• GLITTERS | பளபள

’’சாகித்ய அகாடமி விருது என் நாவலுக்கான வெற்றி’’ -இமையம் பேட்டி!

பொன்.மூர்த்தி

எழுத்தாளர் இமையம் எழுதி 2018-ல் வெளியான ‘செல்லாத பணம்’ நாவலுக்கு 2020க்கான சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் இலக்கிய உலகில் அதுவரை ஆவணப்படுத்தப்படாத புதிரை வண்ணார்களின் வாழ்க்கையை இமையத்தின் முதல் நாவல் ‘கோவேறு கழுதைகள்’ படம்பிடித்தது. 1994-ல் வெளியான இந்த நாவலுக்குப் பிறகு, ‘ஆறுமுகம்’, ‘செடல்’, ‘எங் கதெ’, ‘மண் பாரம்’, ‘கொலைச்சேவல்’, ‘சாவு சோறு’, ‘நறுமணம்’, ‘நன்மாறன் கோட்டைக் கதை’ உள்ளிட்ட அவரது மற்ற படைப்புகள் வெளியாயின. இமையம் தன் எழுத்துக்காக இந்திய அரசின் ’இளநிலை ஆய்வு நல்கை, தமிழக அரசின் ‘தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது’, ‘அக்னி அக்ஷர விருது’, உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

தமிழ்நாட்டுக் கிராமங்களுக்குள் நிலவும் மனிதநேயமற்ற வேறுபாடுகளையும், பொருளாதார, சமூகப் பண்பாட்டுத் தளங்களில் நிலவும் முரண்பாடுகளையும் ஆதிக்கத்தின் குரூரங்களையும் தன் எழுத்தில் பிரதிபலிக்கும் இமையத்திடம் கல்கி ஆன்லைனுக்காகப் பேசினோம்.

‘செல்லாத பணம்’ நாவலுக்கு சாகித்திய அகாதெமி பரிசு கிடைத்திருக்கிறது. இது நாவலுக்கான வெற்றியா? எழுத்தாளருக்கான வெற்றியா? சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான வெற்றியா? எப்படிப் பார்க்கிறீர்கள்?

“நாவலுக்கான வெற்றியாகத்தான் பார்க்க முடியும். இது சாதி மேலாதிக்கத்துக்கு எதிராகக் கிடைத்த வெற்றி அல்லது சாதி கீழ்மைக்குக் கிடைத்த வெற்றின்னு சொல்ல முடியாது. ஒரு உண்மையான இலக்கியப் படைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம்.”

‘செல்லாத பணம் நாவல் எதைப் பற்றியது?

உயர்படிப்பு படித்த ஒரு பெண்ணுக்கும் ஆட்டோ ஓட்டும் ஒரு பையனுக்கும் ஏற்பட்ட காதல் கல்யாணத்தில் முடிகிறது. அந்தத் திருமண உறவில் குடும்ப வன்முறை காரணமாக அந்தப் பெண் தீயிட்டுக் கொளுத்தப்படுகிறாள். பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறாள். அப்படி அங்கு அவள் சிகிச்சை பெறுகின்ற மூன்று நாட்களில் தொடங்கி, இறக்கிற கணம் வரை நடக்கிற நிகழ்வுகள்தான் ‘செல்லாத பணம்’ நாவலின் கதை!’’

அரசியல் கட்சியால் சாதிக் கட்டுமானத்தை உடைத்து சமத்துவ சமுதாயத்தை உருவாக்க முடியுமா? அதற்கு அந்தக் கட்சிகள் என்ன செய்ய வேண்டும்?

“நிச்சயமாகச் சாத்தியப்படும். ஏனென்றால் அரசியல் அதிகாரத்தின் வழியாகத்தான் சமூகத்தில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவர முடியும். சட்டத்தின் வழியாகத்தான் சமூகத்தில் சமநிலையை ஏற்படுத்த முடியும். அதற்கு அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் அல்லது அதிகாரத்தில் இருப்பவர்கள் முன்வர வேண்டும். சமூகத்தில் ஒரு ஏற்றத்தாழ்வற்ற, சாதிய சமூகம் அற்ற, மத மோதல்கள் அற்ற சிறந்த சமூகத்தை உருவாக்க அறிவார்ந்த சிந்தனைமிக்க அரசியல் தலைவர்கள் முன்வர வேண்டும். அதைவிடுத்து அரசியல் கட்சித் தலைவர்களே சாதிய மோதல்களைத் தூண்டுவது, சாதிக் கட்சி நடத்துவது போன்றவை சமூகத்தில் நல்லிணக்கத்தை உருவாக்காது.”

ஒரு கட்சி சார்ந்த எழுத்தாளராக அடையாளப்படுத்திக் கொள்வது சரியா?

“அது அவரவருடைய விருப்பம். நான் கட்சி சார்ந்த எழுத்தாளன் என்பதைவிட திராவிட இயக்கச் சிந்தனை மரபில் வந்த எழுத்தாளன். மார்க்சிய எழுத்தாளர்கள், பெண்ணிய எழுத்தாளர்கள், விளிம்புநிலை மக்களுக்கான எழுத்தாளர்கள், தலித் எழுத்தாளர்கள் என்றெல்லாம் பலர் அடையாளப்படுத்திக் கொள்வதில்லையா? அப்படித்தான் இதுவும்! அவர்கள்மீது எந்தவிதக் கேள்வியும் எழுப்பாதவர்கள், திராவிட இயக்க எழுத்தாளர்கள் என்றால் மட்டும் ஏன் கேள்விக்கணை தொடுக்க வேண்டும்? என்னை திராவிட இயக்க எழுத்தாளர் என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு இழிவு இல்லை. பெருமையே.”

கலைஞரின் தீவிரப் பற்றாளரான நீங்கள் அவரின் நேரடி அரசியல் வாரிசான ஸ்டாலினின் அரசியல் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?

“ரொம்ப சிறப்பாக இருக்கிறது. கலைஞரால் மட்டும்தான் கட்சியைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியும் என்ற எண்ணத்தை மாற்றியுள்ளார் ஸ்டாலின். கட்சியைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்து, கூட்டணிக் கட்சிகளுடன் இணக்கமாகச் செயல்பட்டு, தான் ஒரு சிறந்த தலைவர் என்பதை ஸ்டாலின் கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே நிரூபித்திருக்கிறார். ஆனால், ஒரு விஷயத்தை அனைவரும் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். கலைஞர் தன் வழியில் செயல்பட்டார். அதேபோல் ஸ்டாலின் தமக்குரிய வழியில் செயல்படுகிறார். கலைஞரிடத்தில் ஸ்டாலினைத் தேடுவதோ, ஸ்டாலினிடத்தில் கலைஞரைத் தேடுவதோ தவறு.”

Comments

S. Devanathan says :

சில கேள்விகள் மட்டுமே ஆனாலும் திறனாய்வு போல் பதில் பெறுவதற்கு ஏற்றவாறு கேள்விகள் கேட்டிருக்கி றீர்கள். வெகு சிறப்பு. நான் முழு நாவல் படிக்கவில்லை. உயர்படிப்பு படித்த பெண்ணுக்கும் ஆட்டோ காரருக்கும் திருமணம் என்று தான் ஆசிரியர் இமையன் கூறுகிறார். இதில் சாதியம் இங்கு வருகிறது என்று அறியேன்.எந்த ஜாதியினரும் உயர் வகுப்பு படித்திருக்கலாம் அல்லவா. அதே போல் சாதி பாகுபாடின்றி எல்லா ஜாதிகளிலும் ஆட்டோ டிரைவர்கள் இருக்கிறார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :