பாலைவனத்தில் பணம் காய்க்கும் மரங்கள்


சோமலெ சோமசுந்தரம்இயற்கை வளம் நிறைந்த அமெரிக்காவில் ஆண்டுதோறும் 420 லட்சம் சுற்றுலா பயணிகள் நாடிச் செல்வதோ பரந்த பாலை வனங்கள் நிறைந்த, அமெரிக்காவின் மிகவும் வறண்ட பகுதியான நெவேடா மாநிலம்.

‘பணம் காய்க்கும் மரங்கள்’ போன்று காட்சியளிக்கும் சூதாட்டம் மற்றும் கேளிக்கை விடுதிகள் (Casinos) இந்த மாநிலத்தின் லாஸ் வேகஸ் நகரை ஒரு சோலைவனமாக்கி விட்டன.

இந்தியாவில் கோவா, டாமன், சிக்கிம் பகுதிகளில் மட்டும் சட்டப்பூர்வமான சூதாட்டம் இயங்குகிறது. அவை அனைத்திலும் மொத்தமாக 15 சூதாட்ட விடுதிகள் இருக் கின்றன. ‘உலகின் பொழுதுபோக்குத் தலை நகரம்’ என அழைக்கப்படும் லாஸ் வேகஸ் நகரில் 170 கேளிக்கை விடுதிகள் உள்ளன. அந்த விடுதிகளில் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் தங்கும் அறைகள் உள்ளன. உலகில் வேறு எந்த நகரிலும் அத்தனை விடுதி அறைகள் கிடையாது. உலகின் மிகப் பெரிய 15 விடுதி களில் பத்து விடுதிகள் இந்த நகரில் உள்ளன.

இங்குள்ள தங்கும் விடுதிகள் பலவற்றில் நான்காம் மற்றும் பதின்மூன்றாம் தளங் களையோ, 4, 13 எண் கொண்ட அறை களையோ பார்க்க முடியாது. ஏசுநாதர் சிலுவையில் அறையப்படும்முன் பதின்மூன்று பெயர்களுடன் உணவு உண்டதால் அமெரிக்கா உட்பட மேற்பத்திய நாடுகள் பலவற்றில், எண் 13 துன்பமானது எனக் கருதப்படுகிறது.

இந்த விடுதிகள் அனைத்தும் 4.2 மைல் தொலைவில் ஒரே வீதியில் உள்ளன. அந்த வீதியிலும், அங்குள்ள விடுதிகளிலும் உள்ள நியான் விளக்குகளை வரிசைப்படுத்தி அடுக்கி னால் அதன் நீளம் 75,000 மைல்கள். அத்தனை விளக்குகளைத் தூங்கா நகரமாக, பகல் இரவு பாராமல் தொடர்கிறது சூதாட்டம்.

இரண்டு லட்சம் சூதாட்ட இயந்திரங்கள் உள்ள இந்நகரில் சூதாட்ட வகைகளுக்குப் பஞ்சமே இல்லை. ஆனால் லாட்டரி மட்டும் கிடையாது. லாஸ் வேகசில் சராசரியாக ஆளுக்கு 540 டாலர்கள் சூதாட்டத்தில் பணமிழக்கும், சுற்றுலா பயணிகள் கையில் பணம் மிஞ்சினால்தானே லாட்டரிச் சீட்டு வாங்க முடியும்?

லாஸ் வேகஸுக்கு வருகின்ற எல்லோரும் பணத்தை இழந்து சென்றாலும் பெரும்பாலும் மகிழ்வோடு வீடு செல்கின்றனர். இங்கு வந்த தால் செல்வந்தரான ஒரு சிலரும் உள்ளனர். நூறு டாலர் பந்தயம் கட்டி 390 லட்சம் டாலர்கள் எடுத்துச் சென்றுள்ளார் இருபத்து ஐந்து வயதான மென்பொருள் பொறியாளர் ஒருவர். அதுதான் அதிர்ஷ்டம்.

தன் கையில் கடைசியாக இருந்த 5,000 டாலர்களை லாஸ் வேகசில் சூதாடி 27,000 டாலர்கள் வென்றதால், உலகப் புகழ் பெற்ற `FedEX` போக்குவரத்து விமான நிறுவனர் கிரடெரிக் ஸ்மித் அந்த நிறுவனத்தை மூடும் நிலையிலிருந்து காப்பாற்றினாராம்.

ஐந்து நிமிடத்திற்கு ஒரு திருமணம்

சூதாட்டம் போன்றே திருமணத்திற்கும் புகழ்பெற்ற நகரம் லாஸ் வேகஸ். ஐம்பது டாலரில் பதிவுத் திருமணம் முதல், மகிழ்வுந்தில் இருந்தே (Drive-Through) திருமணம்வரை பல வகைகளில் இங்கு எப்போதுமே கல்யாணக் காலம்தான்.

அடிக்கடி திருமணம் செய்துகொள்வோர், அவசரமாகத் திருமணம் செய்துகொள்ள விரும்புவோர் போன்றவர்களின் கனவுகளை உடனே நனவாக்குகிற லாஸ் வேகஸ் நகரில் வருடத்திற்கு ஒரு லட்சத்துப் பதினான்காயிரம் திருமணங்கள் நடைபெறுகின்றன. அதைவிட உலகில் அதிகத் திருமணங்கள் நடைபெறும் நகரம் துருக்கி நாட்டில் உள்ள இஸ்தான்புல்.

நீரின்றி வாழ்வு

இந்தியாவின் தார் பாலைவனம் போன்றே அமெரிக்காவின் பெரிய மொஹாவி (Mojae) பாலைவனத்தின் பெரும் பகுதி நெவேடா மற்றும் கலிபோர்னியா மாநிலங்களில் உள்ளன. ராஜஸ்தான் மாநிலம் போன்று நெவேடா மாநிலத்திலும் 250 மில்லி மீட்டருக்குக் குறைவான மழை பெய்கிறது. இப்பகுதியில் வாழும் கங்காரு போன்று தாவிச்செல்லும் ‘கங்காரு எலிகள்’ வாழ் நாள் முழுவதும் ஒரு சொட்டு நீர்கூடக் குடிக்காமல் வாழக் கூடியவை.

ரகசியப் பகுதி 51

நெவேடா மாநிலத்தின் 85 சதவிகிதம் பகுதி அமெரிக்க மத்திய அரசுக்குச் சொந்தமானது. பெரும் பாலும் பாலைவனம் என்பதால் இந்த நிலம் யாருக்குச் சொந்தம் என்ற சண்டையில்லை. அமெரிக்க விமானப் படை பயன்படுத்துகிற ஒரு பகுதிக்குப் பெயர் ‘ரகசியப் பகுதி 51’. அந்தப் பகுதியில் 575 சதுர மைல் வான்வெளி ‘கட்டுப்படுத்தப்பட்ட’ (Restricted Airspace) பகுதியாகும்.

விமானப் படை விமானங்களைத் தவிர மற்ற விமானங்களுக்கு அனுமதி கிடையாது. பல மர்மங்களுக்கும் சதித் திட்டங்களுக்கும் உறைவிடம் என்று பேசப்படும் இப்பகுதிக்கு யாரும் செல்லமுடியாது.

அப்படி அங்கு என்னதான் நடக்கிறது என்ற உங்களின் ஆதங்கம் புரிகிறது. அதற்கான விடை தெரிந்துவிட்டால் பிறகு அதை எப்படி ‘ரகசியப் பகுதி’ என அழைக்க முடியும்?

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :