• GLITTERS | பளபள

அழகான ராட்சசன் ராவணன்: சர்ச்சை கிளப்பிய ‘ஆதிபுருஷ்’ படம்!


- ஜி.எஸ்.எஸ்.

சூப்பர் ஸ்டார் பிரபாஸ் நடிக்கும் ‘ஆதிபுருஷ்’ என்கிற பிரமாண்ட திரைப்படம் இப்போதே மிகுந்த எதிர்பார்ப்பைக் கிளப்பியிருந்தாலும், படம் அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம்தான் ரிலீசாக இருக்கிறது

ஆனால் இதுகுறித்த விமர்சனங்கள் இப்போதே ரிலீஸ் ஆகி விட்டன! பிரபல பாலிவுட் நடிகர் சயீப் அலி கான் மேற்படி திரைப்படத்தில் தான் ஏற்றிக்கும் வேடம் குறித்துக் கூறிய ஒரு கருத்து கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

‘ஆதிபுருஷ்’ திரைப்படத்தில் பிரபாஸ் கதாநாயகனாகவும் சயீப் அலி கான் வில்லனாகவும் நடிக்கிறார்கள். ராமாயணக் கதைதான் ‘ஆதிபுருஷ்’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகி வருகிறது. இதில் பிரபாஸ் - ராமனாகவும் சயீப் அலிகான் - ராவணனாகவும் நடிக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது. இந்தியிலும் தெலுங்கிலும் தயாரிக்கப்படும் இந்தத் திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம் ஆகியவற்றில் மொழியாக்கம் செய்யப்படும்.

‘பாகுபலி’க்குப் பிறகு பிரபாஸ் நடித்த ‘சாஹோ’ ஒரு பிரம்மாண்ட பட்ஜெட் திரைப்படம் என்றாலும் அது எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே ஆதிபுருஷின் பெரும் வெற்றி பிரபாஸூக்குப் பெரிதும் தேவைப்படுகிறது. தவிர அவரது முதல் நேரடி ஹிந்தி திரைப்படம் இது. ‘ராமன் எனும் இதிகாச கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது மிக உற்சாகமாக இருக்கிறது. நம் நாட்டு இளைஞர்கள் தங்கள் அன்பை இந்த திரைப்படத்தின் மீது கொட்டுவார்கள்’ என்று பிரபாஸ் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

எனினும் ‘ஏழாயிரம் வருடங்களுக்கு முன் உலகின் மிக புத்திசாலித்தனமான அரக்கன் வாழ்ந்தான்’ என்று ராவணனைக் குறித்து ’ஆதிபுருஷ்’ பட இயக்குனர் ஓம் ரவுட் சிலாகிக்கும் ட்வீட் ஒன்று வெளியானபோது, அனைவருக்கும் குழப்பம்! அதாவது, ‘ஆதிபுருஷ்’ படத்தில் ராவணன் கேரக்டர் எப்படி சிததரிக்கப்படப் போகிறான் என்பது குறித்த கேள்வி வந்தது. போதாக்குறைக்கு சயீபின் மனைவி கரீனா கபூர்வேறு தன் பங்குக்கு ‘சரித்திரத்தின் மிக அழகான ராட்சதன் என் கணவன்’ என்று போஸ்டரில் குறிப்பிட்டிருந்தார்.

இந்னிலையில் இத்திரைப்படம் தொடர்பாக சயீப் கொடுத்த ஒரு பேட்டி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

அந்த பேட்டியில் சயீப் அலி கான் ‘இந்த படத்தின் அசுர வேந்தன் அதிக மனிதத்தனத்தோடு காட்டப்படுவான். சீதையைக் கடத்தியது, ராமனுடன் போர் புரிந்தது என்பதெல்லாம் தன் தங்கை சூர்ப்பனகைக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான பழிவாங்கும் செயல் என்பது இந்த திரைப்படத்தில் நியாயப் படுத்தப்படும்’ என்று அவர் கூறித் தொலைக்க, வெடித்தது சர்ச்சை.

பாஜக எம்எல்ஏ ராம் கதம் இதற்காக சயீப் அலிகானை கண்டிக்க, உத்தரப்பிரதேச வழக்கறிஞர் ஒருவர் சயீப் அலி கான்மீது இதற்காக வழக்கு தொடுத்து இருக்கிறார். ராவணனின் செயலை நியாயப்படுத்துவது இந்துக்களை புண்படுத்தும் செயல் என்றார். சர்ச்சை வெடித்ததைத் தொடர்ந்து சயீப் அலி கான் மன்னிப்பு கேட்டுக் கொண்டு தனது கருத்துக்களை வாபஸ் பெற்றிருக்கிறார்.

‘ஆதிபுருஷ்’ படத்தின் இயக்குனர் ஓம் ரவுட் லோகமான்ய திலகர் பற்றி ஒரு திரைப்படம் எடுத்து பாராட்டுப் பெற்றவர். அதற்குப் பிறகு தானாஜி என்ற பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்தவர். தானாஜி ஓர் மராத்திய போர் வீரர்.

பொதுவாகவே சரித்திரம் மற்றும் புராண படங்கள் சமீபகாலமாக சர்ச்சைகளை சந்தித்து வருகின்றன.

மாமன்னர் அசோகரின் வரலாறு அசோகா என்ற பெயரில் ஷாருக்கானைக் கதாநாயகனாகக் கொண்டு உருவாக்கப்பட்டது (நம் அஜீத் கூட இதில் நடித்திருந்தார்). இதில் கலிங்கம் தொடர்பான அக்கால நிகழ்வுகள் சரியாக சித்தரிக்கப்படவில்லை என்று சரித்திர ஆராய்ச்சியாளர் ஒருவர் அழுத்தமாக கருத்து தெரிவித்தார். இந்தத் திரைப்படத்தை ஒடிசாவில் திரையிடக்கூடாது என்றும் அவர் வாதிட்டார் (அன்றைய கலிங்கம்தான் இன்றைய ஒடிசா).

‘மணிகர்ணிகா’ என்ற பெயரில் ஜான்சி ராணியின் வாழ்க்கை வரலாறு சமீபத்தில் திரைப்படமாக வெளியிடப்பட்டபோது வரலாறு தவறாக திரிக்கப்பட்டது என்று குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. ஐஸ்வர்யா ராய், ஹிருத்திக் ரோஷன் நடித்த ‘ஜோதா அக்பர்’ நாட்டின் சில பகுதிகளில் கடும் எதிர்ப்பை உருவாக்க, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் இந்தப் படத்துக்கு தடை விதிக்கப்பட்டது. ஜோதா திருமணம் செய்து கொண்டது அக்பரை அல்ல அவரது மகன் ஜஹாங்கீரைத்தான் என்றும் கூட கூறப்பட்டது.

அலாவுதீன் கில்ஜிக்கும் இளவரசி பத்மாவதிக்கும் ஒருவித காதல் உணர்வு இருப்பதாக ‘பத்மாவதி’ படத்தில் ஒரு காட்சி வைக்கப்பட்டதாக செய்தி பரவ, எதிர்ப்புகள் கிளம்பின. (ராஜபுதனப் பரம்பரை பத்மாவதியை ஒரு தெய்வப் பெண்ணாகவே வழிபடுகிறது). இதைத்தொடர்ந்து ராஜஸ்தானில் அந்த படம் தடை விதிக்கப்பட்டது.

இப்போது ராமாயணத்துக்கு வருவோம். ‘சம்பூர்ண ராமாயணம்’ என்ற பெயரில் ஏபி நாகராஜன் அந்தக்காலத்தில் ஒரு திரைப்படத்தை எடுத்தபோது அதில் என்டி ராமராவ் ராமராகவும் சிவாஜி கணேசன் பரதனாகவும் பத்மினி சீதையாகவும் நடித்திருந்தனர். கொண்டாடப்பட்ட திரைப்படம் அது. ‘சம்பூர்ண ராமாயணம்’ என்ற பெயரிலேயே பின்னர் வேறொரு படம் உருவானது. சோபன்பாபு, சந்திரகலாவை ராமர்-சீதையாகவும் ரங்காராவை ராவணனாகவும் சித்தரித்தது அந்த படம். ‘லவகுசா’ திரைப்படத்தில் என்டிஆர் ராமராகவும் அஞ்சலிதேவி சீதையாகவும் நடித்திருந்தார்கள். எந்த எதிர்ப்பும் கிளம்பவில்லை.

ஆனால் வேறு சில ராமாயண திரைப்படங்கள் உருவானபோது பிரச்னைகளும் உருவாகின. ‘ஸ்ரீராமராஜ்யம்’ என்ற திரைப்படத்தில் என்டிஆரின் மகன் பாலகிருஷ்ணா ராமராகவும் நயன்தாரா சீதையாக நடித்த போது கதாநாயகி தேர்வு குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தன. நயன்தாராவின் தனி வாழ்க்கையுடன் ஒப்பிடப்பட்டு அவர் சீதை கதாபாத்திரத்தை ஏற்கக்கூடாது என்று கூறினார்கள். எனினும் படம் வெளியான பிறகு நயன்தாராவின் நடிப்பு பாராட்டப்பட்டது.

சயீப் அலி கான் கூறியதை இயக்குனர் மணிரத்னம் தன் படத்தில் ஏற்கனவே சாமர்த்தியமாகப் புகுத்திவிட்டார். அவர் நேரடியாக ராமாயணத்தைத் திரைப்படமாக்கவில்லை. ஆனால் ‘ராவணன்’ திரைப்படத்தில் ராமாயண பாத்திரங்களை சமூக பாத்திரங்களாக சித்தரித்திருந்தார். இதில் சந்தேகப்படும் ராமராக பிரித்விராஜும், சீதையாக ஐஸ்வர்யா ராயும், அவரை சிறைப்படுத்தும் ராவணனாக விக்ரமும் நடித்திருந்தார்கள்.

ஆனால், ராம பக்தர்களைப் பொறுத்தவரை, ’ஸ்ரீராமரை எதிர்க்கும் ராவணன் முழுக்கத் தீயவன். ராவணனைப் போற்றும் எந்தக் கோணமும் ராமருக்கெதிரானது’ என்ற எண்ணம் வலுவாகப் பதிந்துள்ளது. இதனால்தான் ‘ஆதிபுருஷ்’ படம் வெளியாகும் முன்பே (சயீப் அலி கானின் பேச்சு காரணமாக) பேசுபொருள் ஆகியிருக்கிறது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :