• JUST IN | சுட சுட

கொரோனா தாக்கம் அதிகரிப்பு: தமிழக பள்ளி, கல்லூரிகள் நேரடி வகுப்புகள் ரத்து! அரசு உத்தரவு!





கொரோனா தாக்கம் அதிகரிப்பு காரணமாக, பள்ளிக்கூடங்களை தொடர்ந்து கல்லூரிகளிலும் நடைபெற்று வந்த நேரடி வகுப்புகளை ரத்து செய்து அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. ‘ஆன்லைன்` முறையில் வகுப்புகள் தொடரும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்டு இருந்தன. நோய் பாதிப்பு சற்று குறைந்ததை அடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கின.

அதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து மற்ற மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்த நிலையில் கொரோனா நோய்த்தொற்று மீண்டும் தமிழகத்தில் அதிகமாக பரவத் தொடங்கியிருக்கிறது.

இதனை கருத்தில் கொண்டு ஏற்கனவே பள்ளிகளில் நடைபெற்று வந்த 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகளை ரத்து செய்து மறு உத்தரவு வரும் வரை பள்ளிகளை மூட அரசு உத்தரவிட்டு இருந்தது.

அதன் தொடர்ச்சியாக கல்லூரிகளிலும் நேரடி வகுப்புகளை தொடரலாமா என்பது குறித்து ஆலோசிக்க நேற்று காணொலி காட்சி மூலம் அவசரக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வாவுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது சுகாதாரத்துறை, பேரிடர் மேலாண்மை துறையை சேர்ந்த அதிகாரிகள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள், உயர் கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோரும் இருந்தனர்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் பள்ளி, மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதைல் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாம் அலை அதிகரித்து வருவதால் மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி, வரும் 23-ந் தேதி இன்று முதல் (மார்ச்ஹ் 23) உயர் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் மற்றும் தமிழகத்தில் செயல்படும் அனைத்து நிகர்நிலை பல்கலைக்கழகங்களிலும் வகுப்புகள் இணையவழி முறையில் வாரத்தில் 6 நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.

அறிவியல், பொறியியல் மற்றும் பலவகை தொழில்நுட்ப பிரிவு மாணவர்களுக்கு குறிப்பாக இறுதி பருவ மாணவர்களுக்கு செயல்முறை வகுப்புகள் மற்றும் செயல்முறை தேர்வுகள் வருகிற 31-ந் தேதிக்குள் முடித்திடவும், மேலும் இந்த பருவத்துக்கான இறுதி தேர்வுகளை இணைய வழியில் மட்டுமே நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்படி கல்லூரிகளில் நடைபெற்று வந்த நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, அந்த வகுப்புகள் இணையவழியில் மட்டுமே நடைபெற உள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :