தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் ஹெலிகாப்டரில் பறந்து பறந்து சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அந்தவகையில் நேற்று திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் வீரசக்திக்கு வாக்கு கேட்டு மலைக்கோட்டை பகுதியில் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது கமல்ஹாசன் பேசியதாவது:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தின்போது தன்னைக் குறிப்பிட்டு லேடியா? மோடியா? என பேசினார். அதேபோல நான் இப்போது கேட்கிறேன் மோடியா? இந்த தாடியா? மத்திய அரசை தைரியமாக கேள்வி கேட்க ஆள் வேண்டும். ரெய்டு விட்டால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மீதும் கமல்ஹாசன் மீது விடுங்கள். பக்கத்து வீட்டுக்காரர்கள் மீது விடாதீர்கள்
-இவ்வாறு ஆவேசமாக கமல்ஹாசன் பேசும்போது, கூட்டத்தில்ல இருந்த பெண் ஒருவர் அவரை நோக்கி ஏதோ கேள்வி கேட்டார். அதற்கு கமல் சைகையால் பதில் சொல்ல, அந்த பெண் கோபடைந்து கூச்சலிட்டபடி தன் கையில் வைத்திருந்த புத்தகங்களை கமலை நோக்கி வீசினார். இதையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக அந்த பெண்ணை மக்கள்நீதி மய்யக் கட்சித் தொண்டர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் அந்த பெண் உரக்க முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவரை வலுக்கட்டாயமாக கட்சித் தொண்டர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இதையடுத்து அப்பிரசாரக் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பெண் பப்ளிசிட்டிக்காக திட்டமிட்டு இப்படி செய்தாரா? வேறு ஏதும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments