சாதிகள் இல்லையடி பாப்பா!


இரா.பாரதிராஜா
ஓவியம் : தமிழ்ஆரம்பத்தில் வளர்த்த கதிறு மற்றும் ஜாவா இணைந்து முட்டையிட்டு இப்பொழுது ஆறுமுகத்திடம் கதிறு, ஜாவா, யாக்கொத்து, லூரி, பலா, திமிறு என்று பல வண்ணங்களில் சுமார் இருபது சண்டைச்சேவல்கள் மற்றும் பெட்டைகள் சேர்ந்துவிட்டன.

சூளையிலிருந்து செங்கற்களை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு போகும்போதும் வரும்போதும் கோழிகளைப் பற்றிய சிந்தனையிலேயே இருப் பார். சாலையோரம் மேய்ந்து கொண்டிருக்கும் எந்தக் கோழியும் அவர் கவனத்தைத் தன்வசப் படுத்தும். கேட்ட இடத்தில் செங்கற்களை இறக்கி வைத்துவிட்டு மாலையில் வீடு திரும்பும் ஆறுமுகம் தன் வீட்டிலிருந்து நான்கு வீடு தள்ளி தெரு முச்சந்தியில் உள்ள தனது கொட்டகையில் சண்டைக்கோழிகளோடு உயிர்த்திருப்பார்.

தினமும் மாலையில் குறைந்தது இரண்டு மணி நேரமாவது அவற்றோடுதான் பொழுதைக் கழிப்பார். அவற்றிற்குத் தண்ணீர் வைப்பது, கால்களை உருவிவிடுவது; உடலில் தண்ணீர் விட்டு மசாஜ் செய்வது; தண்ணீரில் நீந்தச் செய்வது; சொடுக்குப் போட்டு கோழிகளைச் சுற்றச் செய்வது என்று அவர் கோழிகளின் உலகினில் லயித்துப் போவார். அவற்றோடு இருக்கும்பொழுது ஒருவிதப் பரவசநிலை அவரிடம் ஒட்டிக்கொள்ளும். அக்கோழிகளைத் தன் பிள்ளைகளாகவே நினைத்தவர், அவையிடும் எச்சங்களைக் கையால் வழித்துப்போடவும் தயங்கமாட்டார்.

புதிதாகத் திருமணம் முடித்திருந்த அவரின் மகள் கவிதா, கணவரோடு வீட்டிற்கு விருந்துண்ண வந்திருந்தாள். தன் கணவருக்குக் கோழிக்கறிக் குழம்பு மிகவும் பிடிக்கும் என்று அம்மாவிடம் கூறினாள்.

“அதனாலென்னம்மா, அப்பாவுக்கு போன் பண்ணி, வரும்போது வாங்கிவரச் சொல்றேன்” என்றாள்.

“அதில்லம்மா அவரு கோழிக்குழம்புனா பிரியமா சாப்பிடுவார். நேத்து கொட்டகைக்குப் போனப்ப, பிராய்லர் உடம்புக்கு நல்லதில்ல, ஆனா நாட்டுக்கோழி ருசியா இருக்கும்; உடம்புக் கும் நல்லது, எங்கம்மா சின்ன வயசுல செஞ்சி கொடுத்து சாப்பிட்டதுன்னு ஏக்கமா கோழிய பார்த்துச் சொன்னாரும்மா” என்றாள்.

“இதுவரைக்கும் அதுமாதிரி நாம் யோசிச்சதே இல்லயேடி. அதுக எல்லாம் நம்ம பார்வையில் குஞ்சு பொரிச்சு வளர்ந்ததுங்க. அதான் யோசனையா இருக்கு. அப்பா என்ன சொல்லு வாரோ, ஒரு வார்த்தை போன் பண்ணி கேட்கட்டுமா?” என்று தயங்கினாள்.

“உன் இஷ்டம்மா” என்றவள் அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டாள்.

ஆறுமுகத்தின் மனைவிக்கு மாப்பிள்ளை தன் உறவுக்காரப் பிள்ளை என்பதோடு, நன்கு படித்த அரசு ஊழியர் என்ற நன்மதிப்பிலும் அவர் ஆசைப்பட்டதைச் செய்து கொடுக்க முடிவெடுத்து, ஒரு பெட்டைக்கோழியைப் பிடித்து, சுடுநீரில் அமிழ்த்தி, இறகுகளைப் பிய்த்து, மஞ்சள் தடவி, பொசுக்கி சுத்தம் செய்து குழம்பும் வறுவலும் தயார் செய்து மதிய உணவில் பரிமாறிவிட்டாள்.

வேலை முடிந்து மாலை வீடு திரும்பியவரிடம் விஷயத்தைத் தயங்கித் தயங்கிச் சொன்னாள். மாப்பிள்ளை முன்னிலையில் எதுவும்

சொல்லமுடியாது இடிந்து போய்த் தலையில் கை வைத்துக்கொண்டு குறட்டில் அமர்ந்து கொண்டார் ஆறுமுகம்.

மாலையில் கவிதா கணவரோடு புகுந்த வீட்டிற்குப் புறப்பட்டுச் சென்றதும் வானத்திற்கும் பூமிக்குமாய்க் குதித்தார். இரவு பன்னிரண்டு மணி வரையிலும்கூடக் கொட்டகையில் அமர்ந்து கொண்டு புலம்பிக்கொண்டிருந்தார். ஒருவழியாக அவரைச் சமாதானப்படுத்தித் தூங்க அழைத்து வந்தாள் மனைவி.

உறங்காத இரவைக் கழித்துவிட்டு காலையில் கொட்டகைக்குச் சென்ற ஆறுமுகத்திற்கு அதிர்ச்சி. எந்தக் கூண்டிலும் கோழிகள் இல்லை. அவை அனைத்தும் திருடு போயிருந்தன.

கொட்டகை அருகில் குடியிருந்தவர்கள், “ராத்திரி ஒரு மணி வரைக்கும் முழிச்சிட்டு பேசிட்டுத்தானே இருந்தோம், எப்படி இது நடந்தது?” என்று அங்கலாய்த்தனர்.

பணமோ, பொருளோ திருடு போயிருந்தால் ஆறுமுகம் சமாதானமாகியிருப்பார். பெற்ற பிள்ளைகளைப் போல் வளர்த்தவை. ஒரே இரவில் ஒன்றும் இல்லாமல் போனது அவரை உருக்குலையச் செய்துவிட்டது.

இரண்டு மூன்று நாட்களாக ஆறுமுகம் செங்கல் ஏற்றச் செல்லவில்லை. தொடர்ந்து வந்த அழைப்புகளால் எரிச்சலுற்று, கைப்பேசியை அணைத்துவிட்டுக் கொட்டகையிலேயே அவை விட்டுச்சென்ற எச்சத்தின் வாசனையை நாசியில் ஏற்றிக்கொண்டு படுத்துக் கிடந்தார். “புள்ள மாதிரி பாசமா வளர்த்துட்டு, வளத்த குடும்பமே கொன்னுடுத்துன்னு கோவிச்சிட்டு என்ன விட்டு போயிட்டுதுங்க போல” என்று அடிக்கடி தனக்குத்தானே சொல்லிக் கொண்டார்.

வீட்டில் இருக்கும்போதும் சுவர் ஓரம் உட்கார்ந்து தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு யாரிடமும் பேசாதிருந்தார். அந்தப் பெட்டைக்கோழியைக் கொல்லவில்லை எனில் தன்னுடைய கோழிகள் திருடு போயிருக்காது என்று நம்பினார். ஏதோ ஒரு குற்ற உணர்ச்சியோடே இருந்தார்.ஒரு வாரம் கடந்தும் அவர் மனது நிதானம் கொள்ளவில்லை. உற்ற உறவைப் பறிகொடுத்து அப்பிணத்தைக் கூடத்தில் வைத்துவிட்டு உட்கார்ந்திருக்கும் நிலையில் சூன்யம் பீடித்த விழிகளோடு, அவர் அந்தக் கோழிகள் இல்லாத கூண்டுகளை வெறித்துக் கொண்டிருந்தார்.

அப்பொழுது ஆறுமுகத்தின் தம்பி ரகுபாலன் வந்தார்.“அண்ணே! என் வீட்டுக்கு வா?” என அவசரப்படுத்தினார்.“மனசு சரியில்ல போ, நான் அப்பறம் வரேன்.”

“அண்ணே! நீ கோழிங்க திருடுபோன கஷ்டத்துல இருக்க. நான் மானம் போயி சந்தி சிரிச்சிடுமோன்னு கொல நடுங்கி வந்திருக் கேன். குடும்பத்தோட செத்துத் தொலைஞ்சா லும் தொலைஞ்சுடுவேன்... வாண்ணே!”

வேறு கேள்விகள் கேட்காமல், பக்கத்துத் தெருவில் இருக்கும் தம்பி வீட்டிற்கு நடந்தார். இறுக்கமான முகத்தோடு தம்பி மனைவி கூடத்தில் நின்று கொண்டிருந்தாள். ஆறுமுகம்

சோபாவில் அமர்ந்தார். அவரின் காலுக்குக் கீழ் ஒரு துப்பட்டா கிடக்க, எதிரே தம்பி மகள் கனிமொழி சுருண்டு, வதங்கி ஒரு மூலையில் கிடந்தாள். தலை அவிழ்ந்து கிடந்தது. பட்டினி கிடந்தது போன்ற மெலிந்த உடம்பு. முழங்கை மற்றும் நெற்றியில் ரத்தம் கசிய விம்மிக்கொண் டிருந்தாள்.எதுவும் சொல்லாமலேயே ஆறுமுகத்தால் சூழ்நிலையை யூகிக்க முடிந்தது.

“அண்ணே! அவன் வேற சாதி, அதுவும் கீழ் சாதி. அவனதான் கட்டிக்குவேன்னு பிடிவாதம் பிடிக்கறா! இந்த ஊர்ல, பாட்டன் பூட்டன் காலத்துல இருந்து நமக்கும் நம்ம சாதிக்கும் ஒரு மதிப்பு மரியாதை இருக்கு, என்ன தலகுனிய வைக்கப்பாக்கறா, நீ புத்திமதி சொல்லுண்ணே.”

தம்பி மனைவி, “பொம்பலப் புள்ளய படிக்க அனுப்புனா, இப்டி காதலு அது இதுன்னு வந்து நிக்கறா... நம்ம குடும்பத்துக்கு இதெல்லாம் ஒத்து வருமா? மக்க மனுஷாலுக்குத் தெரிஞ்சா, வெளிய தல காட்ட முடியுமா?” என்றாள்.

சிறிது நேரம் அமைதி காத்த ஆறுமுகம், “கனி விரும்பற பையன் என்ன பண்றான்? நல்ல பையனா? எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லயான்னு, எதாவது விசாரிச்சீங்களா?”

“என்னண்ணே பேசறீங்க? வேற சாதின்னு தெரிஞ்சப்பறம் இந்த எழவல்லாம் ஏன் விசாரிக்கணும். வீட்டுக்குப் பெரியவர் புத்திமதி

சொல்லுவீங்கன்னு பார்த்தா?” என்று கடிந்து கொண்டார்.

“ஏம்மா கனி, பையன் எப்படிம்மா? அன்பா, பாசமா இருக்கானா? அவன கல்யாணம் பண்ணிக்கிட்டா வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்னு முழுசா நம்பறயா?” என்று கேட்டுக் கொண்டிருக்க,

“அண்ணே, நிறுத்துண்ணே! நான் உன்ன எதுக்குக் கூட்டி வந்தேன், நீ என்ன பேசற? அந்தப் பயலுக்குக் கல்யாணம் பண்ணி வச்சி கோழிக்கொழம்பு செஞ்சி விருந்து கொடுத்து மாப்ளன்னு கொண்டாடச் சொல்றயா? கொன்னு போட்ருவேண்ணே. கொழுப் பெடுத்த கழுதயே அப்படியே கழுத்த நெரிச்சி உத்திரத்துல மாட்டிட்டுப் போயிட்டே இருப் பேன்” என்று சொல்லிக்கொண்டே அவள் கழுத்தைப் பிடிக்கப் போனார்.

“கொன்னுடுடா! கொன்னு போட்டுப் போ... அதுக்கப்பறம் என்ன பண்ணுவ? சந்தோஷமா இருந்துடுவியா? ஒவ்வொரு வினாடியும் செத்துச் செத்து ஒரு கட்டத்துல நீ நாண்டுக்கிட்டுச் சாவ... சரி, எந்த உரிமையில் நீ சாகடிப்ப, பெத்ததனாலயா? இல்ல வளத்த உரிமையிலயா? உனக்கு அந்த உரிமை கெடை யாதுடா! நான் கொழந்த மாதிரி வளர்த்த கோழிய அறுத்துக் கொன்னுட்டதால பித்துக் குளி ஆயிட்டன்டா” என்று சொல்லும்போது உடைந்தார்.

“இந்தக் கையால தீனி போட்டு, ஆசையா வளர்த்தவங்களே சொந்த விருப்பத்துக்காகக் கொன்னு பாவியாயிட்டோம். நீயும் பாவம் பண்ணாதே. பெத்து வளர்த்தயா? அத்தோட விடு. யாரோட வாழணும்னு முடிவு பண்ற உரிமை அவளோடது. நடக்க கத்துக் குடு, போக வேண்டிய பாதைய அவ முடிவு பண்ணட்டும்.

என் கதிறு கறுப்பு, ஜாவா மஞ்சள், லூரி வெள்ள, பீலா ஆரஞ்சு, ஆனா? எனக்கு எந்த வித்தியாசமும் இல்ல. ஒசத்தி மட்டம்ற வேத்தும் கெடயாது. அதுங்க எல்லாமே என் புள்ளைங்க தான். அன்போட அதுங்க சுத்திச் சுத்தி வந்துச்

சுங்க. அன்பு போச்சு, அதுகளும் போயிடுச்சிங்க. அன்புதான்பா எல்லாம்” என்றவர் மீண்டும் கலங்கினார்.

“காலம் மாறிப்போச்சுபா! இவ்வளவு நீ அடிச்சும், கனி உறுதியா இருக்கான்னா, அந்தப் பையன் இவ மேல உசிரா இருக்கான்னுதானே அர்த்தம். அத நாம் ஒணர வேணாமா?” என்று சொல்லிக்கொண்டிருக்கையில், கனிமொழி தரையில் கைகளை ஊன்றி தவழ்ந்து வந்து ஆறுமுகத்தின் முழங்கால்களைப் பிடித்துக் கொண்டு,

“அவரு ரொம்ப நல்லவரு பெரியப்பா! அவரு என்ன நல்லா பாத்துப் பாரு. அப்பா அம்மா மேலயும் அன்பா இருப்பாரு” என்று விசும்பினாள்.

ரகுபாலனும் அவர் மனைவியும் கண்களின் ஓரங்களில் நீர் துளிர்க்க நின்று கொண்டிருந்தனர்.

ஆறுமுகம் கனியின் தலையை வருடிக் கொடுத்தார். என்னவோ தன் பெட்டைக் கோழி யைத் தடவிக் கொடுப்பது போல் உணர்ந்தார்.

சற்று நிதானித்துவிட்டு எழுந்தவர், தம்பியின் தோளில் கை வைத்தார். எதிரே சுவரில் மாட்டி யிருந்த அப்பாவின் போட்டோவை ஒரு கணம் பார்த்துவிட்டுச் சொன்னார். “அப்பா செத்தப்றம் தகப்பன் ஸ்தானத்துல இருந்து உன்ன படிக்க வச்சி ஆளாக்கன உரிமையில் மட்டும் சொல்ல

லபா, எனக்கும் ஊரு உலகம், நல்லது கெட்டது எல்லாம் தெரியும்ன்ற காரணத்துலயும் சொல்றன். கனிக்கு அந்தத் தம்பிய பேசி முடி. நம்ம பொண்ணு மகாராணியாட்டம் வாழ்வா. எனக்கு நம்பிக்கையிருக்கு” என்று சொல்லிவிட்டு வெளியேறினார்.

ஆறுமுகம் தனது கொட்டகைக்குச் சென்று மல்லாந்து படுத்தார். அவர் வளர்த்த கோழிகள் தூரத்திலிருந்து கத்திக்கொண்டே ஓடிவந்து, அவரைச் சூழ்ந்து, அவரின் கை, கால், மார்பு, தோள், தலை என எல்லா இடங்களிலும் ஏறிக் குதித்து விளையாடுவது போன்ற பரவச நிலை யில் கண்மூடிக் கிடந்தார்.

அதே வேளையில், ரகுபாலன் கனிமொழி யின் நெற்றியில் வழிந்த ரத்தத்தைத் தன் துண்டால் துடைத்துக்கொண்டிருந்தார். தாய்,

சோற்றைப் பிசைந்து அவளுக்கு ஊட்டிக் கொண்டிருந்தாள்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :