ஒரு வார்த்தை!


அனுஷா நடராஜன்என்னுடைய உறவினர் லதாவின் ஒரே மகளான திவ்யா, ப்ளஸ்டூ முடித்ததும், ‘சட்டம்தான் படிப்பேன்!’என்று மிகவும் தீவிரம் காட்டியுள்ளாள். வீட்டிலோ, உறவிலோ வழிகாட்ட யாரும் வழக்கறிஞர்கள் கிடையாது என்றாலும், அந்த இளம் பெண்ணுக்கு கறுப்பு கவுன் மீது என்னவோ அப்படியொரு ஆசை!

மகளின் பிடிவாதம் முற்றவே, லதா தனது கணவருடன் சென்னைக்கு ஜாபையே மாற்றிக்கொண்டு வந்தார். நான்கு வருடம் சட்டக் கல்லூரியில் படிப்பு முடிந்தது. அவளை, சீனியர் அட்வகேட் ஒருவரிடம் ஜூனியராகச் சேர்த்தும் விட்டனர். இரண்டு வருடம் ஓடியது.

திடீரென்று ஒரு நாள், ‘எனக்கு இந்த கோர்ட்டு, கேஸ், கைதி, விசாரணை, ஃபைல் கட்டு சூழ்நிலையே பிடிக்கலை. ரொம்ப டென்ஷனா இருக்கு; கேரியரை சேஞ்ச் பண்ணப்போறேன். டெல்லி போய் படிக்கப்போறேன்’ன்னு பரோட்டா சூரி மாதிரி மொதல்ல இருந்து ஆரம்பிச்சுருக்கா. மிடில் கிளாஸ் குடும்பம்! பதறிப்போகாமல் என்ன செய்யும்?

‘இப்பவே நிறைய செலவாயிடுச்சு!’ன்னு பெத்தவங்க கடுப்பாகவே, திவ்யா மனக் குழப்பத்துக்கு ஆளாகி, டிப்ரஷனுக்குப் போயிருக்கிறாள். இப்போ அவளுக்கு மனநல சிகிச்சை தரப்படுகிறதாம்!

* கல்லூரிகள் திறந்தாகிவிட்டதே! `career choosing`என்ற விஷயத்தில் பெண்களும் பெற்றோர்களும் கவனமாக இருக்கவேண்டிய காலம் இது.

* முதலில் நாம் ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்டு விட வேண்டும். `passion`என்பது வேறு... `hobby`என்பது வேறு! இசையைக் கேட்பதை ஹாபியாகக் கொண்டவர் எல்லாம், இசையமைப்பாளராக ஆகிவிட முடியாது. இது வேற லெவல் திறமை!

* நடுத்தர வர்க்கத்தினரின் கேரியர் கனவு, நனவாக நிறைய மெனக்கெடல் தேவை.

* ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே `career counseling sessions`களில் ஆர்வம் காட்டினால், குழந்தைகளின் ஆர்வம் எந்தத் துறையில் என்று தெளிவாகக் கூடும்.

* சைக்கோ மெட்ரிக் ஐக்யூ டெஸ்ட், ஆப்டிட்யூட் அனாலிஸிஸ், காம்படிஷென்ஸ் என ஆங்காங்கே நடத்தப் படுகின்றன. அதில் நம் குழந்தைகள் கலந்து கொண்டால், அவர்கள் எதில் பொருந்துவார்கள் என தீர்மானிக்கலாம்.

* அப்படியே தெரிந்துகொண்டாலும், நல்ல ட்யூட்டர், கோச், நம்பிக்கையான நிறுவனம் எது என்றெல்லாம் கண்டு பிடிப்பது அவ்வளவு சுலபமல்ல.

*‘முன் ஏர்’இருந்தால், இளைஞர்களுக்கு எந்தத் துறையிலும் அனுமதி சுலபம்! ஆனால், தனித்த திறமையும், அதீத சுய ஊக்கியும் இருந்தால் மட்டுமே எதிலும் நிலைத்துப் பிரகாசிக்க முடியும்.

* சில குழந்தைகள் இசை, விளையாட்டு, சினிமா என பயங்கர ஆர்வம் காட்டிவிட்டு, பின்னர் அங்குள்ள ‘பாலிடிக்ஸ்’காரணமாக பேக் அடிப்பதும் நடுத்தரப் பெற்றோருக்கு அதிர்ச்சி தரும் விஷயம்தான். எனவே, ‘கேரியர் சூஸிங்’விஷயத்தில் யாரையாவது நாம் குறை சொல்வதாக இருந்தால், நம்முடைய அறியாமை, போதாமை மற்றும் சூழ்நிலைகளைத்தான் சொல்ல வேண்டும்.

ஆனால், எதுவும் எப்போதும் தொலைந்துவிடவில்லை பெண்களே! கனவுகளைத் துரத்த நமக்கு வேண்டியதெல்லாம் போதிய அறிவும், சிறப்புப் பயிற்சியும், விடா முயற்சியும் மட்டுமே! ஆல் தி பெஸ்ட் டியர்ஸ்!

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :