பாரிஸுக்கு சென்னையிலிருந்து வந்த செய்தி

திரைக்கடலில் எழுந்த நினைவலைகள் & 7
எஸ்.சந்திரமௌலிஎன் அன்னை இறைவனடி சேர்ந்து விட் டார்! பாரிஸில் இருந்தபோது எனக்கு அந்தச் செய்தி கிடைத்தது. நான் அதிர்ச்சியில் மௌனமானேன்.

என் தந்தை ஆயிரம் பிறை கண்டதைக் கொண்டாடும் விதமாக என் தாய்க்கும் தந்தைக்கும் மதுராந்தகத்தை அடுத்த எங்கள் சொந்த ஊரில் சிறப்பாக விழா எடுத்தோம். சிவாஜி முதலான பல திரையுலகப் பிரமுகர்கள் கௌரவித்தார்கள். நான் அயல்நாடுகள் புறப்படுமுன்னர் என் தாய்க்கு லேசாக உடம்பு சரியில்லை. ‘எல்லாம் சரியாகப் போய்விடும்; கவலைப்படாதே! டாக்டர் கவனிச்சுக்கிறதாகச் சொல்லியிருக்கார்!’ என்று கூறி அவரிடமும் தந்தையிடமும் விடைபெற்றேன். அப்போது என் தாய், ‘என்னைப் பற்றி என்ன கவலை? உன் உடம்பைப் பார்த்துக்க; ஆபத்தான நோய் வந்திருக்கு. ஓய்வா இருக்க வேண்டிய சமயத்துல உலகைச் சுத்தப் போறியே’ என்று கேட்டார். நான் நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியுமாகக் கிளம்பினேன்.

இப்போது அவர் காலமாகிவிட நான் நலமாய் இருக்கிறேன்! ‘இது தெய்வ சித்தமா? அல்லது ஒருவேளை என் தாய் என்னைக் காக்கத் தன் உயிரைத் தியாகம் செய்வதாகப் பிரார்த்தித்துக் கொண்டாரா? அவர் வேண்டு தல் நிறைவேறியதா?’தாய்ப்பாசம் என்னை இந்தியாவுக்கு இழுத்தது. கடமை என்னை ‘ஷூட்டிங்கை கவனி’ என்று கட்டளையிட்டது. பாரிஸில் படப்பிடிப்பு முடிந்து லண்டன் செல்ல வேண்டும். அங்கே மூன்று நாள் ஷூட்டிங் பாக்கி. பிறகு சென்னை திரும்ப வேண்டியதுதான். இந்த நிலையில் என்ன செய்ய?

‘கடைசி காலத்தில் என் தாயின் அன்பு முகத்தைப் பார்க்கக்கூடக் கொடுத்து வைக்க வில்லையே!’ என்று சோகத்தைச் சுமந்து கொண்டிருந்த எனக்கு, சிவாஜியும் மற்றவர்களும் ஆறுதல் கூறியதுடன், யோசனையும் சொன்னார்கள். ‘என்னென்ன காட்சிகள் எப்படி எப்படி எடுக்க வேண்டும் என்று விவரமாய்க் கூறிவிடுங்கள்; நாங்கள் ஷூட்டிங்கை முடித்துக்கொண்டு வந்து சேரு கிறோம். நீங்கள் முன்னால் புறப்பட்டுப் போங்கம்’ என்றார்கள். சிவாஜியும் இந்தக் கருத்தை ஆமோதித்தார். நான் யோசித்தேன்.

மோதிரக் கையால் ஒரு குட்டு!பாரிஸில் ஷூட்டிங் முடிந்து உடனே புறப்பட்டுத் தாய் நாடு திரும்பினாலும் இறந்து போன என் தாயின் முகதரிசனம் கூடக் கிடைக்காது. ஆகவே, ஒருவழியாக லண்டன் படப்பிடிப்பையும் முடித்துக்கொண்டு கிளம்பிவிடலாம் என்று தீர்மானித்தேன். அதன்படியே வீட்டுக்குச் செய்தி அனுப்பிவிட்டு, துயரத்தை அடக்கிக் கொண்டு படப்பிடிப்பில் ஈடுபட்டேன்.

இப்படிப் பலவிதமான பிரச்னைகளைச் சமாளித்துக்கொண்டு நாங்கள் தயாரித்த படம் ‘சிவந்த மண்’. மாபெரும் அளவில் செலவு செய்து, பிரம்மாண்ட செட்டுகள், வெளிநாட் டுப் படப்பிடிப்பு, டாப் ஹீரோக்கள் என்று திட்டமிட்டு இந்தி, தமிழ் இரண்டிலும் எடுக்கப்பட்ட படம் எந்த அளவுக்கு வெற்றி பெற்றது? தமிழில் ‘ஓகோ’ என்று ஓடியது. ஆனால் இந்தியில் நாங்கள் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை.

கணக்குப் பார்த்தபோது மொத்தத்தில் சித்ராலயாவுக்கு நஷ்டம்தான். கண்ணை மூடிக்கொண்டு இஷ்டப்பட்டபடி செலவு செய்தது எவ்வளவு தவறு என்று எனக்குப் புரிந்தது. செலவில் சிக்கனம் காட்டியிருந்தால் லாபமில் லாவிட்டாலும் நஷ்டத்தை யாவது தவிர்த்திருக்கலாம். ஒட்டுமொத்தமாக நஷ்டம் என்றாலும்கூட ‘சிவந்த மண்’ எனக்கு ரொம்ப திருப்தி அளித்த படம்.

சிவாஜியுடன் இணைந்து நான் பணியாற்றிய அந்தப் படம் வெற்றி பெற்றது எனக்கு ரொம்ப ஆறுதல்.நூறாவது நாள் விழாவுக்குத் தலைமை தாங்க கலைஞர் கருணாநிதியைத்தான் அழைத்தேன். அன்று அண்ணா அமைச்சரவையில் அவர் அமைச்சர். விழாவில் நான் முதலில் பேசியபோது, ‘ ‘சிவந்த மண்’ படத்துக்கு முதலில் கலைஞரைத்தான் வசனம் எழுதும்படி கேட்டேன்; ஆனால் அதற்குரிய சூழ்நிலை அமையாது போய்விட்டது’ என்று சொன்னேன்.

இதன் பின்னணி இதுதான்; சிவந்த மண்படத்தை ஆரம்பிக்கும் முன் கலைஞரை வசனம் எழுதுமாறு கேட்டுக் கொண்டேன். அதற்கு அவர், ‘எனக்கும் விருப்பம்தான்; ஆனால், அமைச்சராக இருக்கும் ஒருவர் சினிமாவுக்கு வசனம் எழுத லாமா; அரசு விதிமுறைகளில் இடம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அதைத் தெரிந்துகொண்டு சொல்கிறேன்’ என்றார். அத்துடன் அந்த விஷயத்தை நான் விட்டுவிட்டேன்.

ஆனால், கலைஞர் விடவில்லை; தொடர்ந்து ஆராய்ந்திருக்கிறார் என்பது எனக்கு அந்த விழாவில் அவர் வைத்த குட்டு உணர்த்தியது. ‘ஸ்ரீதர் என்னை வசனமெழுதும்படி கேட்டபோது, ‘அரசாங்க விதிமுறைகள் இடமளித்தால் எழுதுகிறேன்’ என்றுதான் குறிப்பிட் டேன். அப்படி ஆராய்ந்து பார்த்தபோது தடை ஏதும் இல்லை என்பதாகத் தெரியவந்தது. ஆகவே, நான் எழுதத் தயாராகத்தான் இருந்தேன். ஆனால் ஸ்ரீதர்தான் என்னை அதன் பிறகு வந்து கேட்கவில்லை! ‘விதிமுறைகளைப் பார்த்துவிட்டீர்களா? எழுதுகிறீர்களா?’ என்று விசாரித்திருந்தால் நிச்சயம் மகிழ்ச்சியோடு ஒப்புக் கொண்டிருந்திருப்பேன்!’ என்று கூறினார் கலைஞர்.

மோதிரக் கையால் வைக்கப்பட்ட இந்தக் குட்டை என்னால் மறக்கவே முடியாது. சரியான நோஸ் கட்! ‘அமைச்சராய் உள்ளவருக்கு இடைவிடாத அரசுப் பணிகளிடையே நேரம் இருக்குமோ இராதே; அதனால் ஷூட்டிங் ஷெட்யூல் தாமதப்படுமோ என்னவோ’ என்றெல்லாம் நான் பயந்தது தான் அவரை மறுபடியும் அணுகாததற்குக் காரணம். ஆனால் இப்படி நான் தயங்காமலிருந்திருந்தால், கலைஞர் வசனமும் எழுதியிருந்தால், ‘சிவந்த மண்’ இன்னும் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கும் என்றும், இந்திப் படம் சரியாக ஓடாததால் ஏற்பட்ட நஷ்டம் கூட ஈடுகட்டப்பட்டு, ஒட்டுமொத்த லாபமாக மாறியிருக்கும் என்றும்கூட இப்போது தோன்றுகிறது.

இந்தியில் ‘சிவந்த மண்’ சரியாக ஓடாததால் ஏற்பட்ட நஷ்டத்தை சித்ராலயா நிறுவனத்துக்கு எப்படி ஈடுகட்டுவது என்பதே இப்போது எங்கள் முன் பெரிய பிரச்னையாக உருவெடுத்து நின்றது. ஒரு படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தைத் தீர்க்க வழி, இன்னொரு படம் எடுப்பதுதானே! அதைத்தான் நாங்களும் செய்தோம். அதில் வெற்றியும் பெற்றோம்.

முற்றும்.


Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :