ஒரு சிறுகதை எழுப்பிய மணியோசை!


பார்கவி குகன்அமெரிக்காவில் பிலடெல்பியா நகரின் நடுவே சுதந்திரப் பூங்காவில் அழகான ஒரு தனி வளாகத்தில் 30 அடி உயரமும், 900 கிலோ எடையும் கொண்ட அந்தப் பிரம்மாண்டமான லிபர்டி பெல் இருக்கிறது. அதன் பின்னே உள்ள கண்ணாடிச்சுவரின் வழியே அமெரிக்க முதல் சட்டமன்றத்தின் பின்னணியில் கம்பீரமாக நிற்கிறது.

ஆண்டுக்கு 10 லட்சம் பேர் வந்து பார்க்கும் இந்த மணிக்கு அமெரிக்கத் தேசியக் கொடிக்கு நிகரான அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது. தபால்தலைகளிலும் நாணயங்களிலும் 100 டாலர் நோட்டிலும் இடம் பெற்றிருக்கும் ஒரு தேசியச் சின்னம். ஆனால் இந்த மணி அடிக்கப்படுவதில்லை. காரணம் அதில் விழுந்த விரிசல். பயன்படுத்தமுடியாமல் பல ஆண்டுகள் ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த இந்த மணி சரித்திரச் சின்னமானது ஒரு எழுத்தாளர் எழுதிய சிறுகதையால்தான்.

அமெரிக்கா, அமெரிக்க ஐக்கிய நாடாக அறிவிக்கப்படும் முன்னரே மக்களாட்சி மலர்ந்தது பென்சில்வேனியா மாநிலத்தில்தான். அதன் தலைநகரான பிலடெல்பியாதான் நாட்டின் தலைநகராக அப்போது அறிவிக்கப்பட்டிருந்தது. அதைச் சிறப்பிக்கப் புதிதாக எழுப்பப்பட்டிருக் கும் சட்டமன்றக் கட்டடக் கோபுரத்தில் ஒரு மணியை நிறுவ விரும்பினார் மாநில கவர்னர்.

லண்டனில் உள்ள மணிகள் தயாரிக்கும் புகழ்பெற்ற டூலெஸ்ட்டர்-பாக் (Lester and Pack) நிறுவனத்தால் (இன்றும் இந்த நிறுவனம் இருக்கிறது.) வடிவமைக்கப்பட்டு 1793ம் ஆண்டு கப்பலில் பிலடெல்பியா வந்த மணி, நகர மக்களால் கோலாகலமாக வரவேற்கப்பட்டது. மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்ட மணி முதன்முறையாக ஒலிப்பதை ஒரு விழாவாகவே கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆவலுடன் காத்திருந்த மக்கள் மணியின் நாதத்தைக் கேட்டு ஏமாற்றமடைந்தனர். அந்த அளவு அது மோசமாகயிருந்தது. அதில் ஒரு சின்ன, மெல்லிய விரிசல் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இங்கிலாந்து நிறுவனம், ‘தவறு எங்களது இல்லை. உங்கள் ஊர் மணியடிப்பவர் சரியாகக் கையாளாததனால் விரிசல் வந்திருக்கலாம். திருப்பி அனுப்புங்கள். சரி செய்து தருகிறோம்’ என்றது. ஆனால் மீண்டும் ஒருமுறை லண்டன் அனுப்பித் திரும்பிப் பெற ஆகும் கப்பல் கட்டணம் மணியின் விலையைவிட அதிகமாக இருந்ததால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

ஆனால் மணியைக் கைவிட மனமில்லாத கவர்னர், உள்ளூர் ஆட்களைவிட்டு சரி செய்ய உத்தரவிட்டார். முன்வந்தனர் இரண்டு இளைஞர்கள். ஜான் சகோதரர்கள் (John Pass and John Stow) இறக்குமதி செய்யப்பட்ட மணியை உருக்கி அந்த உலோகத்தில் ஒரு புதிய மணியை உருவாக்கினர். ‘எல்லா நிலப் பரப்பி லிருக்கும் அனைத்து மக்களுக்கும் சுதந்திரம்’ என்று முன்னே இருந்த வாசகங்களுடன் அவர்கள் பெயரும் அதில் பொறிக்கப்பட்டது.

நம் நாட்டிலேயே தயாரான மணி என்ற பெருமையைப் பெற்ற அந்த மணியைப் பரிசோதித்தபோது அதன் நாதம் பலருக்குத் திருப்தி தரவில்லை. ஆனாலும் கவர்னரின் உத்தரவின் பேரில் மணிமாடத்தில் நிறுவப்பட்டது. முக்கியமான நாட்களில் மட்டும் ஒலிக்கப்பட்ட அந்த மணி ஒருமுறை ஜார்ஜ் வாஷிங்டனின் பிறந்த நாளில் ஒலித்தபோது மாறுபட்டுத் தெரிந்த அதன் ஒலி, மணியில் மீண்டும் ஒரு விரிசல் விழுந்திருப்பதைச் சொல்லியது. மணிமாடத்திலிருந்து கழட்டப் பட்டு ஓரம் கட்டப்பட்டது. சில ஆண்டுகளில் மக்கள் மறந்தே போனார்கள்.

அமெரிக்கச் சுதந்திரப் போர் முடிந்து புதிய நாடும் ஆட்சியும் உருவாகி, மக்களின் உணர்ச்சிகளின் எழுச்சியாக இருந்த காலகட்டத்தில் நிகழ்ந்த சரித்திர நிகழ்வுகளின் அடிப்படையில் பல நாவல்களையும், சிறுகதைகளையும் எழுதியவர் ஜார்ஜ் லிப்பர்ட். 20க்கும் மேற்பட்ட படைப்புகளை உருவாக்கியவர். இன்றும் அமெரிக்க இலக்கியத்தில் மதிக்கப்படுபவர். இவர் 1847ல் எழுதிய ஒரு சிறுகதை ‘ஃபோர்த் ஜூலை 1776’ ` (Fourth of July, 1776),1776), ‘சார்ட்டே ரிவியூ’ பத்திரிகையில் வெளியானது. அந்த மணியை அடிக்க நியமிக்கப்பட்டிருந்தவர் ஓய்வு பெற்றுவிட்டாலும் மணியை மிகவும் நேசித்ததால் அந்தப் பணியைத் தொடர்ந்தார்.

ஜூலை 4, 1776 அமெரிக்க மக்கள் சுதந்திர பிரகடனம் கையெழுத்தாகப்போகும் செய்தியை எதிர்பார்த்திருந்தனர். தன் வாழ்நாளில் நாட்டிற்குச் சுதந்திரம் வந்து அதை இந்த மணியை அடித்துத்தாம் அறிவிக்கமுடியும் என்ற நம்பிக்கையை இழந்திருந்த அந்த வயோதிகரின் பேரன் ஓடிவந்து, “தாத்தா, பிரகடனம் கையெழுத்தாகிவிட்டது” என்று சொன்ன செய்தியில் மகிழ்ந்து வேகமாக அந்த மணியை அடித்து மக்களுக்கு அறிவித்தபின் இறந்து போகிறார் என்பது அந்தக் கதையின் ஒன்லைன்.

‘சார்ட்டே ரிவியூ’வில் வெளியான இந்தக் கதை தொடர்ந்து மற்ற மாநிலச் செய்தித்தாள்களிலும் பத்திரிகையிலும் வெளியானதனால் மிகப் பிரபல மடைந்தது. கதையில் சொல்லப் பட்ட சுதந்திரமணியைப் பார்க்க ஆவலுடன் மற்ற மாநில மக்களும் அங்கு வர ஆரம்பித்தனர்.

பல ஆண்டுகள் பள்ளிப் பாடப் புத்தகங்களி லும் இந்தக் கதை இடம் பெற்றிருந்ததனால் மாணவர்களுக்கும் ஆர்வமான ஒரு விஷயமாகிப் போனது. பார்ப்பவர்களின் வசதிக்காக இந்த மணியைத் தேடிப்பிடித்து தூசி தட்டி மாநில மன்ற வளாகத்தின் தோட்டத்தில், அடிக்க முடியாதபடி அலங்காரத் தூண்களில் காட்சிக்காக வைக்கப்பட்டது.

அடிமை முறையைச் சட்டபூர்வமாக ஒழிப்பது என்பது அந்தக் காலகட்டத்தில் அமெரிக்கா முழுவதும் பேசப்பட்ட விஷயம். அந்தக் குழுவினர் மணியோசை என்பது சுதந்திரத்தின் அடையாளம் எனச் சொல்லி இந்த மணியை அவர்கள் இயக்கத்தின் சின்னமாக அறிவித்து ஆறு குதிரைகள் பூட்டிய வண்டி யில் எடுத்துச்சென்று பல நகரங்களில் பேரணியில் காட்சியாக்கினார்கள்.

மக்களிடம் பிரபலமாகிவிட்ட இந்த உடைந்த மணியை அரசும் அங்கீகரித்து தபால் தலை ஒன்றை வெளியிட்டது. தொடர்ந்து படிப்படியாகப் பல கௌரவங் களைப் பெற்றது, ஓசை எழுப்பாத இந்த உடைந்த மணி. இன்று இதன் மாதிரி வடிவம் அத்தனை அமெரிக்க மாநில மன்றங்கள் முன்னும் நிற்கிறது. நாட்டின் உயரிய விருது பதக்கங்களில், நாணயங்களில் படம் பொறிக் கப்பட்டிருக்கிறது.

பிலடெல்பியாவில் காட்சியகத்தில் காலச் சுவடுகளின் படங்களோடும் ஒலி - ஒளி காட்சிகளோடும் நிறுவப்பட்டிருக்கும் இந்த மணியை சில ஆண்டுகளுக்கு முன் வந்த ஒரு பார்வையாளர், தான் கொண்டுவந்த சுத்தியலால் அடித்துப் பார்க்க முயன்றதால் இப்போது இதற்கு 24/7 காவல் நுழைவாயில் சோதனை, மணியைத் தொடமுடியாதபடியான அமைப்பு எல்லாம். விரிசல் பெரிதாகி விடுகிறதா என மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை எக்ஸ்ரே, விசேஷ ரசாயன பராமரிப்பு, வல்லுநர் சோதனை எனப் பாதுகாக்கிறார்கள்.

நினைவுப் பரிசுகளுக்காக விற்கப்படும் சிறிய மணி, டி-ஷர்ட் வரிசையில் இப்போது மாஸ்க்கும். இதன் மணியோசை எப்படித் தானிருக்கும் என்ற ஆவல் கொண்டவர்களுக்கு உள்ளூர் பல்கலைக்கழக உலோகவியல் பேராசிரியரும் மாணவர்களும் மணியின் அளவுகளிலேயே அதே கீறலுடன் ஒரு மாதிரியைச் செய்து அதில் எழுப்பிய ஒலியைப் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். அதைக் கேட்க முடியும்.

ஜார்ஜ் லிப்பர்ட் எழுதியது உண்மைக் கதை யாக இருக்கமுடியாது என்று ஆராய்ச்சியாளர்கள் பல ஆதாரங்களுடன் இன்றும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்தச் சிறுகதை எழுப்பிய ஓசைதான் இன்று உலகத்தையே இந்த உடைந்த மணியைப் பார்க்க வைத்திருக்கிறது.


Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :