வங்கத்தில் உருவாகியிருக்கும் அதிகாரப் புயல்!


மீரான்வங்கக்கடலில் உருவாகியிருக்கும் புயல் சின்னம் என்ற வார்த்தைகளை வானிலை அறிக்கைகளில் அடிக்கடி கேட்டிருக்கிறோம். இப்போது அங்கிருந்து ஆவேசமாக ஒரு ‘அரசியல் புயல்’ கிளம்பியிருக்கிறது.

மேற்குவங்கத் தேர்தலிலேயே அடையாளம் காணப்பட்ட இந்தப் புயலின் அடையாளங்கள் இப்போது வலுத்துக்கொண்டிருக்கிறது. அண்மையில் நடந்த மேற்குவங்கச் சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்று பா.ஜ.க. தீவிர முயற்சியில் இருந்தது. வெவ்வேறு நாட்களில் தேர்தலை எட்டுக் கட்டங்களாக நடந்த தேர்தல் கமிஷன் அறிவித்திருந்ததை பா.ஜ.க.விற்கான நல் வாய்ப்பாக எடுத்துக்கொண்டு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா பலமுறை மேற்குவங்கத்துக்குப் பிரசாரப் பயணங்களை மேற்கொண்டிருந்தனர்.

பல இடங்களில் பிரசாரத்தில் மோடி இந்தத் தேர்தலில் மக்கள் மம்தாவுக்கு விடை கொடுத்து அனுப்பிவிடுவார்கள். மேற்கு வங்கத்துக்குச் சுதந்திரம் கிடைக்கப் போகிறது என்றெல்லாம் பேசியிருந்தார். ஆனால் தேர்தலில் பா.ஜ.க. கணிசமான இடங்களைப் பெற்றிருந்தாலும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு எண்ணிக்கையைப் பெறவில்லை. மீண்டும் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது.

தேர்தலுக்குப் பின்னர் அண்மையில் மேற்கு வங்க மாநிலம் யாஸ் என்ற புயலால் கடும் தாக்குதலுக்குள்ளானது. மாநில அரசு மத்திய அரசின் உதவியைக் கோரியது. முதல் கட்ட நிவாரணத்தை அறிவித்த மத்திய அரசு புயலால் ஏற்பட்ட சேதம் குறித்து ஆய்வு செய்ய ஓர் ஆய்வுக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. இந்தக் கூட்டத்தில்தான் மோடி - மம்தா அதிகாரப் புயல் உருவானது.

பிரதமர் மோடியை அவமதித்துவிட்டார் மம்தா என்று பா.ஜ.க. தலைவர்களும், மம்தாவைப் பழிவாங்குகிறார் மோடி எனத் திரிணாமுல் காங்கிரசாரும் பரஸ்பரம் குற்றப் பத்திரிகை வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

ஏன் இந்த மோதல்?

மத்திய அரசால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் மேற்குவங்க முதல்வர் மம்தா செயலர்களுடனும் அதிகாரிகளுடனும் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் கூட்டத்திற்கு மேற்குவங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர், மம்தாவைத் தோற்கடித்த பா.ஜ.க. வேட்பாளர் கவேந்து அதிகாரியும் அழைக்கப் பட்டிருந்தார். இவர்கள் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்கப்போகும் விவரம் முதல்வருக்கு முன்னதாகத் தெரிவிக்கப்படவில்லை.

இதனால் கோபமடைந்த மம்தா கூட்டத்துக்கு அரைமணி நேரம் தாமதமாக வந்தார். வந்த வேகத்தில் புயலால் ஏற்பட்ட சேதங்களுக்கான மதிப்பீட்டு அறிக்கையைச் சமர்ப்பித்துவிட்டு பிரதமரிடம் சம்பிரதாயமான வேண்டுகோளை விடுத்துவிட்டு கூட்டத்திலிருந்து வெளியேறிவிட்டார். அவருக்குப் பதில் மேற்குவங்கத் தலைமைச் செயலாளர் அலபன் பண்டோபாத்யா ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

பிரதமர் பங்கேற்ற ஆய்வுக்கூட்டத்திலிருந்து முதல்வர் மம்தா பாதியில் வெளி யேறியதன் மூலம் புயல் சேதம் பற்றி ஆய்வு செய்ய வந்த பிரதமரை மம்தா அவமதித்துவிட்டார் என்று பா.ஜ.க. தலைவர் கள் அறிக்கைகள் கொடுத்தனர். “புயலால் பாதிக்கப்பட்ட மாநிலத்தைச் சீரமைக்கும் காரியத்தைச் செய்யாமல் மரியாதையற்ற அரசியலைச் செய்கிறார் மம்தா” என்று விமர்சித்தார் அமித் ஷா.

“மம்தாவின் செயல் பாரம்பரியமிக்க வங்காள கலாசாரத்துக்கு எதிரானது. வருத்தமளிக்கும் செயல்” என்றார் சுவேந்து அதிகாரி. விஷயம் தேசிய ஊடகங்களில் பலமாக விவாதிக்கப்படும் பேசு பொருளாயிற்று.

மம்தா என்ன சொல்லுகிறார்?

இந்த விமர்சனங்களுக்குப் பதிலாக மம்தா பானர்ஜி காட்டமாக எழுப்பிய கேள்விகளில் முக்கியமானவை.

1. புயல் பாதித்த குஜராத், ஒடிசாவில் நடந்த ஆய்வுக்கூட்டங்களில் மாநில ஆளுநர் பங்கேற்காதபோது மேற்குவங்கத்தில் ஏன் ஆளுநருக்கு அழைப்பு?

2. அங்கே நடந்த ஆய்வுக்கூட்டங்களில் எதிர்க்கட்சியினர் பங்கேற்காதபோது மேற்கு வங்க ஆய்வுக்கூட்டத்தில் பா.ஜ.க.வுக்கு என்ன வேலை?

தேர்தலுக்கு முன்னரும் இம்மாதிரி மம்தா- பிரதமர் பங்கேற்ற கூட்டத்திலிருந்து வெளியேறினார். அதற்கு மேற்குவங்க அரசு நடத்தும் அரசு விழாவில் பா.ஜ.க.வினர் நுழைந்து கட்சி கோஷங்களை எழுப்பியதைக் காரணமாகக் காட்டினார். அதனால் இந்தச் சலசலப்பு சில நாட்களில் முடிந்துவிடும் ஒரு அரசியல் காட்சி என்றுதான் பலரும் கணித்திருந்தனர்.

ஆனால் பிரதமரின் அலுவலகம் மாநிலத் தலைமைச்செயலாளரின் செயலில் அதிருப்தி அடைந்து அவரை உடனடியாக மத்திய அரசுப் பணிக்கு மாற்றியதோடு மட்டுமில்லாமல் இரண்டு நாளில் புதிய பணியில் சேர வேண்டும் என உத்தரவிட்டது. இந்த அதிரடி உத்தரவு நாட்டின் சீனியர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளால் விமர்சிக்கப்பட்டது. இப்படி ஒரு மாநிலத் தலைமைச்செயலாளரை மத்திய அரசுப் பணிக்கு அதிரடியாக மாற்றுவது இதுதான் முதல் முறை.

இதை மத்திய அரசின் பழிவாங்கும் செயல், பா.ஜ.க.வின் பழிவாங்கும் அரசியல் என்று கண்டனம் தெரிவித்த மம்தா, ‘மாநிலம் கொரோனா கால நெருக்கடியில் தவிக்கும் போது தலைமைச்செயலாளரை மத்திய அரசுப் பணிக்கு அனுப்பமுடியாது’ என்று பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினார்.

கடிதத்தை மத்திய அரசு ஏற்கப்போவதில்லை என்று கணித்த மம்தா, தலைமைச் செயலாளர் அலபன் பண்டோபாத்யாவை பணி ஓய்வு பெறச்செய்து, அவரைத் தன்னுடைய தலைமை ஆலோசகராக மூன்றாண்டுகளுக்கு நியமித்துவிட்டார்.

ஆட்டம் ஆரம்பம்

மத்திய அரசு இந்த அதிரடியை எதிர்பார்க்கவில்லை. ஆனால் மாநில அரசு தொடங்கி யிருக்கும் இந்த ஆட்டம் மிகச் சிக்கலானது.மத்திய அரசின் உத்தரவை ஏற்று புதிய பணியில் சேராத அலபன் பண்டோபாத்யா மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு இருக்கிறது. அதன்படி மத்திய அரசு நடவடிக்கையில் இறங்கினால் அது பிரதமருக்கும் மம்தாவுக்குமான அரசியல் அதிகார மோதலாக மட்டும் இருக்கப்போவதில்லை. மத்திய அரசின் இந்தப் போக்கு மாநில சுயாட்சிக்கு எதிரானாதாக தேசிய அளவில் ஒரு பிரச்னைப் புள்ளியாக மாறும் வாய்ப்பும் உண்டு. மாநில சுயாட்சிக்கு ஆபத்து என்ற குரல் பிற மாநிலங்களிடமிருந்து வலுத்து எழும் வாய்ப்பும் அதிகம்.

மாநிலத்தின் புயல் சேதத்தை ஆய்வு செய்ய பிரதமரின் தலைமையில் நடந்த ஒரு கூட்டம் அந்த மாநில நிர்வாக அமைப்பில் சேதத்தை உருவாக்கியிருக்கிறது.உருவாகும் புயல் எல்லாம் கடும் சேதங்களை ஏற்படுத்துவதில்லை. பல புயல்கள் கரையைத் தொடும்போது வலுவிழந்து கடந்திருக்கிறது. இந்த வங்க அதிகாரப் புயல் கடுமையாகத் தாக்கப்போகிறதா? இல்லை கரையைக் கடந்து வெறும் காற்றாகப் போகப் போகிறதா? அறிந்துகொள்ள தேசம் காத்திருக்கு.
Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :