• JUST IN | சுட சுட

என்னை கொலை செய்ய முயற்சி: அமமுக கட்சியினர் மீது கடம்பூர் ராஜு குற்றச்சாட்டு!





தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அமமுகவின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில் கோவில்பட்டியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜு தெரிவித்ததாவது:

நேற்றிரவு அதிமுக, அமமுக என இருதரப்பும் ஒரே இடத்தில் பிரச்சாரம் செய்ய வேண்டிய சூழ்நிலை வந்தபோது காவல் துறை கேட்டுக் கொண்டதால் நான் என்னுடைய பிரசாரத்தை ரத்து செய்தேன். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக என்னுடன் வந்த வாகனங்களை திருப்பியனுப்பி விட்டு தனியாக காரில் சென்றேன்.

அச்சமயம் அமமுகவினர் என் கார் மீது வெடுகுண்டுகளை வீசி எறிந்தனர். வாகனம் தீப்பற்றி எரியக்கூடிய சூழ்நிலை இருந்தது. இதனால் கார் டிரைவருக்கும் எனக்கும் தீப்பொறி மேலே விழுந்து காயங்கள் ஏற்பட்டுள்ளது

-இவ்வாறு கடம்பூர் ராஜூ தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்ததாவது:

என்னுடைய கார் டிரைவர் லாவகமாக காரை ஓட்டவில்லை என்றால் கார் தீப்பிடித்து எரிந்து என்னுடைய உயிருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். தேர்தல் பணிக்கு வரும் போதே இப்படி அராஜகம் செய்யும் நிலையில் அக்கட்சி இருக்கிறதென்றால், ஒருவேளை வெற்றிபெற்றால் என்ன செய்வார்கள் என்பதை மக்கள் யோசித்துப் பார்க்கட்டும். என்னுடைய தேர்தல் பணியை தடுப்பதற்காக கொலை செய்ய முயற்சி செய்கின்றனர். மேலும் தோல்வி பயத்தினால் இப்படிப்பட்ட செயல்களில் அமமுகவினர் இறங்கியுள்ளனர், நான் எதையும் சந்திக்க தயாராக இருக்கிறேன்

-இவ்வாறு தெரிவித்தார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :