• TRENDING | பர பர

தெய்வத் திருமணங்கள் நடந்த நன்னாள்: பங்குனி உத்திரம்!


- பிரவீணா அருண்





தமிழ் மாதங்களில் பன்னிரெண்டாவது மாதமான பங்குனியும், பனிரெண்டாவது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புனித நாளே பங்குனி உத்திரத் திருநாளாகும். உத்திர நட்சத்திரத்துக்கு அதிபதி சூரியன். அதே நாளில் நிறை நிலவும் பொருந்தும்போது சூரியன் மற்றும் சந்திரனால் இரட்டைச் சிறப்புகள் கிடைக்கின்றன.

சிவபெருமான், பார்வதியோடு மணக்கோலத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மதுரையில் காட்சி தந்தருளிய திருநாள் இதுதான். மதுரையில் மீனாட்சியைத் திருமணம் செய்துக் கொண்டு மீனாட்சி சுந்தரேஸ்வரராகக் காட்சி தந்ததும் இந்நாளில்தான். சிவனின் தவத்தைக் கலைத்ததால் இறைவனின் நெற்றிக் கண்ணால் மன்மதன் எரிக்கப்பட்டான். ரதியின் வேண்டுதலால் மீண்டும் மன்மதன் உயிர் பெற்ற நாளும் இதுதான்.

பர்வதராஜன் தவத்தால் பத்மத்தில் அவதரித்த பார்வதியை சிவபெருமான் கரம் பிடித்த நாளும் இதுவே. ஸ்ரீரங்க மன்னார்-ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடந்த நாளும் இதுதான். மகாலட்சுமியின் அவதார நாளும் பங்குனி உத்திர நாள்தான். மகாலட்சுமி பங்குனி உத்திர விரதத்தை அனுசரித்து தான் ஸ்ரீமகாவிஷ்ணுவின் மார்பில் உறையும் பாக்கியம் பெற்றாள்.

வள்ளியின் அவதாரமும், ஸ்ரீ ஐயப்பனின் அவதாரமும், அர்ஜுனன் தோன்றியதும் பங்குனி உத்திர நன்னாளில்தான். திருமாலின் புதல்விகளான அமிர்தவல்லியும் சுந்தரவல்லியும் தெய்வானை, வள்ளியாக பிறவி எடுத்து முருகனை மணந்து கொண்டனர். தசரத மைந்தர்கள் ஸ்ரீராமன் - சீதை, லட்சுமணன் - ஊர்மிளை, பரதன் - மாண்டவி, சத்ருக்னன் - ஸ்ருதகீர்த்தி திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் ஒரே மேடையில் மிதிலையில் நடைபெற்றது.

அழகுமிகு இருபத்தியேழு கன்னியர்களை சந்திரன் மனைவிகளாக ஏற்றுக்கொண்ட தினமும் இதுதான். இத்திருநாளில்தான் வடநாட்டில் ஹோலி பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். திருமழப்பாடியில் நந்தி கல்யாணம் கண்டால் முந்திக் கல்யாணம்தான். பங்குனி மாதத்தில் ஏற்றிய தீபத்தில் சிவனும் பார்வதியும் ஐக்கிய சோரூபமாகக் காட்சி தருகின்றனர். அதனால் இன்று திருவிளக்குப் பூஜை செய்து பாவங்களை விலக்கி, பகை அகற்றி புண்ணியம் பெறலாம்.

காரைக்கால் அம்மையார் முக்தியடைந்தது, லோபமுத்திரை அகத்திய முனிவரை மணந்து கொண்டதும் இன்றுதான். பூரணா, பூஷ்கலா சாஸ்தாவையும், ரதி மன்மதனையும் கல்யாணம் செய்து கொண்டனர் என்று கந்த புராணம் கூறுகிறது. தேவேந்திரன்-இந்திராணி, நான்முகன் கலைவாணி ஆகியோரின் திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் நடைபெற்றன. பிரம்மா தனது நாவில் சரஸ்வதி இருக்கும் வாய்ப்பை பெற்றதும் இந்த நாளில்தான். இமவான் தனது மகள் பார்வதியை சிவனுக்கு திருமணம் செய்ய தேர்ந்தெடுத்தது இன்றுதான்.

காஞ்சியில் காமாட்சி அம்மன் ஆற்று மணலை சிவலிங்கமாகப் பிடித்து வழிபட்டு சிவனின் அருளைப் பெற்றதும், இடும்பன் மூலம் காவடி எடுக்கும் வழக்கம் ஆரம்பித்ததும் மார்கண்டேயனுக்காக சிவன் காலனை தனது காலால் உதைத்ததும், மலையரசன் இமவானின் மகளாகப் பிறந்து, பார்வதி என்ற பெயரில் சிவனை நோக்கிக் கடும் தவம் இருந்த நாளும் பங்குனி உத்திர திருநாள்தான்.

கோயில்களில் இன்று நடைபெறும் நிகழ்வுகள் :

பழனியில் காவடி உத்ஸவம்.

மயிலாப்பூரில் அறுபத்து மூவர் உத்ஸவம்.

சுவாமிமலையிலும், திருச்செந்தூரிலும் வள்ளி கல்யாணம்.

காஞ்சிபுரத்தில் கல்யாண உத்ஸவம்.

மதுரையில் மீனாட்சி திருமணம்.

இவ்வளவு சிறப்புகள் ஒன்றாகப் பொருந்திய பங்குனி உத்திர நாளில் ஆலயம் சென்று வழிபடு செய்வோம். பக்தர்கள், எளியோருக்கு அன்னதானம் செய்து தெய்வங்களின் ஆசியைப் பெறுவோம்.




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :