• அமரர் கல்கியின் கல்வெட்டுகள்

40. என்ன செய்தி?


- அமரர் கல்கி

வளர்ச்சியும் வாழ்த்தும்

தமிழர் பத்திரிகையான ‘கல்கி’யை ஆரம்பித்த புதிதில் நமது மதிப்புக்குரிய ஒரு நண்பர், “கல்கி பிறந்து வளரவில்லை, வளர்ந்தே பிறந்துவிட்டது” என்று பெருமிதத்துடன் எழுதினார். ஆயினும் ‘கல்கியின் வளர்ச்சியில் இன்னும் எவ்வளவோ பாக்கியிருக்கிறது என்பதை நாம் உணர்ந்திருந்தோம். யுத்த நிலைமையை எண்ணி ‘கல்கி’யை வாரப் பத்திரிகையாக்க எத்தனை காலம் காத்திருக்க வேண்டியிருக்குமோ என்று கவலை கொண்டிருந்தோம். அந்தக் கவலையைப் போக்கி, ‘கல்கி’ ஆரம்பமான முப்பத்து மூன்றாம் மாதத்தில் அதை வாரப் பத்திரிகையாகக் கொண்டுவரத் துணைபுரிந்து முருகப் பெருமானுடைய திருவருளையும் நேயர்களுடைய பேரபிமானத்தையும் வாழ்த்துகிறோம்.

வாரப் பத்திரிகை ஆகிவிட்டதினாலேயே ‘கல்கி’ பூரண வளர்ச்சி பெற்ற தாகாது என்பதை நாம் அறிந்திருக்கிறோம். அத்தகைய பூரண வளர்ச்சி அடைவதற்கு, காகிதப் பஞ்சமும், பத்திரிகைகள் இவ்வளவு பக்கந்தான் வெளியிடலாம் என்னும் சர்க்கார் கட்டுப்பாடும் நீங்கும் நற்காலத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம்.

மகாகவியின் திருவிழா

தமிழ்நாட்டின் தவப் பயனாகத் தோன்றிய கவிஞர்களுக்குள்ளே தலைசிறந்த மகாகவி கம்பர். அந்தக் கம்பநாட்டாழ்வாருக்குச் சில காலமாகத் தமிழ்நட்டில் பிரமாதமான அதிர்ஷ்டம் அடித்து வருகிறது. தமிழ்நாட்டின் பல இடங்களிலும் பங்குனி உத்திரத்தின்போது கம்பன் விழாவைக் கொண்டாடி வருகிறார்கள். இந்த வருஷம் கம்பரின் திருநட்சத்திரம் உச்சத்துக்கே வந்துவிட்டதாகக் காண்கிறது. ஏனெனில் ஆந்திர சகோதரர்கள் தங்களுடைய நகரம் என்று பாத்தியதை கொண்டாடும் சென்னை மாநகரில் சேர்ந்தாற்போல் பத்து தினங்கள் அமோகமாகக் கம்பன் திருவிழா கொண்டாடப் போகிறார்கள். தினந்தோறும் பொதுக் கூட்டங்களும் பிரசங்கங்களும் நடப்பதோடு கூட, கம்பர் உருவப்படத்தை யானைமேல் வைத்து ஊரவலம் விடப் போகிறார்கள். இப்படி எந்தெந்த விதங்களில் கம்பருக்குத் திருவிழா கொண்டாடினாலும் தகும், அவசியந்தான் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. இவ்வளடன் கம்பர் விழா கொண்டாடுவதற்கு இன்னொரு வழியையும் நாம் குறிப்பிடக் கூடும். கம்பரின் கவிதைக்கெனத் தம் வாணாளை அர்ப்பணம் செய்தவரான ஸ்ரீ டி.கே.சி. அவர்களின் கம்பராமாயணப் பதிப்பு - ஆரண்ய காண்டம் - வெளியாகி யிருக்கிறது. அதைப் படித்து அனுபவிப்பதன் மூலமாகவும் கம்பர் விழாவைத் திவ்யமாகக் கொண்டாடலாம்.

உபசாரப் பத்திரம்

ஆந்திர சாம்ராஜ்ய இயக்கத்தின் தலைவராகத் தம்மைத் தாமே நியமித்துக் கொண்டிருக்கும் விஜயநகரம் குமாரராஜா ஸர் விஜயா அவர்களுக்கு சென்னை நகர சபையார் உபசாரப் பத்திரம் ஒன்று வழங்கத் தீர்மானித்திருந்தார்கள். இந்தத் தீர்மானத்தை ஸர் விஜயா பாராட்டிவிட்டு ஆனால் குறிப்பிட்ட தேதியில் தாம் சென்னைக்கு வர முடியவில்லை என்று தெரியப்படுத்திவிட்டாராம். இவ்விதம் வீணாய்ப் போகிற உபசாரப் பத்திரத்தை சென்னை நகர சபையார் தங்களுக்குத் தாங்களே படித்துக் கொடுத்துக் கொண்டு ஆனந்தப்படலாம் என்று யோசனை கூறுகிறோம்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :