நீரில் பூத்த நெருப்பு!


கிறிஸ்டி நல்லரெத்தினம்ஜூன் 05ம் தேதி சர்வதேசச் சுற்றுச்சூழல் தினமாக வருடாவருடம் 1974ல் இருந்து உலகம் பூராவும் கொண்டாடப்படுகிறது. எனினும் இவ்வருடம் இலங்கைக் கடல் பரப்பில் ஏற்பட்ட ஒரு பெரிய அனர்த்தம் இந்த நன்நாளுக்கு ஒரு கறையைப் பூசிற்று.சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட MV X& Press Pearl எனும் கொள்கலன் கப்பல் துபாயில் இருந்து கத்தாரைத் தொட்டு இந்தியக் கரையின் வழியாக மலேசியாவை நோக்கிப் பயணிக்கும்போது இலங்கையின் கொழும்புத் துறைமுக வாசலை நெருங்கிய கடற்பரப்பில் தீப்பற்றிக் கொண்டது. இக்கப்பல் 1,486 கொள்கலன்களை ஏற்றிவந்த ஒரு அரக்குக் கப்பல். இந்தத் தீ திடீரென ஏற்பட்டதல்ல. அதைப் பார்ப்போம்.

மே மாதம் 11ம் தேதியே இந்தக் கப்பலின் மாலுமிகள் ஒரு கொள்கலத்தில் இருந்து அபாயகரமான விளைவுகளை உண்டாக்கக் கூடிய நைட்ரிக் அமிலக் கசிவைக் கண்டுபிடித் துள்ளனர்.

கப்பலை கத்தார் நாட்டின் ஹமாட் துறை முகத்திலும் இந்தியாவின் குஜராத்தில் அமைந்துள்ள ஹசீரா துறைமுகத்திலும் நிறுத்தி இக்கசிவை நிறுத்தச் செய்ய எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்காமல் போகவே கப்பல் இலங்கையை நோக்கிப் பயணித்தது. இந்தத் துறைமுகங்களில் இந்தக் கசிவை நிறுத்தச் செய்திருந்தால் இப்பெரிய அபாயத்தைத் தவிர்த்திருக்கலாம் என்பது நிபுணர்களின் கணிப்பு.

மே 19ல் இலங்கைக் கடல் பிரதேசத்தில் நுழைந்து கரையிலிருந்து 17.6 கி.மீ. தொலை வில் நங்கூரமிட்ட இக் கப்பலில் 25 டன் நைட்ரிக் அமிலம் உட்பட 81 கொள்கலன்களில் ரசாயனப் பொருள் மற்றும் வெடிமருந்து உற்பத்திக்குத் தேவையான இதர ரசாயனப் பொருட்களும், யூரியா, எத்தனால், பிளாஸ்டிக், அலுமினியத் தாதுப் பொருட் களும் இருந்தன.

மறுநாள் மாலை இப்பெரிய கப்பல் தீப் பற்றிக் கொண்டது. ரசாயன எதிர்வினை தாக்கத்தால் இத் தீ ஆரம்பித்திருக்கலாம் என்பது ஓர் ஊகம். கப்பலிலிருந்த 378 டன் எண்ணெய், தீக்கு மேலும் தீனி போட்டது.

இலங்கைக் கடற்படை கப்பலுக்கு விரைந்து, தீயைக் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சித்தாலும் மே 25ல் கப்பலில் கேட்ட ஒரு பெரிய வெடிப்பொலியும் அகோரத் தீயும் 25 கப்பல் மாலுமிகளின் (இரு இந்தியர் உட்பட) நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. அவர்கள் இலங்கை அரசால் கரைக்குக் கொண்டுவரப்பட்டு சிலருக்கு மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

அன்று மாலை கொள்கலன்கள் கடலுக்குள் சரியத் தொடங்கின. இலங்கையின் கடற்படையின் தீயணைக்கும் படையுடன் இந்தியா தீயணைக்கும் படகுகளும் சேர்ந்து எடுத்த எந்த முயற்சியும் பயனளிக்கவில்லை. கப்பலை சர்வதேசக் கடல் எல்லைக்குள் கட்டி இழுத்துச் செல்லும் முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

இந்தத் தீவிபத்திற்குப் பின்னால் உள்ள மர்மங்களை அறிய விமானத்தின் Black box USக்குச் சமமான Voyage data recorder கண்டெடுக்கப்பட்டு அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டுள்ளது.இக்கப்பலைச் சுற்றியுள்ள இலங்கைக் கடலிலும் கடற்சார்ந்த பகுதிகளிலும் பெரிய சுற்றுச்சூழல் எதிர்விளைவுகளை இனிவரும் பல வருடங்களுக்கு எதிர்பார்க்கலாம் என்பது ஒரு சோகமான செய்தி.

இலங்கை அரசு இப்பிரதேசத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடத் தடை விதித்திருப்பதால் 50 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் தற்போது நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மீன்களின் உடலில் நச்சு கலந்திருக்கும் எனும் அச்சம் ஒருபுறம் நிலவுவதால் அவற்றின் விற்பனையும் பரவலாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

கடற்கரையெங்கும் ஒதுங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளையும் எரிந்து சிதைந்த கொள்கலன்களையும் உருகிய பொருட்களையும் அகற்ற இலங்கை ராணுவம் ஈடுபடுத்தப்பட் டுள்ளது. கரை தட்டிய மீன்களின் கடல் ஆமைகளின் உடல்கள் விஞ்ஞானப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதே வேளை பல உலக நாடுகள் இலங்கைக்கு உதவ உறுதியளித்துள்ளமை ஒரு நல்ல செய்தியே.

இக்கடல் சார்ந்த பிரதேசங்கள் சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கம் என அழைக்கப்படுவதால் ஹோட்டல் உரிமையாளர்கள் இடிந்து போய் உள்ளனர். 2020ல் MT new diamond எனும் பெரிய எண்ணெய்க் கப்பல் குவைத்திலிருந்து இந்தியாவிற்குச் செல்லும் வழியில் இலங்கை யின் தென்கிழக்குக் கடல்பரப்பில் தீப்பற்றி மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து எரிந்தது ஞாபகத்தில் இருக்கலாம்.

கப்பல் உரிமையாளர்களிடம் இருந்து ஒரு பெரிய நஷ்டஈட்டைப் பெறும் முயற்சிகள் ஆரம்பித்துள்ளன.கோடிக்கணக்கில் நஷ்டஈடு கிடைத்தாலும் இயற்கை அன்னையின் இதயத்தில் பற்றிய தீயின் வடுக்கள் ஆற பல வருடங்கள் ஆகும் என்பது உறுதி.


Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :