• SPARKLES | மினுமினு

இழந்தவற்றை மீட்டுத் தருவாள் பொலாலி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி!


ஜே.வி.நாதன்

கர்நாடக மாநிலம், பல்குனி நதிக்கரையில் அமைந்துள்ளது பொலாலி திருத்தலம். இங்குதான் புகழ்பெற்ற ஸ்ரீராஜ ராஜேஸ்வரி ஆலயம் அமைந்துள்ளது.

‘குதிரைமுக்’ எனுமிடத்தில் உற்பதியாகி ஓடிவரும் பல்குனி நதி, இந்த ஆலயத்தைச் சுற்றிக்கொண்டு ஓடுவது, மகா சக்தி வாய்ந்த அன்னையைச் சுற்றி வந்து வணங்குவதான தோற்றம் தந்து, ஆலயத்துக்குப் பெருமையையும் எழிலையும் சேர்க்கிறது.

நம் நாட்டின் புகழ்வாய்ந்த திருத்தலங்களில் ஒன்றான இந்த பொலாலி ஸ்ரீராஜ ராஜேஸ்வரி ஆலயம், தென் கன்னட மாநிலம், பண்ட்வால் தாலுகாவில் கரியங்கலா கிராமத்தில் அமைந்துள்ளது மங்களூரிலிருந்து 25 கி.மீ. தூரம். இங்கு தாயாக வீற்றிருக்கிற ஸ்ரீராஜ ராஜேஸ்வரி, தன்னைத் தேடி வரும் பக்தர்களுக்கு மிகுந்த பிரியத்துடனும் கனிவுடனும் அருளை வாரி வழங்குகிறாள்!

அசோக சக்ரவர்த்தி இந்தியாவில் ஆட்சி செய்தபோது, அவர் உருவாக்கிய கல்வெட்டுகளிலும், அப்போது அயல்நாடுகளிலிருந்து பாரதம் வந்த யாத்ரீகர்களின் குறிப்புகளிலும் இக்கோயில் பற்றிய விவரங்கள் உள்ளன. 1442-ல் பாரதத்துக்கு வருகை தந்த யாத்ரீகரான அப்துல் ரஸாக் ஹிஸ்ரா, இந்த ஆலயத்தையும், இங்குள்ள ஸ்வாமிகளின் மூர்த்தங்களையும் பார்த்து, உலகில் வேறு எங்கேயும் இவற்றைப்போல் நான் கண்டதில்லை!" என்று பாராட்டி எழுதியிருக்கிறார்.

இக்கோயிலை உருவாக்கியவன், மன்னன் சுராதா. பொன்னாலும் வைரத்தாலும் இழைத்துச் செய்த மணிமுடியை மூலவரான ஸ்ரீராஜ ராஜேஸ்வரியின் தலையில் அணிவித்து அழகு பார்த்தான் அவன்.

கெலாடியை ஆண்ட அரசனின் பட்டமகிஷி பொலாலிக்கு வருகை தந்தபோது, கோயிலுக்கு ரதம் இல்லை என்பது மனதில் உறுத்தல் ஏற்படுத்த, தம் செலவில் பெரிய தேர் ஒன்றைச் செய்து கோயிலுக்கு வழங்கினாள் ராணி.

மூலவர் ஸ்ரீராஜ ராஜேஸ்வரி அமர்ந்த கோலத்திலேயே 9 அடி உயரத்தில் அருள்பாலிக்கிறார்; அம்பிகையைத் தரிசிப்பவர்கள், தங்கள் கணகளை வேறு பக்கம் திருப்ப முடியாதபடி இழுத்துப் பிடிக்கிறது தேவியின் தோற்றம்.. கருவறை முன் நாம் நின்று பார்த்தால், மூலவரின் முழுப் பரிமாணத்தையும் காண முடிவதில்லை. கீழே அமர்ந்து அம்பிகையைத் தரிசித்தால்தான், முழு உருவமும் நம் கண்களில் பட்டுப் பரவசமூட்டுகிறது!

கருவறையில் மூலவர் தவிர, அங்குள்ள ஸ்ரீ மகாகணபதி, ஸ்ரீ சரஸ்வதி, ஸ்ரீ பத்ரகாளி மற்றும் ஸ்ரீ சுப்ரமணியர் - அனைத்தும் களிமண் சிலைகளே!

கருவறை மூலவர் மற்றும் மூர்த்தங்களுக்கு எட்டு வகை மூலிகை மருந்துக் கலவைகள் கொண்டு மேல்பூச்சு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த மூலிகைப் பூச்சு மருந்துக் கலவையானது ஆலயத்தில் பல நூறு ஆண்டுகளாக அழியாதபடி வைத்துப் பாதுகாக்கப்பட்டு வருகிறதாம். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஸ்வாமிகளின் திருவுருவங்களுக்கு இந்தப் பூச்சு வேலை நடக்கிறது. இந்த மேற்பூச்சினால், களிமண் சிலை, கிரானைட் சிலை போல மிகவும் இறுகி, உறுதி கொண்ட சிலையாகி விடுவதாகச் சொல்லுகிறார்கள்!

பொலாலி ஸ்ரீராஜ ராஜேஸ்வரி ஆலயத் திருவிழா, ஒவ்வொரு வருடமும் மார்ச் மத்தியில் கொடியேற்றம் தொடங்கி, ஒருமாதத்துக்கு நடக்கிறது. அப்போது ‘பொலாலி செண்டு’ என்று குறிப்பிடப்படும் கால்பந்தாட்டமும் இந்த விழாவின் இடையில் ஐந்து நாட்கள் நடக்கின்றது. அதில் பங்கேற்று ஆடுபவர்கள், பக்த கோடிகளே! இதைப் பார்த்து ரசிக்க பல்வேறு மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருகிறார்கள்.

திப்பு சுல்தான் ஆட்சி செய்கையில் ஆலயக் கால்பந்தாட்டச் சிறப்பு பற்றிக் கேள்விப்பட்டு, இங்கு வந்து கோயிலுக்கு விலை மதிப்பில்லாத ஏராள நகைகளைத் தானமாக அளித்ததோடு, கால்பந்து விளையாட்டையும் கண்டு ரசித்துவிட்டுப் போனான் என்பது வரலாறு. வடபுறத்தில் பெரிய மேடை அமைக்கப்பட்டு, அங்கு திப்பு அமர்ந்து விளையாட்டைப் பார்த்து ரசித்தானாம். அந்த மேடையை இன்றும் காணலாம்!

பொலாலியில் மூலவர் ஸ்ரீராஜ ராஜேஸ்வரி என்றபோதிலும், உற்சவராக அர்ச்சகரின் தலையில் சுமக்கப்பட்டு, ஆலயத்தை வலம் வந்து பக்தர்களுக்குத் தரிசனம் கொடுப்பவர் ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமிதான்! இதுவும் வேறு எங்குமே காண முடியாத வித்தியாச சிறப்பு!

ஆலயத்தின் அனைத்து சொத்துக்களும் வெளிப் பிராகாரத்தில் உள்ள ஸ்ரீ துர்கா பரமேஸ்வரியின் பெயரில்தான் உள்ளன; மூலவரான ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரியின் பெயரில் இல்லை! கர்நாடக அரசாங்கத்தின் அறநிலையத் துறை ஆண்டுதோறும் இந்த ஆலயத்துக்கு வழங்கும் மானியத் தொகை, ஸ்ரீ துர்கா பரமேஸ்வரியின் கணக்கிலேயே வரவு வைக்கப்படுகிறது.

இங்கு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வேறு சில விஷயங்களும் உள்ளன.

கருவறையில் உள்ள ஸ்வாமிகளின் திருவுருவங்கள் களிமண்ணால் ஆனவை என்று குறிப்பிட்டோம். வெளிப் பிராகாரத்தில் உள்ள ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி, கிரானைட்டால் உருவாக்கப்பட்டது. கோயிலுக்குப் பாதுகாவலராக உள்ள சேத்திரபாலர் உருவம் மரத்தால் செய்யப்பட்டது. திருவிழாவில் ஆலயத்தை வலம் வரும் உற்சவ மூர்த்தியான ஸ்ரீ சுப்ரமணியர் சிலை, பஞ்ச உலோகங்களால் உருவாக்கப்பட்டது!

மூலவர் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரியின் பாதங்களுக்கிடையில் ஒரு மயில் சிலை காணப்படுகிறது. இது அம்பிகையின் மைந்தன் ஸ்ரீ சுப்ரமண்யரைக் குறிக்க உருவாக்கப்பட்டிருக்கலாம். இதே போன்று ஸ்ரீபத்ரகாளியின் பாதத்துக்கு அருகில் ஒரு பெண் நரி காணப்படுகிறது. ஸ்ரீபத்ரகாளிக்கு மிகவும் பிடித்தமான பிராணி நரி என்று கூறுகிறார்கள்.

மூலவருக்குக் கீழே, உலோகத்தினால் செய்யப்பட்ட ஸ்ரீகணபதி, ஸ்ரீசிவன், ஸ்ரீராஜ ராஜேஸ்வரி, ஸ்ரீ பத்ரகாளி மற்றும் ஸ்ரீ சுப்ரமணியர் என ஐந்து உலோக விக்கிரகங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து பக்தர்களுக்குத் தீர்த்தம் வழங்குகிறார்கள்; மூலவர் களி மண்ணால் செய்யப்பட்டவர் என்பதால், அவருக்கு அபிஷேகம் இல்லை!

மன்னர் சுராதா தன் அரசையும் செல்வத்தையும் இழந்து எதிரிகளுக்குப் பயந்து காட்டுக்கு ஓடிப் போனார். அங்கு ஓர் துறவிக்கு சேவை செய்து வந்தார். காட்டில் எதிர்ப்பட்ட ஒரு வணிகருடன் சேர்ந்து ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரியை மூலிகை மருந்துகளால் உருவாக்கி, ஆலயமும் எழுப்பினார்.. அம்பிகையை மனமுருகி வழிபட்டார். எதிரிகளை வெற்றி கண்டு, தன் ராஜ்யத்தை மீண்டும் அடைந்தார் என்று சொல்லப்படுகிறது.

’’இந்த அம்பிகையைச் சரணடைந்து வழிபட்டால், இழந்த செல்வம் திரும்பக் கிடைக்கும், எதிரிகள் தோற்று ஓடுவார்கள் என்பது பலமுறை நிரூபுக்கப்பட்டிருக்கிறது’’ என்றார் இக்கோயில் அர்ச்சகர் மாதவ பட். மேலும் அவர் தெரிவித்தவை:

காலை 6 மணி தொடங்கி மதியம் 1.30 வரையும், மாலை 4 மணி முதல் 9.30 மணி வரையும் ஆலய நடை திறந்திருக்கும். மார்ச் 14ல் கொடியேற்ப்பட்டு,. ஒரு மாதம் திருவிழா நடக்கும். டிசம்பரில் சஷ்டி ஸ்ரீ சுப்ரமண்யருக்கு ரதோற்சவம், நவராத்திரி 9 நாள் உற்சவம் அம்பிகைக்கு அற்புதமாக நடக்கிறது. இங்கு 365 தினங்களும் பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது.

வாரத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இங்குள்ள சிவன், சதுர்புஜர். சேத்திரபாலர், மர விக்கிரகம் ஈசான்ய மூலையில் வீற்றிருக்கிறார்.

தேவிக்கு அபிஷேகம் இல்லை. புரோக்ஷணம்தான் (நீர் தெளிப்பு)! தேவிக்குக் கீழே பஞ்சலோக தேவி சிலை காணப்படுகிறது, அதற்கு அபிஷேகம் உண்டு.

இங்குள்ள பத்ரகாளிக்கு காயத்ரி பூஜை செது வழிபட்டால் வாழ்வில் சர்வ மங்களம் உண்டாகும்; மூலவர் ஸ்ரீ ராஜராஜேஸ்வரிக்கு பூஜை செய்தால் நினைத்தது நடக்கும்; குறிப்பாக கல்யாண தோஷ நிவர்த்தி! மேலும், வாழ்வில் இழந்தது எதுவானாலும் பன்மடங்கு விருத்தியுடன் திரும்பப் பெற அம்பிகை துணை புரிவாள் என்பது சத்திய நிகழ்வு!"

இவ்வாறு பொலாலி ஆலய அர்ச்சகர் மாதவ பட் நம்மிடம் நெகிழ்வுடன் தெரிவித்தார்.

Comments

கேஆர்எஸ் சம்பத் says :

தேசமெங்கும் கோரோனா ஒழிந்து , எல்லா மக்களும் நலமுடன் வாழ அருள் புரிவாய் தாயே!

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :