• GLITTERS | பளபள

லஞ்சம் ஒழிய சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும்!


முன்னாள் காவல்துறை தலைவர் இராதாகிருஷ்ணன்
நேர்காணல்: ராஜ்மோகன் சுப்பிரமணியம்

சர்வதேச ஊழல் ஒழுப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 9 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் இந்தியாவில் லஞ்சம் ஒழிய என்ன செய்ய வேண்டும்?

- இதுகுறித்து, தமிழ்நாடு காவல்துறைத் தலைவராக சேவையாற்றியவரும், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையில் முக்கிய பங்கு வகித்தவருமான ஐபிஎஸ். திரு இராதாகிருஷ்ணன் கல்கி ஆன்லைனுக்காக மனம் திறந்து பிரத்தியேகமாகப் பேசினார். லஞ்ச ஒழிப்பு தினத்திற்கான சிறப்பு நேர்காணல் இது. .

கேள்வி : ஊழலை முற்றிலும் ஒழிக்க வேண்டும் எனில், மக்களிடையே என்ன மாதிரியான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்?

திரு. ராதாகிருஷ்ணன் : ஊழல் நிகழ்வில் இரண்டு விஷயங்கள் நடக்கின்றன. ஒன்று பணம் கொடுப்பது. இன்னொன்று பணம் வாங்குவது. வெகுஜன மனிதர்கள், பணம் கையூட்டு கொடுத்தால் மட்டுமே ஒரு பணியை முடிக்க முடியும் என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு எப்படியாவது வேலை நடந்துவிட வேண்டும்! அவ்வளவுதான்! அதற்காக பணம் கொடுக்கும் கட்டாயத்தில் இருக்கிறார்கள். ஆனால் பணம் கொடுப்பதும் குற்றம் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் துரதிஷ்டம் என்னவெனில் பணம் வாங்குபவர்கள் இருக்கும்வரை பணம் கொடுப்பவர்கள் உருவாகி கொண்டேயிருப்பார்கள். யாருமே லஞ்சத்தை விரும்பித் தருவதில்லை. லஞ்சம் வாங்குவதும் சரி.. கொடுப்பதும் சரி.. இரண்டுமே சட்டப்படி தவறு!.

நான் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையில் நான்கரை ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து இருக்கிறேன். லஞ்ச ஒழிப்பு ஐ.ஜியாக நம்பர் - 2 நிலையில் இருந்து பல்வேறு லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைகளை கையாண்டிருக்கிறேன். அதாவது கடைநிலை ஊழியர்களில் ஆரம்பித்து, அரசின் மிக உயர்ந்த பதவியில் இருந்தவர்கள் உட்பட பலர் தொடர்பான பல்வேறு லஞ்ச ஒழிப்பு வழக்குகளை கையாண்டிருக்கிறேன். நான் கூர்ந்து கவனித்தவரையில் - மக்களால் மட்டுமே லஞ்சத்தை ஒழிக்க முடியாது. என்னதான் மக்கள் வலிமையாக முடிவு செய்து ’இனி நான் லஞ்சம் தர மாட்டேன்’ என்று முடிவெடுத்தாலும், அதனால் உருப்படியான எந்த மாற்றமும் உருவாகாது.

உதாரணமாக நிலத்துக்கான பட்டா வாங்க, லஞ்சம் கொடுத்தால்தான் முடியும் என்ற நிலை வந்தால், அந்த மனிதர் தன் கொள்கையை விட்டுக் கொடுத்து லஞ்சம் தரும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார். அதனால், ஊழலை ஒழிக்க கடுமையான சட்டங்கள் இயற்றுவதே சரியான வழி நம் நாட்டில் லஞ்சத்திற்கு எதிராக சரியான சட்டம் இல்லை என்பதுதான் உண்மை. .

கேள்வி : ஆச்சர்யமாக இருக்கிறது! லஞ்சத்தை ஒழிக்க நம்ம ஊரில் சரியான சட்டங்கள் இல்லையா ?

திரு. ராதாகிருஷ்ணன் : ஆமாம்! அதுதான் உண்மைநிலை . லஞ்சம் வாங்குபவர்களை தண்டிக்க ஒரு சரியான சட்டம் இல்லாத நிலைதான் தொடர்கிறது. நம் நாட்டில் லஞ்சத்தை ஒழிக்க இந்திய பீனல் கோட் ( IPC ) யின் மூலமாக தான் கையாண்டு கொண்டிருந்தார்கள். இதற்கு என தனிசட்டம் இல்லை. அப்புறம் 1947-ல்தான் முதன்முதலில் Prevention Against Corruption Act பிரிட்டிஷ்காரன் கொண்டு வந்தான். நமக்கு சுதந்திரம் கொடுப்பதற்கு ஒரு மாதம் முன்புதான் இந்த சட்டம் அமலுக்கு வந்தது.

அதற்கு முன்பு Delhi Police Special Establishment Act என்று ஒரு சட்டம் நடைமுறையில் இருந்தது. அதவது, இரண்டாம் உலகப் போர் நடந்த காலக்கட்டத்தில், ஆங்கிலேய அரசுக்கு ஆதரவாக இந்தியாவும் அதில் கலந்துகொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருந்தது. இந்த இரண்டாம் உலக போரின்போது பெருமளவில் ஆயுதங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, அவை

ரயில்வே மூலம் கொண்டு செல்லப்பட்டன. அப்படி ஆயுதங்கள் கொள்முதல் செய்வதிலும், ரயில்கள் மூலம் கொண்டு செல்வதிலும் பெருமளவில் ஊழல் நடந்தன.

இதனை கட்டுப்படுத்தவே Delhi Police Special Establishment Act கொண்டு வரப்பட்டது. இதன் நவீன அவதாரம்தான் நம் சிபிஐ அமைப்பு!. லஞ்ச ஊழலுக்கு எதிரான முதல் படிக்கல் இதுதான். அதற்கு பிறகு 1947-ல் ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது. பின்னர் அந்த சட்டத்தை மேம்படுத்தி, மீண்டும் 1988-ல் புதிய சட்ட வரைவை அமல்படுத்தினார்கள். ஆனால், இந்த சட்டங்களால் பெரிதாக எதுவும் சாதிக்க முடியவில்லை. .

கேள்வி : இந்த சட்டங்கள் ஏன் வலிமைப் படுத்தப்படவில்லை ?

திரு. ராதாகிருஷ்ணன் : 1988 ல் ராஜிவ் காந்தி 1988 ல் பிரதமராக இருந்தபோது இதற்கான நடவடிக்கை எடுத்தார். அவருக்கு வலிமையான ஆதரவும் இருந்தது. ஏறத்தாழ 415 பாராளுமன்ற உறுப்பினர்களை அவர் பெற்றிருந்தார். அப்போதுதான், ’’நடைமுறையில் இருக்கும் சட்டங்கள் சரியில்லை. இதனை வலிமைப்படுத்தவேண்டும்’’ என்று மாற்றங்களை கொண்டு வந்தனர். ஆனால் அந்த சட்டத்திலும் - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏவும், எம்பிக்களும் மக்களூக்காக உழைப்பவர்கள் (Public servant) என்று வரையறுக்கப்படவில்லை.

இந்தியாவில் நடைமுறைப் படுத்தப்படும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தும் அதிகாரத்தில் இந்த எம் எல் ஏக்களும், எம்.பி.க்களும்தான் இருக்கிறார்கள். அவர்கள்தான் மந்திரிகளாக அதிகாரத்தை கையாளுகிறார்கள். அபடிப்பட்டவர்களை பப்ளிக் சர்வென்ட் ’(Public Servant) என்று வரையறைப் படுத்தாததால், அவர்கள் தவறிழைத்தாலும் சட்டத்தால் ஒன்று செய்ய இயலவில்லை. அப்படியே நடவடிக்கை எடுக்க முனைந்தாலும், சட்ட நுணுக்கங்களை மேற்கொண்டு தப்பித்து விடுகிறார்கள்.

ஆகவே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மீதும் சட்டத்தின் கீழ் தண்டிக்க வாய்ப்பிருந்தால் மட்டுமே, லஞ்ச ஊழலைக் கட்டுப்படுத்த முடியும்.

இதற்கு முன்பு மொராஜி தேசாய் துணை பிரதமராக இருந்தபோது ஜவஹர்லால் நேரு ஒரு கமிட்டி அமைத்தார். இதை First Administrative Reforms கமிட்டி என்று அழைத்தார்கள். இது 1962 ல் என்று நினைக்கிறேன். அப்பொழுது மொரார்ஜி தேசாய் சொன்னார் “லஞ்சம் என்றவுடன் கீழ் மட்டத்தில் இருப்பவர்களை மட்டும் பார்த்து கொண்டிருக்கிறோம். ஆனால் மேல் மட்டத்தில் பெருமளவில் இருக்கிறது. இதனை கையாள வேண்டும் எனில் வலிமையான லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா வேண்டும்’’ என்று குரல் எழுப்பினார். அதாவது லோக் பால் என்பது மத்திய அமைச்சர்களை, நாடாளுமன்ற உறுப்பினர்களை கண்காணிக்கவும் ,லோக் ஆயுக்தா மாநில அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களை கண்காணிக்கவும். தவறு செய்தால் நடவடிக்கை எடுக்கவும் உருவாக்கப்பட்ட அமைப்பு. ஆனால், இந்த இரு அமைப்புகளும் ஏற்படுத்தப் படவேயில்லை!

பின்னர், 2014-ல் ஊழலுக்கு எதிராக அரவிந்த் கேஜ்ரிவால், அன்னா ஹாசரே போன்றவர்கள் வேகமாக சத்தம் எழுப்பியதால் அப்போதைய காங்கிரஸ் அரசு 2014 ஜனவரியில் இந்த லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தாவை கொண்டு வந்தது. ஆனால் சில மாதங்களில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து காங்கிரஸ் ஆட்சி சென்று பாஜக வந்தது. இதில் மிகவும் கவனிக்கப் பட வேண்டியது என்னவென்றால், காங்கிரஸ் ஆட்சியின்போது இந்த இரு சட்டங்களையும் கொண்டுவரக் கோரி தீவிரமாக இருந்தது பாஜகதான்!

ஆனால், 2014 மே மாதம் ஆட்சி அதிகாரம் பாஜக-வுக்கு வந்ததும், லோக்பால், லோக் ஆயுக்தா விஷயத்தை கிடப்பில் போட்டுவிட்டது.! இத்தனைக்கும் காங்கிரஸ் கொண்டு வந்த அந்த லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா மசோதாக்கள் அவ்வளவு வலிமையானதுகூட அல்ல அதிலும் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் 2019 வரை இதை தொடக்கூட இல்லை! இதுகுறித்து சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியதையடுத்து - 2019 தேர்தலுக்கு முன்பு சும்மா பேருக்கு பாஜக லோக்பாலை கொண்டுவந்தது. இதை ஏன் பாராளுமன்றத்தில் கொண்டு வர மறுக்கிறார்கள், அந்த சட்டம் அவர்களுக்கு எதிராகவே மாறிவிடும் என்பது நன்றாகத் தெரியும் என்பதால்தான்!. .

கேள்வி : லஞ்ச ஊழலுக்கு எதிராக வலிமையான சட்டம் எப்படி உருவாக்கப் பட வேண்டும்? ஊழலுக்கு எதிரான தண்டனைகள் எப்படி வழங்கப்படவேண்டும்?

திரு. ராதாகிருஷ்ணன் : வலிமையான சட்டம் என்றவுடன் . தண்டனையை கூட்டவேண்டும் என்பதல்ல! தண்டனை என்றால் இப்பொழுது அதிகபட்சம் 7 வருடமும் குறைந்தபட்சம் 2 முதல் 1 வருடம் வரையில் இருக்கும். தண்டனையை கூட்டவேண்டும் என்பது முக்கியமல்ல. ஆனால் யார் யார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற அதிகாரம் அரசாங்கத்திடம்தான் இருக்கிறது. அரசின் தலையீடு இருக்க கூடாது! இப்போது சிபிஐ பற்றிய அதிகாரம் மத்திய அரசுக்கும், லஞ்ச ஒழிப்புத்துறை மாநில அரசின் கையிலும் இருக்கிறது. இதுதான் சிக்கல்! ஒரு கொலை நடந்தது என்றால் ’’இன்னார்மீது நடவடிக்கை எடு.. அல்லது எடுக்காதே’’ என்று அரசு தலையிட்டு சொல்ல முடியாது. உள்துறை அமைச்சர்கூட தலையிட முடியாது.

ஆனால் லஞ்ச ஒழிப்பு விஷயத்தில் மட்டும் அரசாங்கத்தின் அனுமதி பெறாமல் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. அங்குதான் இந்த சிக்கலே ஆரம்பிக்கிறது. இந்த லஞ்ச ஊழலுக்கெதிரான சட்டத்தின்படி ஆளுங்கட்சியினர் மீது வழக்கு தொடுக்க முடியாது. அவர்களை விசாரிக்க முடியாது. காரணம் - விசாரிக்கும் பொறுப்பிலும் ஆளும் கட்சியினரே இருப்பார்கள்! இதனை தட்டிக் கேட்க வேண்டிய அரசியலமைப்பும், சட்ட அமைப்புகளும் பலவீனமாக இருக்கிறது. .

கேள்வி : அப்படியெனில் வேறு என்னதான் வழி? பாரபட்சமற்ற விசாரணை மேற்கொள்ளும் அளவில் ஊழலுக்கெதிரான சட்டம் செயல்பட அனுமதிக்கவேண்டும் அல்லவா?

திரு. ராதாகிருஷ்ணன் : இன்று மக்கள் மத்தியில் பெருமளவில் விழிப்புணர்வு வந்துவிட்டது. சமூக ஊடகங்களில் வெளிப்படையாக விவாதிக்கிறார்கள். இவர்களுக்கு முன்னுதாரணமாக அரசியலமைப்பு மாற்றத்திற்கு தயாராகவேண்டும். கமலஹாசன் கட்சி ஆரம்பித்ததுமே - ஊழல் லஞ்சத்தை ஒழிக்க வலிமையான சட்டம் வேண்டும் என்று உரக்க குரல் கொடுத்தார். அதைக் கேட்டு சந்தோஷமாக இருந்தது. ஏனெனில் அவர் சரியாக புரிந்து வைத்திருக்கிறார். நம் நாடு பாதிக்கப்படுவது லஞ்ச ஊழல் விவகாரம் என்ற இந்த ஒரு விஷய்த்தில்தான்! நம்முடையது மிகவும் வளம்பொருந்திய நாடு. அதை வினியோக்கும் இடத்தில்தான் பிழை நடக்கிறது. இதை களையும்போது நிச்சயம் நம் நாடு முழு வளர்ச்சியை அடையும்! மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். அதேசமயம் ஆட்சி அதிகாரத்திலும் மாற்றம் வரவேண்டும். இவை இரண்டுமே விரைவில் நிச்சயம் நடக்கும் என்று நம்புவோம்’’

- என்று சொல்லி, சிரித்தபடி விடைகொடுத்தார் திரு.ராதாகிருஷ்ணன்
Comments

கே ஆர் எஸ் சம்பத் says :

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது எனும் பாடல் வரி லஞ்சத்திருக்கும் பொருந்தும் .

Dr Singaram Sri Hari says :

Exhaustive information in a crisp interview, well done interview

Kay says :

Well detailed information. Let’s believe things will be changed in future. Thank you

Sakthivel says :

A crisp interview contains detailed information

Sakthivel says :

A crisp interview contains detailed information

R.Muthurajan says :

சட்டத்திற்கு உட்பட்டு நடைபெற வேண்டிய செயல்களுக்கு அனுமதி தருவதற்கு அனைத்து துறையினரும் பிரதிபலனை எதிர்பார்த்து செயல்படுகின்றனர். அரசியல்வாதிகளின் உங்களுக்கு முன்பு இவையெல்லாம் மிக சிறிய தொகை என்பதால் மக்களும் இது குறித்து சிந்திப்பதே இல்லை

R.Muthurajan says :

சட்டத்திற்கு உட்பட்டு நடைபெற வேண்டிய செயல்களுக்கு அனுமதி தருவதற்கு அனைத்து துறையினரும் பிரதிபலனை எதிர்பார்த்து செயல்படுகின்றனர். அரசியல்வாதிகளின் ஊழல் தொகை களுடன் ஒப்பிடும் பொழுது இவையெல்லாம் மிக சிறிய தொகை என்பதால் மக்களும் இது குறித்து சிந்திப்பதே இல்லை

RAJAN S says :

Respected Sir, we have enlightened the core issues of anti corruption, implementation. Thanks a million Sir.

Teacher Subbulakshmi says :

தங்களின் மேலான கருத்துகள் அனைத்தும் எல்லோராலும் எளிதாக புரிந்து கொள்ளக்கூடியவை. பாராட்டுக்கள். உங்களைப்போல நேர்மை மிகுந்த அதிகாரிகள் , சட்டவல்லுனர்கள் அனைவரும் சேர்ந்து நம் நாட்டிற்கு நன்மைகள் செய்ய ஆசிகளுடன் நல்வாழ்த்துக்கள்-டீச்சர்.

Dr.Paarthasarathi says :

இந்த சட்ட சிக்கல் சரி செய்ய முடியாது்் திருடனே நீதிபதியாக இருப்பதை போல் உள்ளது. எந்த அரசு வேலையும் லஞ்சம் இல்லாமல் நடக்காது என்பது உறுதி். லஞ்சம் கொடுக்க வேண்டிய சூள்நிலைக்கு மக்கள் நள்ளப்பட்டுள்ளனர்.. மேல் மட்டத்தில் சரியாக இருந்தால் இது சரியாகும். இந்த அதிகாரம் தந்ததின் நோக்கமே அதுதான்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :