொண்டே புத்தகத்தைப் பிரித்துப் படிக்கலானேன்.

- (12.2.53 தேதியிட்டுத் தம்முடைய ‘அலை ஓசை’ நூலாக வெளியானபோது கல்கி அவர்களால் எழுதப்பட்ட நீண்ட முன்னுரையின் தொடக்கம் இது. இந்த முன்னுரையில்தான் “நான் எழுதிய நூல்களுக்குள்ளே ஏதாவது ஒன்று ஐம்பது அல்லது நூறு வருஷம் நிலைத்து நிற்கக் கூடியது என்றால் அது ‘அலை ஓசை’தான்” என்று அமரர் கல்கி தம்முடைய எழுத்தை மதிப்பிடுகிறார். (குறைத்துத்தான்.)

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :