தாய்மொழி வழி நீதி!


ராஜி ரகுநாதன்உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா மனுதாரரான ஒரு பெண்ணுக்காக தெலுங்கிலேயே விசாரணை செய்தார். சுப்ரீம் கோர்ட்டில் அது ஒரு அரிதான காட்சியாக அமைந்தது.ஆங்கில மொழியில் வாதிப்பதற்கு இயலாமல், சிக்கலைச் சந்தித்த ஒரு பெண்ணிற்காக இந்த அரிதான முடிவெடுத்தார் தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் என்.வி.ரமணா. தம் தாய்மொழியான தெலுங்கிலேயே அவர்களின் வாதங்களைச் கூறச்சொல்லிக் கேட்டார் நீதிபதி.

சுப்ரீம் கோர்ட்டில், 28 ஜூலை, 2021 புதன்கிழமை இந்த அரிதான சம்பவம் நடந்தேறியது. சின்னச் சின்ன தவறுகள், மனஸ்தாபங்களின் காரணமாக இருபது வருடங்களாகப் பிரிந்திருந்த கணவன், மனைவியை ஒன்று சேர்த்தார் நீதிபதி.

வழக்கு விவாதங்களுக்கு தேசிய மொழியான ஹிந்தி அல்லது ஆங்கிலத்தைப் பயன்படுத்தும் சுப்ரீம் கோர்ட்டில், ஒரு மனுதார ருக்கேற்ப ஜஸ்டிஸ் என்.வி. ரமணாவின் ஆலோசனை யின்பேரில் தெலுங்கில் பேசுவதற்கு வாய்ப்பளித்தார்கள். அதோடு, நேரடியாக சுப்ரீம் கோர்ட்டிலேயே கணவன், மனைவி பிரச்னைக்கு தீர்வு கண்டார்கள்.

ஆந்திரப்பிரதேசம், குண்டூரு மாவட்டம், குரஜாலதுணை தாசில்தாரராகப் பணிபுரிந்து வரும் ஸ்ரீனிவாச சர்மா, சாந்தி இருவருக்கும் 1998ல் திருமணம் நடந்தது. இவர் களுக்கு 1999ல் ஒரு மகன் பிறந் தான். ஆனால், அதன்பின் ஒருவருக் கொருவர் வார்த்தையால் சாடிக்கொண்டு, பேச்சு முற்றி 2001லிருந்து பிரிந்து வாழ்ந்தார்கள்.

அதோடு, கணவர் ஸ்ரீநிவாச சர்மா தன்னை தாக்கினார் என்று அப்போது காவல் நிலையத்தில் புகார் அளித்தார் சாந்தி. அதனால், ஸ்ரீனிவாச சர்மா மீது செக்ஷன் 498 ஏ பிரிவின்கீழ் வழக்குப் பதிவாகி, குண்டூர் ஆறாவது அடிஷனல் மாஜிஸ்ட்ரேட் கோர்ட், ஸ்ரீனிவாச சர்மாவுக்கு ஓராண்டு சிறை தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது.

அதன்பின், ஸ்ரீனிவாச சர்மா ஹை கோர்ட்டை நாடினார். 2010 அக்டோபர் 6ம் தேதி தண்டனையைக் குறைத்து ஹைகோர்ட் உத்தரவிட்டது. ஆயினும், ஹைகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் 2011ல் அப்பீல் செய்தார் சாந்தி.

மனைவியைப் பிரிந்து வாழ்ந்தாலும், 2003லிருந்து கடந்த பதினெட்டு ஆண்டுகளாக மனைவிக்கும் மகனுக்கும் பராமரிப்புத் தொகையாக பொருளாதார ஆதரவு வழங்கி வருகிறார் ஸ்ரீனிவாச சர்மா. 2012ல் உச்ச நீதி மன்றம் சமரசம் செய்து வைப்பதற்கு முன்வந்தது. அது பலனளிக்க வில்லை.

அண்மையில் ஜஸ்டிஸ் ரமணா வழக்கறிஞர்கள் மூலம் மீண்டும் ஒருமுறை சமரசம் செய்ய முயற்சித்தார். ஆனால் வழக்கறிஞர்கள், மனுதாரரான மனைவி தனது கணவரை மீண்டும் சிறையில் வைக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார் என்று தெரிவித்தனர்.

ஜஸ்டிஸ் ஏ.எஸ்.போபன்னா, ஜஸ்டிஸ் சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அந்த பெஞ்ச் ஒரு கருத்து தெரிவித்தது. ‘இந்த வழக்கில் கணவரை சிறையில் வைத்தால், அவருக்கு வேலை போய்விடும். மனைவி, மகனுக்குப் பொருளாதார ஆதரவு கொடுக்க இயலாமல் போகும்’என்று நீதிபதிகள் எடுத்துக் கூறினர். வழக்கறிஞர்கள் அந்தத் தம்பதிகளை வீடியோ கான்பெரென்சிங் மூலம் ஆஜராகும்படி உத்தரவிட்டனர். ஆன்லைனில் வந்த மனைவி, தனக்கு ஆங்கிலம் புரியாது என்று தெரிவித்தார். உடனே, தயங்காமல் ஜஸ்டிஸ் ரமணா தெலுங்கில் உரையாட அனுமதித்தார். அந்தப் பெண்மணியிடம் சூழ்நிலையை எடுத்துக்கூறினார். கணவரை சிறையில் அடைத்தால் ஏற்படும் விளைவு களை சந்தேகத்திற்கிடமில்லாமல் விவரித்தார். அந்தப் பெண்மணி கூறிய வாதத்தையும் செவிமடுத்து, அவருக்கு கௌன்சிலிங் செய்ய ஆலோசனை வழங்கினார்.

அதோடு, பெஞ்சில் இருந்த பிற நீதிபதிகளுக்கு ஜஸ்டிஸ் ரமணா ஆங்கிலத்தில் அதனை விவரித்தார். இவ்வாறு அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து விவரித்தது இந்த வழக்கில் ஹைலைட்டாக விளங்கியது. பின்னர் அந்தத் தம்பதிகளிடம், ‘அவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ விரும்புகிறார்களா?’என்று கேட்டார். ‘மனைவியை அன்பாகப் பார்த்துக் கொண்டால்தான் சேர்த்து வைக்க முடியும்’என்று கணவரிடம் பெஞ்ச் தெரிவித்தது. கணவர் அதற்கு சம்மதித்தார். மனைவியும் கணவரோடு சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார்.

இந்த வழக்கில் கணவருக்காக ஆஜரான வழக்கறிஞர் டி.ராமகிருஷ்ணா ரெட்டி, “தலைமை நீதி பதி ஜஸ்டிஸ் என்.வி.ரமணா இந்த தம்பதிகள் தம் மனக்கசப்பை மறந்து ஒன்றாக வாழும்படிச் செய்தார். ஒரு குடும்பவழக்கு மனிதாபிமான முறையில் தீர்க்கப்பட்டது மகிழ்ச்சியாக இருக்கிறது”என்று கூறினார்.உண்மையில் சுப்ரீம் கோர்ட் அளவில்வாத, பிரதிவாதிகளை கோர்ட்டுக்கு அழைக்க மாட்டார்கள். அவர்களின் தரப்பில் வழக்கறிஞர் களே வாதாடுவார்கள். ஆனால், இங்குதான் ஜஸ்டிஸ் என்.வி. ரமணா தனது சிறப்பை வெளிப்படுத்தினார்.

ஜஸ்டிஸ் என்.வி.ரமணாவுக்கு தாய்மொழி மீது பற்று அதிகம். ‘மாணவர்களுக்கு ஆரம்பக்கல்வி தாய்மொழியிலேயே இருக்க வேண்டும்’என்பதும், ‘நீதிமன்றத்தில் தாய்மொழியை ஊக்கப்படுத்த வேண்டும்’என்பதும் ஜஸ்டிஸ் ரமணாவின் கருத்து. சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றதிலிருந்து தனது தனித்தன்மையை வெளிப்படுத்தி வரும் நீதிபதி ரமணாவுக்கு நாமும் நன்றி தெரிவிப்போம்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :