• GLITTERS | பளபள

கோட்டையைத்தான் பிடிக்கப் போறேன்: ஜெயிக்கப் போவது யாரு?!


- ராஜ்மோகன்

தமிழ்நாட்டில் தேர்தல் திருவிழா களைகட்டத் தொடங்கிவிட்டது. வழக்கம் போல் மக்களை பணயம் வைத்து அனைத்து அரசியல் கட்சிகளும் சடுகுடு ஆடத் தொடங்கி விட்டன. தேர்தலுக்கு இன்னும் நான்கு வாரங்கள் இருக்கும் நிலையில் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றன. பிரதான இரு கட்சிகளான திமுக-விலும் அதிமுக-விலும் வலுவான தலைமை இருக்கிறதா என்பது யோசிக்க வைக்கிறது! இந்த இரு கட்சிகள் பற்றி மட்டும் இங்கு அலசுவோம்..

கலைஞருக்கு பிறகு திமுக என்னவாகும் என்ற கேள்விக்கு இடமில்லாமல் திமுகவை கட்டுக்கோப்பாக வழிநடத்துகிறார் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் என்கிற வகையில் அவருக்கு இது வெற்றிதான்! கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணிகளை வலிமையாக ஒருங்கிணைத்து 38 நாடாளுமன்ற இடங்களில் வெற்றிபெற்று பிஜேபி-யைத் திகைக்கவைத்தார். தமிழ்நாடு தவிர பல இடங்களில் பாஜக அசத்தலான வெற்றி பெற்று ஆட்சி அமைத்தாலும் தமிழ்நாட்டில் அக்கட்சிக்கு பெரும் வரவேற்பு இல்லை. மற்ற மாநிலங்களில் வீசிய மோடி அலை தமிழ்நாட்டில் எடுபடவில்லை. தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஒரு வலிமையான தலைவராக தன்னை நிலைப்படுத்திகொண்டார். இந்த வீச்சு தற்போது சட்டசபை தேர்தலில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

அந்த வகையில், தொடர்ந்து பத்தாண்டுகளாக இருக்கும் அதிமுகவை வீழ்த்தி ஆட்சியை பிடிப்பாரா மு.க. ஸ்டாலின் அல்லது தற்போதையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியே மீண்டும் வெல்வாரா என்ற விவாதம் பரபரப்பாகியுள்ளது.

இதைவிட பெரும் எதிர்பார்ப்பு- மத்தியில் ஆளுங்கட்சியான பாஜக, மற்ற மாநில தேர்தல்களில் தன் ஆதரவுக் கட்சியை ஆட்சியில் அமர்த்தி தனக்கான விஷயங்களை சாதித்து வருகிறது. அந்தவகையில் இந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை ஜெயிக்க வைப்பதன் மூலம், தமிழகத்தில் தன் ஆளுமையை வலுப்படுத்த வியூகம் அமைக்குமா என்பது கூர்ந்து கவனிக்கப் படுகிறது. சரி.. இந்த சூழ்நிலையில் அதிமுகவின் நிலைப்பாடு எப்படி இருக்கிறது?

எடப்பாடி. பழனிச்சாமியின் முதல்வர் பதவி அதிர்ஷ்டத்தில் கிடைத்தது என்பதுதான் பொதுவான கருத்து. சசிகலா சிறைக்கு செல்லும் முன்பு ஓபிஎஸ்க்கு மாற்றாக ஒரு கைப்பாவையை உருவாக்க நினைத்து பழனிச்சாமியை முதல்வராக்கி விட்டுச் சென்றார். நடந்ததோ வேறு! தான் முதல்வர் பதவியை ஏற்றதுமே பாஜகவின் பொம்மையாக மாறிய எடப்பாடி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாட்டில் மத்திய அரசு கொண்டுவர நினைத்த எந்த திட்டங்களையெல்லாம் எதிர்த்தாரோ, அவை அனைத்துக்கும் பழனிசாமி ஒப்புதல் அளித்தார்.

அதேசமயம் மக்களின் நெருக்கமான முதலமைச்சராக தன்னை உருவாக்கிக் கொண்டார். ’’நான் ஒரு சாதாரண விவசாயி. முதலமைச்சராகியிருக்கிறேன்” என்று சொன்னதன் மூலம், அதிமுகவில் மட்டுமே ஜனநாயகம் இருக்கிறது என்றரீதியிலான சக்தி வாய்ந்த அஸ்திரத்தை வீசினார். இது உண்மையில் திமுகவிற்கு சின்ன நெருடல்தான்.

திமுகவில் வாரிசு அரசியல் கொடிகட்டிப் பறக்கிறது. அதற்கு மாறாக, அதிமுகவில் ஒரு சாதாரண தொண்டராக இருந்தவர் இப்போது முதல்வர்! மேலும் நீட் தேர்வில் அரசு மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு, குடிமராத்து, கொரோனா காலத்தில் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள், கொரோனா பரவலை கட்டுபடுத்தியது உள்ளிட்ட விஷயங்களை செயல்படுத்தி மக்களிடம் நல்ல பெயர் எடுத்ததுடன் எதிர்கட்சிகளையும் ஆனால், தேர்தல் அசரடித்தார்.

ஆனால் தேர்தல் வாக்குறுதியாக சகட்டுமேனிக்கு பல்வேறு அறிவிப்புகளை கொடுப்பது மக்களிடையே சந்தேகத்தை எழுப்பியுள்ளது. ஏற்கனவே மாநிலத்தின் கடன் சுமை ஐந்தரை லட்சம் கோடியை தாண்டிவிட்டது. அப்படியிருக்க, மேலும் மேலும் அவர் அறிவிக்கும் திட்டங்களை செயல்படுத்த பணத்துக்கு எங்கே போவார் என்று செய்தியாளர்கள் கேட்டபோது “கடன் வாங்கிதான்!” என்கிறார் மிகவும் கூலாக!

இது இப்படியிருக்க, ’’என்னிடம் அடுத்த பத்தாண்டுகளை தாருங்கள். தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் மாற்றிக்காட்டுகிறேன்’’ என்று ஏழு உறுதிமொழிகளை தந்துள்ளார் மு.க.ஸ்டாலின்

கடந்த 7 ஆம் தேதி திருச்சிக்கு அருகே விரகனூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டத்தை மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த திட்டத்தில் பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி- சுகாதாரம், சமூக நீதி, நகர்ப்புற வளர்ச்சி, ஊரக கட்டமைப்பு ஆகிய துறைகளின் வளர்ச்சித் திட்டங்கள் முக்கியத்துவம் பெற்றது.

இத்துடன் அவர் அறிவித்த ஒரு திட்டம் அனைவராலும் பரப்பரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது .அதாவது குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்றார் ஸ்டாலின். இந்த வாக்குறுதி தான் சந்தேக கண்ணை ஏற்படுத்தியுள்ளது. அதற்குள், முதலமைச்சர் பழனிச்சாமி ஏட்டிக்கு போட்டியாக அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் ரூ.1500 உதவித்தொகை மற்றும் நான்கு சிலிண்டர்களுக்கான கட்டணத்தை அரசே வழங்கும் என்றார்.

இது அதைவிட அதிர்ச்சி. இருவரின் மனப்பாங்கும் இலவசங்கள் தருவதாக வாக்குறுதிகளை அள்ளிவீசி கோட்டை பிடிப்பதுதான் என்பது வெட்டவெளிச்சமாகிறது. ஒரு தேசத்தின் முன்னேற்றம் என்பது இலவசங்களால் ஆனது அல்ல. சிறந்த பொருளாதார கட்டமைப்பு, சிறந்த நிர்வாகம். போதுமான உட்கட்டமைப்பு மற்றும் உள்நாட்டு உற்பத்தி இவைதான் ஒரு நாட்டை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்லும்.

ஆனால், இவர்களின் திட்டங்களில் கவர்ச்சி இருக்கிறதே தவிர வளர்ச்சி இல்லை. மேலும் மேலும் பொருளாதாரத்தை அதளபாதாளத்திற்கு கொண்டு செல்வது மாதிரியான திட்டமாகவே இருக்கிறது. இதையெல்லாம் அலசிப் பார்த்து தீர்க்கமாக முடிவெடுத்து ஓட்டு போட வேண்டியது சராசரி பொதுமக்களின் கடமை.
Comments

கேஆர்எஸ் சம்பத் says :

வரும் காலத்தில் இப்படியும் வாக்குறுதி அளித்தால் எப்படி இருக்கும்? 1. கல்யாணம் ஆகாமல் தவிப்பவர்களுக்கு திருமணம் செய்விக்கப்படும் . 2. கோவிலில் அர்ச்சனை செய்யப்போகிறீர்களா? அர்ச்சனை டிக்கெட்டுக்கு அரசே கட்டணம் செலுத்தும். 3.திமுக: உதயநிதி நடித்த படங்கள் யாவும் இலவசமாக காண்பிக்கப்படும்: அதிமுக: எம்ஜியார் ஜெயலலிதா நடித்த படங்கள் யாவும் இலவசமாக திரையிடப்படும். 4. அதிகாலையில் ஒவ்வொரு வீட்டிற்கும் பால்காரர் காபியோ டீ யோ ஹார்லிக்ஸ் போன்றவைகளை கொண்டு வந்து இலவசமாக கொடுப்பார். 5.அம்மா உணவகத்தில் ஒருவேளை டிபன் இலவசம். அம்பானி போன்றவர்களும் வந்து சாப்பிடலாம்.. .........................................ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது. கூ கூ கூ

RAM SRIDHAR says :

தமிழகத்தில் இரண்டு திராவிட கட்சிகளே மாறி மாறி ஆட்சி செய்கின்றனவே. இதற்கு மாற்றே இல்லையா? என்று கேட்போரின் எண்ணிக்கை அதிகாத்துக்கொண்டே சென்றாலும், இதுவரை மூன்றாவது அணி என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது.  திமுக இரண்டு முறை ஆட்சி நம் கை நழுவிப் போய்விட்டது என்று இந்த முறை அவர்களிடம் இருக்கும் அசுர பலத்துடன் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று மல்லுகட்டுகிறார்கள்.  இவர்கள் ஆட்சி பரம்பரை ஆட்சி என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. கலைஞரை ஒப்பிடும்போது ஸ்டாலினுக்கு எந்த விதமான திறமையும் இல்லை. கையில் துண்டுசீட்டு இருந்தால் கூட அதைப் பார்த்துப் படிக்கத் தடுமாறி உளறுகிறார். இவர் எப்படி ஒரு திறமையான முதல்வராக முடியும்??  இப்போதே அவருடைய மகன், அரசியல் கத்துக்குட்டி உதயநிதிக்குத் தேவையில்லாத வானளாவிய அதிகாரம் இருப்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். கட்சியின் பெரிய புள்ளிகள் ஆ. ராசா போன்றவர்கள்  மேடையில் இதைவிட அசிங்கமாக பேசமுடியாது  எதிர்க்கட்சித் தலைவர் மீது கோபம் இருந்தால் அவருடைய தவறுகளைச் சுட்டிக்காட்டுவதை விடுத்து, ஒரு முதல்வர் என்றும் பாராமல், அவருடைய தாயை ஏளனப்படுத்தி பொதுமேடையில் பேசுகிறார். இதைக் கண்டிக்கக் கூட கட்சித் தலைமைக்கு வக்கு இல்லை.  இந்தத் திமிர் பிடித்த கூட்டம், தமிழகத்தில் உள்ள இந்துக்களை கொத்தடிமைகள் போல நடத்த முற்படுவது மட்டுமில்லாமல், கோயில் நிலங்களை அதை உபயோகிப்போருக்கே சொந்தமாக்குவோம் என்ற வாக்குறுதியுடன் களம் இறங்கியுள்ளனர். இதை கோயில் நிலம் என்பது இந்துக்களின் கோயில்களை மட்டுமே குறிக்கும். மற்ற மதத்தினர் வழிபாட்டுத் தலங்களின் நிலங்களை அல்ல. யார் வீடு சொத்து அது?  பெண்களின் பாதுகாப்பு மீண்டும் கேள்விக்குறியாகிறது.  இதைப் போன்று பல்வேறு தீவிரமான காரணங்களால், அதிமுக / பாஜக கூட்டணி ஒன்றும் பெரிதாகச் சாதிக்கவில்லை என்றாலும், திமுகவுடன் ஒப்பிடும்போது அவர்களே மேல் என்ற நிலையே ஏற்படுகிறது.  எனவே என் வாக்கு அதிமுக / பாஜக கூட்டணிக்குத்தான். 

RC Sekar says :

அதிமுக பாஜக கூட்டணி தான் வெல்ல வேண்டும். மத்திய அரசுடன் ஒரு இணக்கமான உறவு இருந்தால், தமிழகம் நல்ல வளர்ச்சியை காணலாம்.

K R Balaji says :

BJP with their alliance

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :