• SPARKLES | மினுமினு

சூயஸ் கால்வாயில் சிக்கிய பிரமாண்ட கப்பல்: நடுக்கடலில் டிராஃபிக் ஜாம்!


சாந்தி கார்த்திகேயன்





ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே கப்பல் போக்குவரத்துக்கு உயிர்நாடியாக விளங்குவது சூயஸ் கால்வாய். இதன் வழியாகத்தான் ஆசியாவில் இருந்து ஐரோப்பியாவிற்கு ஒரு வருடத்திற்கு 15000 கப்பல்கள் பயணிக்கின்றன.

சீனாவிலிருந்து நூற்றுக்கணக்கான கன்டெய்னர்களை ஏற்றிக் கொண்டு நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நகரை நோக்கி எவர் கிரீன் என்ற பிரம்மாண்டமான கப்பல் புறப்பட்டு சென்றது. இந்த கப்பல் சுமார் 400 மீட்டர் நீளத்துடன், 59 மீட்டர் அகலம் உடையது. கப்பல் மலேசியா வழியாக வந்து மார்ச் 22-ம் தேதி எகிப்திலுள்ள சூயஸ் கால்வாயை வந்தடைந்தது. மார்ச் 23-ம் தேதி காலை 7.45 மணி அளவிலது சூயஸ் கால்வாயில் சென்ற போது அந்த விபரீதம் நடந்தது.

திடீரென ஆவேசத்துடன் புரட்டியெடுத்த புயல் எவர் கிரீன் கப்பலை தள்ளாட வைத்தது. அதனால் கட்டுப்பாட்டை இழந்த கப்பல் மேற்கொண்டு நகர முடியாமல், கால்வாயின் குறுக்கே சிக்கிக் கொண்டது. கப்பலின் முன்பகுதி கரையின் ஒரு புறத்திலும், கப்பலின் பின்பகுதி கரையின் மறுபுறமும் தொட்டு சூயஸ் கால்வாயை வழிமறித்தபடி குறுக்கே சிக்கிக் கொண்டது எவர்கிரீன் கப்பல்.

அதனால், சூயஸ் கால்வாயின் இருபுறங்களிலும் டிராபிக் ஜாம் ஆகி 150-க்கும் மேற்பட்ட சரக்கு கப்பல்கள் மேற்கொண்டு பயணிக்க முடியாமல் அணிவகுத்து நிற்கின்றன. எவர் கிரீன் கப்பலின் மாலுமிகள் உடபட அதில் பயணம் செய்த அனைவரும் இந்தியர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. கப்பலில் 25 பேரும் பாதுகாப்பாக இருப்பதாக, எவர் கிரீன் கப்பலை நிர்வகித்து வரும் பெர்ன்ஹார்ட் ஷுல்ட் ஷிப் மேனேஜ்மென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. கப்பலை மீட்டெடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சூயஸ் கால்வாயின் நடுவே எவர் கிரீன் கப்பல் சிக்கியிருப்பதால், நூற்றுக்கணக்கான சரக்கு கப்பல்கள் சூயஸ் கால்வாயில் அணிவகுத்து நிற்கின்றன. அங்கு கடல்வழிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், உலகின் பொருளாதாரத்தையே புரட்டி போடும் அளவுக்கு பாதிப்பு ஏற்படக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. காரணம் - இந்த வழியாகத்தான் உலகின் 12 சதவீதம் வணிகம் நடைபெறுகிறது. மத்தியதரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கும் வகையில் அமைந்துள்ள இந்த சூயஸ் கால்வாய், 163 கி.மீ நீளமும் 300 மீ அகலமும் கொண்டது.




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :